வெள்ளித்திரை

அங்கவை-சங்கவை இவர்களைத் தெரியுமா?! வேள்பாரி... கதை இதுதான்!

மணிகண்டன்

நாட்கள் செல்லச் செல்ல டெக்னாலஜியின் வளர்ச்சி உச்சத்திற்கு போய்க்கொண்டிருக்க, சினிமாவில் தொழில்நுட்ப வளர்ச்சியும் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. அந்த தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி பிரம்மாண்டத்தை புகுத்தி பல திரைப்படங்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அந்தவகையில் ஹாலிவுட் படங்களைத் தொடர்ந்து 'பாகுபலி', 'பொன்னியின் செல்வன்' போன்ற வரலாற்று காவியங்கள் பிரம்மாண்ட திரைப்படங்களாக உருவாகி மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகின்றன.

இதைப் புரிந்துகொண்ட பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரும் வரலாற்று புனைவுகள் மீது தன் பார்வையை திருப்பினார். அதன்படி சு.வெங்கடேசன் எழுத்தில் வெளிவந்த ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ கதையை படமாக்க முடிவு செய்துள்ளார்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டு தமிழகம் இருந்தபோதே சில குறுநில மன்னர்களும் இருந்துவந்தனர். இவர்களில் கடையேழு வள்ளல்களில் ஒருவராக கருதப்படும் பாரியும் ஒருவர். பாரி என்றால் நம் அனைவர் மனதிலும் நினைவுக்கு வருவது 'முல்லைக்கு தேர் தந்த பாரி'. அந்த பாரி மன்னன்தான் இன்றும் வேள்பாரி என்று அழைக்கப்படுகிறார்.

வேள்பாரி கதைப்படி, அப்போது பறம்பு நாட்டை பாரி மன்னன் ஆண்டு வந்தான். பாரி தன் கொடைதிறனால் மக்களின் மனதில் இடம்பிடித்ததோடு, நாட்டின் புகழ்பெற்ற மன்னனாக திகழ்ந்து மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டான். அவரது புகழும், பறம்பு நாட்டின் செழிப்பும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு பொறாமையை உண்டு பண்ணியது. அதனால் பறம்பு நாட்டின் மீது தனித்தனியாக போர் தொடுத்தனர். இருந்தும் அவர்களால் போலில் வெல்ல முடியவில்லை.

பாரிக்கு, அன்பும், அறிவும் கொண்ட இரண்டு அழகிய பெண்கள் இருந்தனர். இவர்களுடைய பெயர் குறித்த குறிப்பு சங்கநூல்களில் சரியாக அறியப்படவில்லையென்றாலும், பிற்காலத்தவர் அவர்களை அங்கவை, சங்கவை என்றனர். அழகான அறிவுமிக்க பெண்கள் இருப்பதை உணர்ந்த சேர, சோழ, பாண்டியர் என மூவரும் தனித்தனியே பெண் கேட்டு தூது அனுப்பினர். ஆனால் அனைத்தையும் பாரி மறுத்துவிட்டான்.

ஒருவருக்கே இரண்டு பெண்களை கொடுக்கவும் மனமில்லை. இருவருக்கு பெண்களை கொடுத்துவிட்டு ஒருவருக்கு கொடுக்காமல் விடவும் மனமில்லை. இதனால் பிரச்சினை வரும் என்று அறிந்து பெண் கொடுக்க மறுத்துவிட்டார். பாரி பெண் கொடுக்க மறுத்ததற்கான காரணத்தை மூவேந்தர்களும் அறிந்திருக்கவில்லை. இதனால் பாரியின் மீது சினம்கொண்ட மூவேந்தர்களும் ஒன்றுகூடி தங்கள் படைகளை திரட்டி பறம்புநாட்டின் மீது போர்தொடுத்தனர். அப்போதும் மூவேந்தர்களுக்கு வெற்றிக்கனி எட்டவில்லை.

எப்படியாவது போரில் வென்றாக வேண்டும் என்று ஒற்றன் ஒருவனை பறம்பு நாட்டிற்கு அனுப்பிவைத்தனர். அங்கு சென்ற ஒற்றன், பறம்புமலையின் மேலேறி, அங்கிருந்த அரணின் சிறப்பையும், வலிமையையும் உணர்ந்தான். மலையின் வளங்களையும் அறிந்தான். அறியவேண்டிய விஷயங்களையெல்லாம் தெரிந்துகொண்டு பிரமிப்போடு மூவேந்தர்களிடம், படைபலத்தால் பாரியை வெல்ல முடியாது என்பதை எடுத்துரைத்தான்.

தங்கள் படைபலத்தால் போர்புரிந்து பாரியை கொல்ல முடியாது என்பது சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு தெளிவாக புரிந்த நிலையில், வேள்பாரி மன்னனை துரோகத்தால் சதிசெய்து வீழ்த்தினர்.

இந்நிலையில், ஆதரவின்றி நின்றவர்தான் பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை. பாதுகாப்புடன் நிம்மதியாக வாழ்ந்த அங்கவையும், சங்கவையும் தமது தந்தையின் மறைவுக்குப் பின், அவரது நண்பரான புலவர் கபிலரின் பாதுகாவலில் இருந்தனர். கபிலரும் தனது மகளிராகவே கருதி இருவருக்கும் மணம் முடித்து வைக்க பெரிதும் போராடினார். ஆனால் அவரால் அது இயலாமல் போனது.

இறுதியில், ஒரு குடிசையில் அங்கவையும், சங்கவையும் வாழ்ந்து வர, அவ்வழியாக வழிதடுமாறியபடி மழையில் நனைந்த வண்ணம் ஔவையார் வந்துகொண்டிருக்க பாரிமகளிரின் குடிசை தென்பட்டது. அவரைக் கண்ட இருவரும் தங்கள் நிலை குறித்தும், கபிலர் பட்ட இன்னல்கள் குறித்தும், தற்போது நாங்கள் எல்லாவற்றையும் இழந்து தனியா நிற்பதையும் கூறி அழுதனர்.

அச்சமயம், ஔவையார் அவர்களுக்கு ஆறுதல் கூறியபடி, அவர்களுக்கு நல்ல மணவாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவும் முடிவெடுத்தார். இறுதியில், அங்கவை சங்கவைக்கும் மலையமான் நாட்டை ஆண்டுகொண்டிருந்த தெய்வீகனுக்கும் சீரும் சிறப்புமாக திருமணம் நடைபெற்றது என்பது போல் கதை அமையப்பெற்றுள்ளது.

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

SCROLL FOR NEXT