bairi movie director John Glady interview 
வெள்ளித்திரை

"புறா பந்தயத்தால் வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம்" - பைரி இயக்குநர் 'ஜான் கிளாடி' நேர்காணல்!

ராகவ்குமார்

இந்த வாரம் வெளியான படங்களில் மாறுபட்ட படமாகவும், புறா பந்தயத்திற்குள் இருக்கும் வாழ்வியலை சித்தரிக்கும் படமாகவும் உள்ளது 'பைரி'. இப்படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியின் வாயிலாக வெளிச்சம் பெற்றவர். அவர் நமது கல்கி ஆன்லைன் இதழுக்காக அளித்த பேட்டியிலிருந்து...

புறா பந்தயத்தைப் பின்புலமாகக் கொண்டு கதை களம் அமைக்கும் எண்ணம் எப்படி எழுந்தது?

நான் பிறந்து வளர்ந்த கன்னியாகுமரி மாவட்டம்தான் காரணம். எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. புறா பந்தயம் என்பது இங்கே பலரின் வாழ்வியலோடு இணைந்த ஒரு விஷயம். எனவே, தமிழ் சினிமாவில் அதிகம் பதிவு செய்யாத கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் புறா பந்தயத்தைக் காட்ட நினைத்தேன்

bairi movie

இது போன்ற பந்தயங்களில் நீங்கள் பார்த்து வியந்த விஷயம் எது?

புறாக்கள் பற்றி வியப்பதற்குப் பல விஷயங்கள் உள்ளன. புறாக்களுக்கு நாம் எஜமானனாக இருந்தாலும் அவை சுதந்திர உணர்வு கொண்டவை. ஒவ்வொரு புறாவும் ஒவ்வொரு விதமாக பறக்கும் தன்மை கொண்டது. ஆனால் இருபது மணி நேரம் தொடர்ந்து பறக்கும் புறா மட்டும்தான் போட்டியில் நுழைய முடியும். இப்படி பல ஆச்சரியங்கள் புறாக்களைப் பற்றியும் புறா பந்தயத்தைப் பற்றியும் உள்ளன

bairi movie

புறா பந்தயத்தால் பலரின் வாழ்க்கை திசை மாறிப் போவதாக காட்டி உள்ளீர்கள். இது உண்மையா?

உண்மைதான். ஒருவர் போதை மருந்துகளுக்கு அடிமையானால் எப்படி வெளிவருவது கடினமோ அதேபோல இந்த புறா பந்தயத்திற்கு அடிமையானவர்கள் மீண்டு வருவது கடினம். புறா பந்தயத்திற்குப் புறாக்களை வளர்ப்பதும், பறக்க விடுவதும் ஒரு போதை போன்றதுதான். இதன் காரணமாக, புறா பந்தயம் பலரின் வாழ்க்கையை அழித்துள்ளது என்பது உண்மை.

படத்தில் பல காட்சிகளில் காமராஜர் புகைப்படம் வருகிறதே? இது ஒரு சமூகத்தைக் குறிக்கும் அடையாளமா?

கன்னியாகுமரி பகுதியில் உள்ள காங்கிரசார் வீடுகளிலும், இன்னும் பலரது வீடுகளிலும் காமராஜர் அய்யா படத்தைப் பார்க்க முடியும். நான் படத்தில் சிவாஜி-பிரபு புகைப்படத்தையும் காட்டி இருப்பேன். எனது உறவினர் ஒருவர் சிவாஜி ரசிகர் மன்ற பொறுப்பில் இருந்தார். நான் வாழ்ந்த பகுதியில் இருந்த வீட்டுகளில் சுமார் 150 வீடுகளில் சிவாஜி கணேசன் அவர்களின் படம் இருக்கும். மேலும், பிரபு சார் சினிமாவில் அறிமுகம் ஆனபோது இங்கே மிகப்பெரிய கொண்டாட்டமாக வரவேற்றார்கள். சிவாஜி-பிரபு மீது அளவுகடந்த பிரியம் வைத்துள்ள பலரை, என் சிறு வயதில் இங்கு பார்த்துள்ளேன். இந்தப் பிரியத்தை வெளிப்படுத்த புகைப்படங்களாக வீட்டில் வைத்து அழகு பார்ப்பார்கள் இங்குள்ள மக்கள்.

bairi director John Glady

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போல உங்கள் படத்திலும் சில குறியீடுகளையும், அடையாளங்களையும் சொல்லி உள்ளீர்கள். ஏன்?

மற்றவர்களைப் பற்றி நான் சொல்ல முடியாது. தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் மற்ற மாவட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளது. உணவு, மொழி ஆகியவற்றிற்கு இங்கே தனி அடையாளம் உள்ளது. இதை என் படத்தில் பதிவு செய்ய நினைத்தேன். இது ஜாதீய அடையாளம் அல்ல.

அய்யா வைகுண்டர் பற்றி சொன்னது ஏன்?

அய்யா வைகுண்டர் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை நாம் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாது. அய்யா வைகுண்டர் உருவாக்கிய அய்யா வழி என்ற மார்கத்தை இன்று பல இடங்களில் பின்பற்றுகிறார்கள். ஜாதி ஒழிப்புக்கு இந்தியாவின் தென்கோடியில் இருந்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் குரல் கொடுத்தவர் அய்யா வைகுண்டர்.

ரமேஷ் பண்ணனையார் என்ற கேரக்டரை மறைந்த ஒரு பண்ணையார் ஒருவரை மனதில் வைத்து உருவாக்கினீர்களா?

இல்லை. இந்த கேரக்டர் பண்ணையாராக நடித்த ரமேஷ் ஆறுமுகத்தை மனதில் வைத்து உருவாக்கியதுதான். எங்கள் நாகர்கோவில் பகுதியில் அதிக நிலம் வைத்திருப்பவர்களை முன்பு பண்ணையார் என்று அழைப்பார்கள். இப்படத்தில் பண்ணையாராக நடித்த ரமேஷ் ஆறுமுகத்தின் முன்னோர்கள் பண்ணையாராக இருந்து புறா பந்தயம் நடத்தியவர்கள். இந்தப் பரம்பரையில் வந்த ஆறுமுகத்தையே ரியல் கேரக்டரில் நடிக்க வைத்தேன்.

bairi director John Glady

உங்கள் முதல் படம் உங்களின் மண் சார்ந்த களத்தில் தந்து விட்டீர்கள். உங்கள் அடுத்த படம் எந்தக் களத்தில் இருக்கும்?

எனது அடுத்த படம் 'ஃபீல் குட்' படமாக இருக்கும். காதல் படமாகவும் இருக்கலாம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT