Diwali Songs 
வெள்ளித்திரை

வருடம் தோறும் முணுமுணுக்க வைக்கும் எவர்கிரீன் தீபாவளிப் பாடல்கள்..!

சேலம் சுபா
Deepavali Strip 2024

ஒவ்வொரு தீபாவளிக்கும் புத்தாடைகளும் பட்சணங்களும் உறவினர் கூட்டம்களும் களைகட்டும். அத்துடன் தீபாவளி அன்று வெளியிடப்படும் திரைப்படங்களும் மக்களிடையே கொண்டாட்டத்தின் அங்கமாக மாறி போகும்.

வருடம் தோறும் திரைப்படங்கள் வெளியானாலும் தீபாவளியை முன்னிலைப்படுத்திய அல்லது அதன் சிறப்புகளை கூறிய திரைப்படங்கள் என்று பார்த்தால் எண்ணிக்கையில் மிக மிக குறைவாகவே இருக்கிறது எனலாம்.

ஆனாலும் ஒவ்வொரு தீபாவளி அன்றும் இந்தப் பாடல்கள் எங்கோ ஒரு மூலையில் ஒலித்து நமது நினைவலைகளில் புகுந்து மனதில் முணுமுணுக்க வைக்கும். அப்படி நம்மை தீபாவளி அன்று உற்சாகத்தில் ஆழ்த்தும் பாடல்கள் பற்றிப் பார்ப்போம்.

"உன்னைக் கண்டு நானாட. என்னைக் கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி" பட்டுக்கோட்டையார் எழுதிய இந்த பாடல் 60 வருடங்கள் கழித்தும் இன்றும் பெரும்பாலோர் நினைவில் ஊஞ்சலாடுகிறது. தமிழ் உச்சரிப்பை தன் இனிமை குரலில் அழகாக பாடிய பி.சுசிலாவும் ஏ.எம் ராஜாவின் இசையும் 1959லயே கிளாசிக் பாடலாக ஆக்கியது.

இரட்டை ஜடை, சாதா கம்மல், சிறிய மல்லிகைச் சரம், புன்னகையுடன் துள்ளலுடன் நடித்த சரோஜாதேவியின் அழகும் அலட்டல் இல்லாத ஜெமினி கணேசனும் தோன்றிய அந்தக் காட்சிகள் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் என்பதை மறக்க வைக்கும்.

மத்தாப்பு வெளிச்சத்தில் மட்டுமே படம் ஆக்கப்பட்டது போல் பாடல் காட்சியை பிரமாண்டமாக கையாண்டுள்ளது பிரம்மிக்கத்தக்கது. குறிப்பாக ஷேடோ எஃபெக்டை கொடுத்து லைட்டிங்கை மேம்படுத்தி இருக்கும் கோணங்கள் அன்றே ஒளிப்பதிவாளர் வின்சென்ட் கேமராவினால் கவிதையாகி இந்தப் பாடலுக்கு பெருமை சேர்த்தது . இன்றளவும் தீபாவளி என்றாலே இது முதலிடம் பிடிக்கும் ஒரு எவர்கிரீன் பாடல் காட்சியாகி விட்டது எனலாம்.

"பட்டாசை ச்சுட்டுச்சுட்டுப் போடட்டுமா... மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா... தீவளிக்கு தீவளி எண்ணெய் தேய்ச்சு நீ குளி... பாட்டி சொன்ன வைத்தியம்" இன்றும் 60, 70ல் பிறந்து பாட்டிகளான பெண்மணிகள் பேரன் பேத்திகளை எண்ணி முணுமுணுக்கும் பாடல். 1985-ல் பாசிலின் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் இளையராஜாவின் இசையில் சின்னக் குயில் சித்ராவின் கொஞ்சும் மலையாள உச்சரிப்பு கலந்த குரலில் பாடிய பாடலுக்கு இளம் பெண்ணான துறுதுறு நதியா ஒரு தீபாவளிக் காட்சி பின்னணியில் ஆடிய பாடல் தீபாவளிக்கு தீபாவளி இன்றும் கொண்டாடப்படுகிறது.

"நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதசி... அந்தி மலரும் நந்தவனம் நான் அள்ளிப் பருகும் கம்பரசம் நான்..." மணிரத்னத்தின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான 1987-ல் வெளிவந்த ‘நாயகன்’ படத்தில் இடம்பெற்ற பாடல். முதல் குறிப்பிட்ட பாடல்கள் தீபாவளி நாள் பின்னணியில் அமைந்து வெற்றி பெற்றது. ஆனால் இந்தப் பாடலுக்கும் தீபாவளிப் பண்டிகைக்கும் சிறிதும் தொடர்பு இல்லை. நாயகனின் ஒரு சூழலை விவரிக்க புதுமைப்பித்தன் எழுதி எடுக்கப்பட்ட இந்தப் பாடலின் வெற்றிக்கு காரணம் இரு பெண்களின் துள்ளல் ஆட்டம் மட்டுமல்ல இசைஞானியின் இனிய இசையில் இசையின் பழம்பெரும் குயில் குரல் ராணிகளான எம்.எஸ் ராஜேஸ்வரி மற்றும் கே.ஜமுனாராணியின் அசத்தல் குரல்களும்தான்.

மேலும் 1982-ல் வெளிவந்த ‘மருமகளே வாழ்க’ படத்தில் சங்கர் - கணேஷ் இசையமைப்பில் பி.சுசீலா, பி.எஸ்.சசிரேகா இனிய குரலில் பாடிய "தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றும் தீபாவளி" என்ற பாடல் உள்பட விரல் விட்டு எண்ணும் தீபாவளி பாடல்கள் இருந்தாலும் இந்த 3 ம் நம்மை முணுமுணுக்கவே வைக்கிறது என்பது நிஜம்.

கிரிப்டோவில் முதலீடு செய்வது சரியான யுக்தியா?

தண்ணீர் குடிப்பதற்கு இத்தனை விதிமுறைகளா? இது தெரியாம போச்சே!

சீதையின் அருள் பெற்ற அனுமன்!

அட, இப்படி ஒரு முறை தயிர் பச்சடி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க! 

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

SCROLL FOR NEXT