வெள்ளித்திரை

நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாள்... கடந்து வந்த பாதை!

கல்கி டெஸ்க்

டிகர் விஜய் தனது 49ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த தினத்தில் விஜயின் திரைப் பயணம் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

நடிகர் என்பதைத் தாண்டி தளபதி என ரசிகர்களால் தலைமேல் வைத்து கொண்டாடப்படும் நடிகர் விஜயை, தங்கள் வீட்டுப் பிள்ளையாக, வீட்டிலுள்ள அண்ணனாக திரை ரசிகர்கள் கொண்டாடித்தீர்க்கின்றனர். 27 ஆண்டுகால திரைப்பயணத்தில் நடிகர் விஜய் இந்த சாதனையை எளிதில் எட்டி விடவில்லை.

தந்தையால் சினிமாவில் நுழைந்தவர்

விஜயின் தந்தை இயக்குனர் SA சந்திரசேகர், என்பதனால் முதல் பட வாய்ப்பு விஜய் எளிதாக கிடைத்து விட்டது.1992ம் ஆண்டு ஹீரோவாக விஜய் நடித்த முதல் படமான 'நாளைய தீர்ப்பு' வெளியானது. எதிர்பார்த்த வெற்றியை பெறாத இப்படம், விஜய்யின் நடிப்பின் மீது பல எதிர்மறையான விமர்சனங்களையும் எழுப்பியது. முதல் பட வாய்ப்பு போல முதல் வெற்றி அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்த விஜய் வெற்றிக்காக கடுமையாக போராட தொடங்கினார்.

'செந்தூரபாண்டி', 'ரசிகன்', 'தேவா' என தொடர்ந்து அவரது தந்தையின் இயக்கத்திலே விஜய் தொடர்ந்து நடித்தார். விஜய் எதிர்பார்த்திருந்த வெற்றியை எந்த எந்த திரைப்படங்களுமே கொடுக்கவில்லை. எனினும் மனம் தளராத விஜய் வெற்றிக்காக மேலும் மேலும் தன்னை தயார்படுத்த தொடங்கினர்.

வெள்ளிவிழா கொண்டாட்டம்

1996ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான 'பூவே உனக்காக', இவரை ஒரு இயக்குனரின் மகன் என்பதையும் தாண்டி வெற்றிப்பட நாயகனாக மாற்றியது. வெள்ளி விழா கொண்டாடிய இந்த படம்தான் விஜய்யை ஒரு நடிகராக எல்லோருக்கும் அடையாளம் காட்டியது.

எனினும் இதை தொடர்ந்து விஜய் நடித்த திரைப்படங்கள் மீண்டும் தோல்வி பாதைக்கு அழைத்துச் செல்ல சுதாரித்துக்கொண்ட விஜய் ஆக்ஷன் கதைகளை தவிர்த்து காதல் மற்றும் குடும்ப கதைளில் நடிக்க முடிவெடுத்தார். அதன் பலனாக 'லவ் டுடே', 'ஒன்ஸ் மோர்', 'நேருக்கு நேர்' என தொடர்ந்து இவரது படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து, இவரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாற்றியது. ஃபாசில் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளிவந்த 'காதலுக்கு மரியாதை', வெற்றிப்பட நாயகன் என்ற அந்தஸ்தில் இருந்த விஜய்க்கு 'நல்ல நடிகன்' என்ற பெயரையும் பெற்றுத் தந்தது. இதுவரை அவருள் ஒளிந்திருந்த நடிகனை வெளிக்கொண்டு வந்த அப்படம் மேலும் அவருக்கு முதல்முறையாக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதையும் பெற்றுத்தந்தது. 90களின் இறுதிவரை விஜய் வெற்றியும் தோல்வியுமாக தடுமாறிக் கொண்டே இருந்தாலும் புதிய நூற்றாண்டில் அவருக்கு புதிய விடியல் பிறந்தது. எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகன் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியது.

இதன் பிறகு வெளியான பகவதி தமிழன் உள்ளிட்ட திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தபோது திருமலை திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் அவதாரத்திற்கு மாறினார் விஜய். அதுவரை குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களில் நடித்து வந்த விஜய் தனக்கென துவக்க பாடலுடன் குத்தாட்டம் போட்டு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கினர். இதன் பின்னர் வெளியான 'கில்லி', தமிழ் சினிமாவின் விஜய்யின் முதல் 50 கோடி வசூல் எனும் சாதனையை புரிந்து விஜய்யை வசூல் சக்கரவர்த்தியாக மாற்றியது. படம் முழுக்க துறு துறு இளைஞனாக வலம்வந்த விஜய்யை தங்கள் வீட்டு பிள்ளையாகவே ஏற்றுக்கொண்டார்கள் தமிழ் ரசிகர்கள்.

அரசியல் பேசத் தொடங்கிய விஜய்

கில்லியை தொடர்ந்து திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என பாக்ஸ் ஆபீஸில் பல கமர்ஷியல் வெற்றிகளை ருசித்த விஜய் வசூலில் புதிய உச்சங்களை தொடங்கினார். இதன்பிறகு மாபெரும் ரசிகர் கூட்டத்தை தன் வசப்படுத்திய விஜய்யின் சுட்டு விரல் அசைவிற்கு கோடி விசில் விண்ணை முட்டும் என்ற நிலை உருவானது. இதன் பின்னர் அவரை சுற்றி அரசியலும் சுழல தொடங்கியது. ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டின் போதும் விஜய் சுற்றி அரசியல் மேகம் சூழ தொடங்கியது காவலன் திரைப்படத்தில் இருந்து படத்தின் வெளியீட்டின்போது படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகளை அடுத்து அப்போதைய திமுக ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி அடைந்த விஜய், அடுத்து வந்த 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை கையிலெடுத்தார்.

இதன் பின்னர் அதிமுக ஆட்சி காலத்திலும் தலைவா திரைப்படத்திற்காக நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய விஜய்க்கு சூழல் ஏற்பட்டது. இலங்கை பிரச்சனை, மருத்துவ மாணவி அனிதா தற்கொலை என அனைத்து விவகாரங்களிலும் குரல் கொடுக்கும் நடிகர் விஜய் மீது அரசியல் வாதிகளின் கவனமும் குவிய மெர்சல், சர்க்கார் என தனது திரைப்படங்களில் இசை வெளியீட்டு விழாக்களில் அரசியல் பேசி மேலும் பரபரப்பை கூட்டி வருகிறார் நடிகர் விஜய். மெர்சல் சர்க்கார் என விஜய் நடிக்கும் திரைப்படங்களும் அடுத்தடுத்து அரசியல்வாதிகளின் பெரும் எதிர்வினைகளை சந்தித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் தன் கடின உழைப்பால் தவிர்க்கமுடியாத நடிகர் ஆகிவிட்ட நடிகர் விஜய் தனது 30 ஆண்டுகால திரைவாழ்க்கையில் 67 திரைப்படங்களில் நடித்து சரி பாதிக்கும் மேலாக வெற்றித் திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்கி கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். துப்பாக்கி, மெர்சல் சர்க்கார், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட 8 திரைப்படங்களில் 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டியும், பிகில், திரைப்படத்தின் மூலம் 300 கோடி வசூல் என்ற புதிய உச்சத்தையும் எட்டியுள்ள நடிகர் விஜய் நடிப்பில் 67வது திரைப்படமாக லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

SCROLL FOR NEXT