கிரிக்கெட் விளையாட்டில் 800 விக்கட்களை எடுத்து உலக அளவில் சாதனை புரிந்தவர் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். இவரின் வாழக்கையை சொல்லும் படமாக வந்துள்ளது 800 திரைப்படம். ஸ்ரீபதி இப்படத்தை இயக்கி உள்ளார்.மாதுர் மிட்டல் இப்படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடித்துள்ளார்.
கொழும்பில் உள்ள வீரகேசரி நாளிதழ் ஆசிரியர், முத்தையா முரளிதரன் சந்தித்த சவால்களையும், எதிர்கொண்டவிதம் பற்றியும் சொல்வதாக படம் தொடங்குகிறது. சிறுவயது முதல் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இலங்கை மலையக தமிழரான முத்தையாவின் மகன், முரளிதரன் தமிழர் என்ற ஒரே காரணத்தால் கிரிக்கெட் அணியில் புறக்கணிக்கப்படுகிறார். இருப்பினும் இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுன் ரணதுங்க இவரின் திறமையை கண்டறிந்து இலங்கை கிரிக்கெட் அணியில் ஆடவைக்கிறார். முரளிதரன் சந்தித்த சவால்களையே மிகவும் சுவராசியமாக வடிவமைத்து தந்துள்ளார் டைரக்டர். படத்தில் காட்சிகளை காட்டிய விதமே நம்மை படத்தோடு ஒன்றினையச் செய்கிறது.
லண்டனில் இலங்கை அணி தோற்று முரளிதரன் அவமானப் படும்போதும்,முரளிதரன் பௌலிங் போடும் முறை கிரிக்கெட் விதிகளுக்கு முரணானது என்று ஆஸ்திரேலிய அணியினர் பிரச்சனை செய்யும்போது முரளிதரன் படும் வேதனை என காட்சிகளை எமோஷனலாக கையாண்டுள்ளார் இயக்குநர். போர் நடந்த இலங்கை வடக்கு பகுதியில் போராளிகளுடன் முத்தையா முரளிதரன் பேசும் காட்சி மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் மைதானத்தில் எடுக்கப்படுள்ளது. ஒரு லைவ் கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பது போல இருக்கிறது. படத்தில் விளையாட்டோடு சேர்த்து 1980 முதல் 2009 வரையிலான இலங்கையில் நடந்த ஈழ அரசியலையும் ஓரளவு பதிவு செய்துள்ளார் இயக்குநர். இன வாதத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு பகுதி தமிழர்கள், முத்தையா முரளிதரன் சார்ந்துள்ள மலையக தமிழர்கள், கொழும்பு தமிழர்கள் என மூன்று பகுதி மக்களையும், இவர்கள் தங்களுக்குளேயே கொண்டுள்ள முரண்களையும் சொல்கிறது இப்படம். படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் 'வெள்ளை வேன்' சிங்கள பேரின வாதத்தை கண் முன் காட்டுகிறது.
படத்தில் முதலில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. தமிழ் நாட்டில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு கிளம்பியதால் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி கொண்டார். மாதுர் மிட்டல் முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிக்க வந்தார். மாதுர் இந்த ரோலுக்கு சரியாக வருவாரா என்ற எண்ணத்தை பொய்யாக்கி, முத்தையா முரளிதரனாக வாழ்ந்து காட்டிவிட்டார். புறக்கணிப்பு, தோல்வி, நம்பிக்கை என பல உணர்வுகளை மிக சிறப்பாக தந்துள்ளார் மிட்டல். கிங் ரத்னம் அர்ஜுன் ரனதுங்கவை நினைவு படுத்துகிறார். முத்தையா முரளிதரன் எடுத்த 800 விக்கட்களுக்கு பின் உள்ள வலியையும், கண்ணீரையும் சொல்கிறது இப்படம்.
RD ராஜசேகரின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்தை ஒரு உலக தர சினிமாவாக மாற்றுகிறது. தமிழன் என்ற ஒரே காரணத்தால் பல அவமானங்களை சொந்த நாட்டிலேயே சந்தித்து, நம்பிக்கையுடன் போராடி, பல நாட்டு கிரிக்கெட் மைதானத்தில் விளையாட்டில் களமாடிய, கருப்பு தங்கம் நம் தமிழர் முத்தையா முரளிதரனை பற்றி படம் எடுத்த இயக்குநர் ஸ்ரீ பதிக்கு ஒரு சலியூட் செய்வோம்.