சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த மூன்றாம் தேதி ரிலீசான, அரண்மனை 4 திரைப்படம், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சமீப காலமாகவே ரீ-ரிலீஸ், மற்ற மொழிப் படங்கள் மட்டுமே ஹிட் அடித்து வரும் நிலையில், தற்போது அரண்மனை 4 படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர். சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த மூன்றாம் தேதி ரிலீஸானது அரண்மனை 4. இதில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகிபாபு, VTV கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதற்கு முன்பு வெளியான அரண்மனை படத்தின் மற்ற பாகங்களை விடவும் இந்தப் படம் அருமையாக வந்திருப்பதாக ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களைக் கூறி வருகின்றனர். இப்படி விமர்சன ரீதியாக பட்டையை கிளப்பிவரும் அரண்மனை 4 திரைப்படம் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. 90களில் ஆரம்பித்த இவரது இயக்குநர் பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கும் சுந்தர்.சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீப காலமாகவே பழைய சுந்தர்.சி எங்கே சென்றார், அன்பே சிவம் போன்ற படங்கள் ஏன் எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
விஜய் ஆண்டனியும் தன்னுடைய படத்தை அன்பே சிவம் மாதிரி ஆக்கிவிடாதீர்கள் என்று கூட கூறியிருந்தார். பலருக்கும் அன்பே சிவம் திரைப்படம் சுந்தர்.சி தன் எடுத்திருக்கிறார் என்று தெரியாது. இதைத் தெரிந்த பலரும் பழைய சுந்தர்.சி வேண்டுமென கேட்டு வருகின்றனர். இதற்கு பதிலளித்த சுந்தர்.சி காட்டமாக தனது வெறுப்பை கொட்டினார். நல்ல படம் எடுத்தபோது அதைக் கொண்டாடத் தவறிய ரசிகர்கள், இப்போது மட்டும் ஏன் கேட்கிறார்கள் என கொந்தளித்தார்.
இயக்குநராக இருந்த சுந்தர்.சி நடிப்பின் பக்கமும் சென்றார். அந்த வகையில் அவர் நடித்த ‘தலைநகரம்’ உள்ளிட்ட படங்களும் ஹிட்டடித்திருக்கின்றன. இருந்தாலும் அவர் தொடர்ந்து படங்கள் இயக்க வேண்டும் என்று சினிமா ரசிகர்கள் கூறிக்கொண்டிருந்தனர். அதனையடுத்து சில காலம் கழித்து ‘கலகலப்பு’ படம் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்தார் சுந்தர்.சி. அந்தப் படம் மெகா ஹிட்டானது.
தொடர்ந்து அவர் கையிலெடுத்த படம்தான் அரண்மனை. முதல் பாகம் நல்ல வெற்றி பெற, அடுத்தடுத்து 2, 3 பாகங்களை எடுத்தார். ஆனால், அவை அந்த அளவிற்கு வெற்றியை தரவில்லை என்றாலும் 4ம் பாகத்தையும் உறுதியுடன் எடுத்தார். இந்தப் படம்தான் கடந்த 3ம் தேதி ரிலீசானது. முதல் நாளிலேயே 4.65 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், தற்போது வரை இந்த படம் தியேட்டர்களில் ஓடி கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. கடந்து சில வாரங்களாக தமிழ் சினிமா படங்கள் அதிக வசூலை குவிக்காத நிலையில் அதனை அரண்மனை 4 மாற்றி உள்ளது.
இந்த நிலையில் இரண்டு வாரத்தில் அரண்மனை 4 திரைப்படத்தின் வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளன. அதாவது படம் வெளியாகிய 18 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அரண்மனை 4 வசூலித்துள்ளது. இந்த வசூலால் தமிழ் சினிமா மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களில் வெளிவந்த எந்த தமிழ் படமும் ரூ.100 கோடி வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான மலையாள படங்களான மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் பிரேமலு ஆகிய படங்கள் தான் ரூ.100 கோடி வசூலை தாண்டியது.