Kaadhal Oviyam Hero Kannan
Kaadhal Oviyam Hero Kannan Touring Talkies
வெள்ளித்திரை

பாரதிராஜா தோல்வி பட ஹீரோ இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

ப்ரியா பார்த்தசாரதி

'பதினாறு வயதினிலே' படம் தொடங்கி, சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், நிறம் மாறாத பூக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, நிழல்கள் என தொடர் வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. திரை உலகுக்கு இவர் அறிமுகம் செய்த பல ஹீரோக்கள், ஹீரோயின்கள் இன்று வரை வெற்றிகரமாக வலம் வருகிறார்கள். ஆனால், யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல, பாரதிராஜா இயக்கிய ஒரு படம் பெரும் தோல்வியைத் தழுவியது. இத்தனைக்கும் அந்தப் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மெகா ஹிட் ரகத்தைச் சேர்ந்தவை. இசைஞானி இளையராஜாவின் மகுடத்தில் வைரக்கற்கள் அந்தப் படத்தின் பாடல்கள். இருந்தும் பெரும் தோல்வியை சந்தித்த அந்தப் படம் 1982ம் வருடம் வெளிவந்த, 'காதல் ஓவியம்'. அந்தப் படத்தில் நாயகியாக ராதாவும், நாயகனாக புதுமுக நடிகர் கண்ணனும் நடித்திருந்தனர்.

கண் பார்வையற்ற இளைஞனாக நடித்த கண்ணன், அந்தப் படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இருந்தும், ரசிகர்கள் இவரை கதாநாயகனாக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் படத்தின் தோல்விக்கு பெரும் காரணமாக இந்த நடிகரையே சுட்டிக் காட்டினர் திரை விமர்சகர்கள். இந்தப் படத்துக்குப் பிறகு நடிகர் கண்ணன் திரை உலகிலிருந்து காணாமலே போய் விட்டார் என்றே சொல்லலாம். ஆனாலும், இந்தப் படத்தின் பாடல்கள் இன்றளவிலும் பிரபலமாக இருப்பதால் கண்ணனின் முகம் இன்றும் எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கிறது. கண் முழி மேல் நோக்கியவாறு இவர் நடித்த 'பூவில் வண்டு' பாடல் இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது.

நடிகர் கண்ணன் என்ன ஆனார் என்று எவருக்கும் தெரியாத வேளையில், இவர் இப்போது ஒரு பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், தான் 'சிந்தி' இனத்தைச் சார்ந்தவர் என்றும், தனது இயற்பெயர் சுனில் கிருபளானி என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு 1947ல் அகதிகளாக வந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். பெங்காலி படத்தில் நடிக்க வாய்ப்பு தேடியபோது, அதிர்ஷ்டவசமாக கிடைத்த வாய்ப்புதான், ‘காதல் ஓவியம்’ படம் என்றும் அவர் கூறியுள்ளார். தற்சமயம் அமெரிக்காவில் வசித்து வரும் இவர், அந்தப் படத் தோல்வியினால் மிகவும் பாதிப்படைந்ததாகக் கூறியுள்ளார்.

60 வயதைக் கடந்த நிலையிலும் பார்க்க ஸ்மார்ட்டாக தெரியும் சுனில், 40 வருடங்களுக்கு முன் காதல் ஓவியம் படத்தில் நடித்தபோது அழகான தோற்றம் உள்ளவராக இருந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. எனினும், கண் பார்வையற்றவராக நடிக்க வேண்டி இருந்ததால் பொலிவில்லாத ஒரு தோற்றத்துடன் அந்தப் படத்தில் காட்சி அளிப்பார். மேலும், அவர் கண் முழியை மேல் நோக்கியவண்ணம் வைத்திருந்ததால் பார்க்க சிறிது அச்சம் ஏற்படுத்தும் விதமாக இருந்ததே அந்தப் படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது எனவும் சொல்லலாம்.

திரைப்பட ரசிகர்களுக்கு இவரை இத்தனை வருடம் கழித்து பார்க்கக் கிடைத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘சங்கீத ஜாதி முல்லை’ என்றும் மணக்கும்தானே!

துடுப்பற்ற படகு பயணம் போலாகும் இலக்கற்ற வாழ்க்கை!

எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!

இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!

Kitchen Queen's tips: சமையலில் ராணியாக சில சமையல் குறிப்புகள்!

பசுவிற்கு ஏன் அகத்திக்கீரை கொடுக்கிறார்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT