ஃபேர்பிளே பெட்டிங் செயலி மூலம் ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக ஒளிப்பரப்பப்பட்ட புகாரில் நடிகை தமன்னாவுக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஃபேர்பிளே என்பது மகாதேவ் ஆன்லைன் கேமிங் செயலியின் துணை செயலியாகும். இது கிரிக்கெட், சீட்டாட்டம், பேட்மிட்டன், டென்னிஸ் மற்றும் கால்பந்து போன்ற பல்வேறு நேரடி விளையாட்டுகளில் சட்டவிரோதமாக பெட்டிங் செய்வதற்கான செயலியாகும். மகாதேவ் ஆன்லைன் செயலியை துபாயைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் உருவாக்கினர். இவர்கள் இருவரும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த செயலி கடந்தாண்டு முதல் பண மோசடி வழக்கில் சிக்கி தவிக்கிறது. இதனால் ஒரு ஆண்டாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என சிலரின் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதேபோல் இந்த செயலியின் விளம்பரங்களில் நடித்த சில நடிகை, நடிகர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை ஃபேர்பிளே மொபைல் செயலியில் நடிகை தமன்னா சட்ட விரோதமாக ஒளிப்பரப்பு செய்ய உதவியதால், தங்கள் நிறுவணத்திற்கு கோடிக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாகாம் நிறுவனம் புகாரளித்துள்ளது. ஃபேர்பிளே செயலிக்கான விளம்பரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார். மேலும் வியாகாம் நிறுவனம், தமன்னா உட்பட அந்த செயலியின் விளம்பரத்தில் நடித்த அனைவர் மேலும் புகார் அளித்தது.
அந்தவகையில், அந்த செயலில் விளம்பரத்தில் நடித்த நடிகர் சஞ்சய் தத்- ஐ கடந்த 23ம் தேதி ஆஜராகும்படி சைபர் க்ரைம் போலீஸார் சம்மன் அனுப்பினார்கள். ஆனால் அவர், அன்றைய நாளில் தான் இந்தியாவிலேயே இல்லை என்றும், வேறு தேதிக்கு தள்ளிவைக்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து இதுவரை சைபர் க்ரைம் போலீஸார் சஞ்சய் தத் ஆஜராவதற்கான தேதியை கூறவில்லை. அதேபோல், இந்த செயலியின் விளம்பரங்களில் தோன்றிய நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஷர்த்தா கபூர் ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்தனர்.
இதனையடுத்து தற்போது தமன்னாவிற்கும் அடுத்த வாரம் ஏப்ரல் 29ம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து பல முக்கிய நடிகர்கள் இந்த வழக்கில் சிக்கியதால், திரையுலகே அதிர்ச்சியில் உள்ளது.