Chiranjeevi 
வெள்ளித்திரை

கின்னஸ் சாதனைப் படைத்த சிரஞ்சீவி!

பாரதி

தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் என்ற செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 150 திரைப்படங்களில் நடித்தவர். தமிழ் சினிமாவில் எப்படி ரஜினி தனது ஸ்டைலால் மக்கள் மனதில் இடம் பிடித்தாரோ, அதேபோல் சிரஞ்சீவி தனது தனித்துவமான ஸ்டைலால் தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கான இடத்தைப் பிடித்தார். இன்னும் சொல்லப்போனால், தென்னிந்திய ரசிகர்களின் ஃபேவரெட் நடிகர் என்றே கூறலாம். இவர் நடிப்பில் மட்டும் சிறந்தவரல்ல, நடனத்திலும் கூட கைத்தேர்ந்தவர்.

1978ம் ஆண்டு சினிமா துறையில் தடம் பதித்த இவர், இன்றுவரை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் நடிகர் சிரஞ்சீவி தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். நடிகர் சிரஞ்சீவி கடந்த 45 ஆண்டுகளில் 156 படங்களில், 537 பாடல்களில், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன அசைவுகளை நிகழ்த்தியுள்ளார். 

இதனை கௌரவிக்கும் விதமாகத்தான் உலக சாதனை புத்தகத்தில் இவரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அமீர் கான் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அந்தச் சான்றிதழில், இந்திய திரையுலகில் மிகவும் படைப்பாற்றல் மிக்க நட்சத்திரம்-நடிகர் மற்றும் நடனக் கலைஞர் சிரஞ்சீவி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் சிரஞ்சீவி பேசியதாவது, “இந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. கின்னஸ் சாதனை படைப்பேன் என நான் நினைத்ததே இல்லை. என் நடனத்திற்காக இந்த கவுரவம் கிடைத்ததில் மகிழ்ச்சி. டான்ஸால் தான் நான் ஸ்டார் ஆனேன். என் கெரியர் முழுவதும் டான்ஸால் எனக்கு பல விருதுகள் கிடைத்தன.

இத்தனை ஆண்டுக்கால சினிமாவில் டான்ஸ் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. சாவித்ரி போன்ற லெஜண்டுகள் முன்பு நடனமாடியது இன்னும் என் நினைவில் இருக்கிறது. எனது டான்ஸை படங்களில் இடம்பெறச் செய்ததற்கு  தயாரிப்பாளார்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் டான்ஸ் மாஸ்டர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

இதனையடுத்து பலரும் நடிகர் சிரஞ்சீவிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

SCROLL FOR NEXT