பொதுவாக தமிழில் வெளியாக முன்னணி பேய் படங்களில் இடம்பெறும் அதே அரண்மனை, அந்த அரண்மனைக்குள் மாட்டிக்கொள்ளும் சிலர்,அதே பயமுறுத்தும் ஸ்பெஷல் எபெக்ட் என பல பேய் படங்களில் பார்த்து பழகிய அதே விஷயங்கள் AGS எண்டர்டைன்மெண்ட் தயாரித்து, செல்வன் ராஜ் சேவியர் இயக்கத்தில் வந்துள்ள கான்ஜூரிங் கண்ணப்பன் படத்திலும் உள்ளது.
ஆனால் பொம்மைக்குள் பேய், டிவிக்குள் பேய் வரிசையில் கனவுப்பேய் என்ற புது ரூட்டை பிடித்து, பயமும், நகைச்சுவையும் கலந்து தந்து சபாஷ் போட வைத்துள்ளார் டைரக்டர். சபிக்கப்பட்ட ஒரு பொருளை தொடும் கண்ணப்பன் (சதீஷ்)கனவு காண்கிறார். அந்த கனவில் பேய்கள் வருகின்றன. இந்த பிரச்சனையில் இவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. இந்த பேய்கள் ஏன் வருகிறது கனவில் பேய் வருவது நின்றதா? இல்லையா என்பதை ஹாரர்-காமெடி பாணியில் தந்துள்ளார் இயக்குநர்.
VTV கணேஷ், ஆனந்த ராஜ், கிங்ஸ்லி, சதீஷ், சரண்யா பொன்வண்ணன், நமோ நாராயணன் என அனைவரும் சேர்ந்து திரையில் ஒரு காமெடி தர்பாரை நடத்தி விடுகிறார்கள். இந்த தர்பாரின் மன்னன் VTV கணேஷ்தான். வழக்கமான தனது குரலிலும் இன்னும் சில சேட்டைகளிலும் சிரிக்க வைக்கிறார். தூக்கம் வராமல் முயற்சி செய்யும் காட்சிகளில் நாம் லாஜிக்கை மறந்து சிரிக்கிறோம்.
சந்தானம் வரிசையில் பேய் பட ஹீரோவாக வந்திருக்கிறார் சதீஷ். வாழ்த்துக்கள் சதீஷ். ரெஜினா பேய் ஓட்டு பவராக நடித்து பேய்களை விட அதிக அளவில் ரசிகர்களை பய முறுத்துகிறார். S. யுவாவின் ஒளிப்பதிவு ஒரு பேய்கள் வாழும் கனவு உலகத்தை காட்டி விடுகிறது யுவன் சங்கர் ராஜாவின் இசை பல பேய் படங்களில் உள்ளது போலவே இருந்தாலும் கதை ஓட்டத்தில் கண்டு பிடிக்க முடியாத படி உள்ளது.
மொத்தத்தில் கான்ஜூரிங் என்ற புகழ் பெற்ற பேய் பட டைட்டிலுக்கு நியாயம் சேர்த்திருக்கிறான் இந்த கான்ஜூரிங் கண்ணப்பன்.