காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பது தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதித்திருப்பவர் நடிகர் சூரி. விரைவில் இவர் நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அவர் நடித்ததில் சிறந்த படம் எது என்பதை தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிய நடிகர்களில் சூரியும் ஒருவர். இவர் ஹீரோவாக அறிமுகமான விடுதலை1 ரசிகர்களிடையே மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று, வெற்றிப் படமாக அமைந்தது. அதற்குப் பிறகு வெளியான கருடன் திரைப்படமும் நல்ல வசூலை எடுத்து வெற்றி அடைந்தது. இத்திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலமாக இனி காமெடிக்கான வாய்ப்பை விட ஹீரோ வாய்ப்பு தான் சூரிக்கு அதிகமாக வரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது சூரி நடிப்பில் கொட்டுக்காளி என்றத் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. ஹீரோவாக இரண்டு படங்கள் வெற்றி பெற்றதையடுத்து, ஹாட்ரிக் வெற்றியைக் கொடுப்பாரா சூரி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனுக்குச் சொந்தமான எஸ்கே ப்ரொடக்ஸ்சன்ஸ் கொட்டுக்காளி திரைப்படத்தைத் தயாரிக்க, பி.எஸ்.வினோத்ராஜ் இயக்குகிறார். ஏற்கனவே இவர் கூழாங்கல் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் நேரடி ஓடிடி ரிலீஸாக வெளிவந்து, ரசிகர்களைக் கவர்ந்தது மட்டுமின்றி பல விருதுகளையும் வென்றது. அதே போல், கொட்டுக்காளி திரைப்படமும் ரிலீஸூக்கு முன்பே சில சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. இதனால் இப்படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் தனக்கு அமைந்ததில் மிகவும் சிறந்த திரைப்படம் எது என்பது குறித்த தகவலை நடிகர் சூரி தெரிவித்துள்ளார். “ஒரு காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக நான் மாறியதற்கு முக்கிய காரணமே ரசிகர்கள் மட்டும் தான். ஒரு நடிகனாக எனக்கு மிகவும் சிறந்த கதைக்களத்தை அமைத்துக் கொடுத்தது கொட்டுக்காளி திரைப்படம் தான். இப்படியொரு கதைக்களங்களில் நடிக்கவே நான் ஆசைப்பட்டேன். கொட்டுக்காளி மூலம் எனது ஆசை நிறைவேறியுள்ளது. இப்படம் ரசிகர்கள் அனைவருக்கும் நிச்சயமாக ஒரு புதுவிதமான அனுபவத்தை அளிக்கும்,” என சூரி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 23 இல் கொட்டுக்காளி திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இத்திரைப்படத்தின் நாயகியாக நடித்துள்ள அன்னா பென்னுக்கு இது தமிழில் முதல் திரைப்படம். படத்தின் கதாநாயகி கூறுகையில், “இயக்குநர் கொட்டுக்காளி திரைப்படத்தின் கதையைச் சொல்லும் போதே அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளதைக் கவனித்தேன். இப்படத்தில் நான் மிகவும் பிடிவாதக்காரப் பெண்ணாக நடித்துள்ளேன். எனக்கு அதிகமாக வசனங்கள் இல்லாவிட்டாலும், புதிதாகவும் சவாலான ஒன்றாகவும் இருந்தது,” எனத் தெரிவித்துள்ளார்.
சூரியின் கொட்டுக்காளி திரைப்படத்திற்கு அடுத்து, விடுதலை 2 திரைப்படமும் வெளியாக இருப்பதால் முழுநேர கதாநாயகனாகவே மாறி விட்டார் சூரி. ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பிறகு, அவரது நடிப்புத் திறனும் மேம்பட்டுள்ளது. கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகவே இதனை அவர் பார்க்கிறார்.