பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் நான் கடவுள் படத்தின் ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
‘சொல்லாமலே’, ‘வானத்தைப் போல’, ‘ஆனந்தம்,’ சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘இரவின் நிழல்’, ‘என் சுவாசக்காற்றே’, ‘நான் கடவுள்’, லேட்டஸ்ட் ஹிட்டான ‘கருடன்’ வரை 28 வருடங்களில் 35 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஆர்தர் வில்சன்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துக்கொண்டு தனது அனுபவம் குறித்து பேசினார்.” இளையராஜா சாரின் பாடல்களைப் படமாக்குவது நமக்கு பெரும் சவால். ‘நான் கடவுள் பின்னணி இசைக் கோர்ப்பு நடந்தபோது, ‘எதுக்கெடுத்தாலும் என்னைத் திட்டிக்கிட்டே இருக்காரு. அதனால நீங்க போங்க வில்சன்’ என்று பாலா என்னை அனுப்பி வைத்தார். அப்படத்தின் பல காட்சிகளை ராஜா சார் பாராட்டியபோது நெகிழ்ந்துதான் போனேன். பாலா குறித்து பலரும் விதவிதமாக விமர்சிக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை அவரைப்போல் ஒரு அர்ப்பணிப்பான இயக்குநரைக் காண்பது அரிது. ரிஸ்க் எடுப்பதில் அவருக்கு இணை யாரும் இல்லை. நான் கடவுள் துவங்கிய சமயம். அலஹாபாத்தில் ஒரு முக்கியமான கும்பமேளா நடக்கவிருந்தது. அங்கே போனால் ஒரிஜினல் அகோரிகளைப் படம் பிடிக்கலாம் என்று கேள்விப்பட்டவர் சிறிய அளவில் படப்பிடிப்பு குழுவினரை அழைத்துப்போனார்.
உள்ளூர் சாமியார் ஒருவரை கன்வின்ஸ் செய்து ஒரிஜினல் அகோரிகளுக்கு மத்தியில் உடம்பு முழுக்க சாம்பலைப் பூசிக்கொண்டு ஆர்யாவையும் கூட்டத்தில் நடக்கவிட்டுப் படம் பிடித்துக்கொண்டிருந்தோம். சில நிமிடங்களில் ஆர்யா வேற்று மதத்துக்காரர் என்பது அந்த அகோரிகளுக்குத் தெரிந்துவிட்டது.
உடனே பெரும் களவரமாகி மைக்கில் அறிவிக்கத் தொடங்கிவிட்டார்கள். எங்களுக்கு உதவிய உள்ளூர் சாமியாருக்கு ரத்தக்காயங்கள் வருமளவுக்கு அடி உதை. சுதாரித்துக்கொண்ட ஆர்யாவும் நாங்களும் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டோம். அன்று நாங்கள் சிக்கியிருந்தால் கொலைகள்கூட நடந்திருக்கலாம். அந்த அகோரிகள் கொலை செய்தால் அது குற்றக் கணக்கிலே கூட வராது என்று பின்னர் தெரிந்துகொண்டபோது உடல் சிலிர்த்தது.” என்று சொல்லி நெகிழ்ந்துப் போனார்.