முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் வலம் வந்தார். ஆண்டுக்கு ஒரு படம் நடித்தாலும் ஹிட் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்தார். இவரின் படங்களுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி என்றாலும் கூட இவர் இனி சினிமாவில் நடிக்கபோவதில்லை என்று அறிவித்தது ரசிகர்களுக்கு பேரிடியாய் விழுந்தது.
இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தப்படி தமிழக வெற்றி கழகம் உருவாக்கி, இனி முழு நேர அரசியல் பணிகளை செய்வதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்த பேச்சுக்கள் வெளியானது. அதில் அவர் தூத்துக்குடியும், நாகையும் குறிவைத்துள்ளதாக தெரிகிறது. நடிகர் விஜய் தூத்துக்குடியை தேர்வு செய்வதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
அவரது ஆரம்ப நாட்களில் இருந்தே, தூத்துக்குடியில் செல்வாக்கு அதிகம் கொண்ட நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் விஜய். அதுமட்டுமின்றி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை நள்ளிரவில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, நிதி உதவியையும் வழங்கினார். அதன்பிறகு, தூத்துக்குடி, நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்கினார். இதுபோன்று பல்வேறு நிகழ்வுகளில் தூத்துக்குடியோடு தன்னை தொடர்புபடுத்திக் கொண்டு வருவதால், அங்கு அதிகரித்து வரும் செல்வாக்கே, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை விஜய் குறிவைக்க முக்கிய காரணம்.
தூத்துக்குடியைப் போலவே நாகையிலும் கவனம் செலுத்தி வரும் விஜய், 2011ஆம் ஆண்டு மீனவர்களுக்கு ஆதரவாக நாகப்பட்டினத்தில் போராட்டமும் நடத்தினார். இலங்கை கடற்படையால் அப்போது 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டத்தை கடுமையாக சாடிய விஜயின் அந்த பேச்சு, அப்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாகவே இருந்தது. அவரின் இந்த ஆவேசமான பேச்சு மீனவ சமுதாய மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால், இந்த தொகுதியும் தனக்கு சாதகமாக இருக்கும் என கருதுகிறார் விஜய். எனவே, கடைசி நேரத்தில் சூழலுக்கு ஏற்றவாறு இரண்டில் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என முடிவு செய்துள்ள விஜய், தென்மண்டலத்தை வலுப்படுத்தவும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அதற்கு முதற்கட்டமாக, கட்சியின் முதல் மாநாட்டை தூத்துக்குடி, நெல்லை அல்லது மதுரையில் நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் தமிழக வெற்றி கழகம் தென் மண்டலத்தில் வலுவாகும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.