நாடு முழுவதும் 50 திரையரங்குகளை மூடப்போவதாக பிவிஆர் சினிமா நிறுவனம் அறிவித்தது பாலிவுட்டை உலுக்கியிருக்கிறது. 333 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக அடுத்து வரும் ஆறு மாதங்களில் படிப்படியாக 50 திரையரங்ககுளை மூடிவிடப்போவதாக பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
கொரானா தொற்று பரவலின் காரணமாக பாதிக்கப்பட்ட துறைகளில் முக்கியமானது, திரையரங்குகள். ஓடிடி தளங்கள் உள்ளிட்ட புதிய வாய்ப்புகள் காரணமாக ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின. ஆனால், திரையரங்குகளில் அனைத்து படங்களும் வெளியாகாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் திரையரங்குகளின் நிலைமை தலைகீழாக மாறிப்போனதற்கு ஓ.டி.டி தளங்களின் அசுர வளர்ச்சிதான் காரணம்.
கொரானா ஊரடங்கின்போதுதான் ஓ.டி.டி தளங்களுக்கான அறிமுகம் கிடைத்தது. 2021 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீத வளர்ச்சி பெற்று வருகின்றன. இரண்டே ஆண்டில் 424 மில்லியன் வாடிக்கையாளர்களை ஓ.டி.டி தளங்கள் சென்றடைந்துவிட்டன. இன்று ஓ.டி.டியில் ஏராளமான படங்கள் நேரடியாகவே வெளியாகின்றன. பல்வேறு மொழிகளைச் சேர்ந்த மக்களாலும் ரசித்து பார்க்கப்படுகிறது.
திரையரங்கு அனுபவம் என்பது முக்கியமானது என்றால் அதை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்ய திரையரங்க உரிமையாளர்கள் தவறிவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளுக்கு கூட்டம் வரும் என்கிற நிலைமை முன்பு இருந்தது. ஆனால், நல்லதொரு திரையரங்க அனுபவம் கிடைத்தால் வார இறுதிகளில் திரையரங்குகளுக்கு வர மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
2019 தொடங்கி பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறைந்து வரும் நிலையை பார்க்க முடிகிறது. ஏறக்குறைய 17 சதவீத வருவாய் குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள். பாலிவுட் சினிமாக்களுக்கு இணையாக தென்னிந்திய படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ஒரே மாதத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிவிடுவதால், பெரும்பாலான மக்கள் திரையரங்குகளுக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை. பெரிய ஹிரோ, பெரிய இயக்குநர் படங்களை மட்டுமே ரசிப்பதற்காக மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். அதிலும் 30 வயதுக்குட்டபவர்கள் மட்டுமே திரையரங்கில் காண விருப்பம் தெரிவிக்கிறார்கள்.
2022ல் திரையரங்குகளைத் தேடி மக்கள் வந்தாலும், 2019 ஆண்டோடு ஒப்பிடும்போது நிச்சயமாக குறைவுதான். பல திரையரங்குகளின் ஒலி, ஒளி அமைப்புகளை மேம்படுதத வேண்டியிருந்தது. பார்க்கிங் முதல் பாப்கார்னுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் வரை ஒவ்வொன்றும் திரையரங்கிற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பாதிக்கிறது.
நாடு முழுவதும் திரைப்பட விழாக்களை நடத்துவது, இந்தியா முழுவதும் வரவேற்பு பெறக்கூடிய கதைக்களங்கள் கொண்ட படங்களை உருவாக்குவது என பாலிவுட் பல அதிரடி முடிவுகளை எடுத்திருக்கிறது. சின்ன பட்ஜெட் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் என திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ற கட்டணங்கள் வசூலிக்கப்பட இருக்கின்றன.
பழைய புகழை எப்படியாவது மீட்டெடுப்பது என்பதில் பாலிவுட் களமிறங்கியிருக்கிறது. இன்று பாலிவுட்டிற்கு நிகழ்ந்திருப்பது, எதிர்காலத்தில் தென்னிந்தியா வட்டாரங்களுக்கும் நிகழும் என்பதால் இது இந்தியா சினிமாவுக்கான சவாலாக பார்க்க வேண்டியிருக்கிறது. பாலிவுட் தயாராகிவிட்டது, கோலிவுட் என்ன செய்யப்போகிறது?