வெள்ளித்திரை

எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'கோடித் துணி' சிறுகதை திரைப்படமாகிறது!

லதானந்த்

புகழ்பெற்ற தமிழாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள் முருகனின் ‘கோடித் துணி’ என்கிற சிறுகதை திரைப்படமாகத் தயாராகிறது.

பிரபல கொங்கு வட்டார எழுத்தாளர் பெருமாள் முருகன், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியைச் சேர்ந்தவர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 

நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், திறனாய்வுகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல தளங்களிலும் தீவிரமாக இயங்கிவருபவர்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தமது படைப்புகளில் அடிக்கடி கையாண்டு வருபவர். இலக்கியத் தரம் வாய்ந்த படைப்புகள் எனக் கொண்டாடப்படும் அதே வேளையில் இவரது கருத்துக்கள் பலவும் சர்ச்சையைக் கிளப்பியும் உள்ளன.

இவருக்கெதிராகச் சில அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றன. இவரது குறிப்பிட்ட சில படைப்புகளைத் தடைசெய்யவேண்டும் எனவும் அடிக்கடி பிரச்னைகள் எழுவதும் உண்டு.

பெருமாள் முருகனின் ”கோடித் துணி” சிறுகதையை நடிகரும் பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்கள். படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஞ்ஜோய் சாமுவேல் இப்படத்தில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்,

படத்திற்கான முதல் கட்டப் பணிகள், ஃபிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட நிலையில், மார்ச் மாத இறுதியில் இந்த படத்தின் அடுத்தகட்டப் பணிகள் துவங்க இருக்கின்றன.

தாங்கள் தயாரிக்கும் முதல் படத்திற்கே எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகப் படத்தின் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT