புராணக் கதையான ராமாயணத்தின் ஒரு பகுதியை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்.’ இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் ஸ்ரீராமனாகவும், சைப் அலி கான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ஓம் ராவத் இயக்கி இருக்கிறார். 3டி தொழில் நுட்பத்துடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் இம்மாதம் 16ம் தேதி வெளியாக உள்ளது.
கடந்த ஆண்டு இந்தப் படத்தின் டீசர் காட்சிகள் வெளியானபோது, அதன் மோசமான கிராபிக்ஸ் காரணமாக சமூக வலைதளங்களில் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளானது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து புதுப்பித்து இருக்கிறது இந்தப் படக் குழு. இதனால் கடந்த ஜனவரி மாதம் வெளியாக இருந்த இந்தத் திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நாடு முழுக்க உள்ள ஆதரவற்ற குழந்தைகளும், ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தைக் கண்டு ரசிக்க, பத்தாயிரம் டிக்கெட்டுகளை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் முன்பதிவு செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
முன்னதாக, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், தெலங்கானாவில் இருக்கும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இலவசமாக இந்தத் திரைப்படத்தைக் கண்டு ரசிக்கும் வகையில் பத்தாயிரம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என்று அறிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.