பிப்ரவரி மாதம் தமிழ் சினிமாவை முந்தி, மலையாள சினிமா 3 படங்கள் ஹிட் கொடுத்து அசத்தியுள்ளது.
தற்போதைய சினிமாவில் ஒரு நாளைக்கு எக்கச்சக்கமான படங்கள் திரைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த மாதம் பொங்கலையொட்டி வெளியான படங்களில் அயலான் ஓரளவும், கேப்டன் மில்லர் ஓரளவும், மிஷன் சாப்டர் 1 படம் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதே போன்று பிப்ரவரி மாதம் லால் சலாம் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இது ஒரு புறம் இருக்க இந்த மாதம் வெளியான பல படங்கள் ஓரளவே வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம். குறிப்பாக மணிகண்டனின் லவ்வர் படம் மட்டும் பேசும் பொருளாக அமைந்தது. ஆனால், இந்த மாதம் மலையாள சினிமாவில் வெளியான 3 படங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து அசத்தியுள்ளது. அந்த படங்கள் பிரேமாலு, பிரம்மயுகம் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் ஆகிய மூன்று படங்கள் தான்.
சுமார் ஒரு வார இடைவெளியில் வெளிவந்த இந்த மூன்று படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகின்றன. பிரேமாலு, பிரம்மயுகம் ஆகிய படங்கள் ஒரே வாரத்தில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், கடந்த வாரம் வெளிவந்த மஞ்சுமெல் பாய்ஸ் படம் மூன்று தினங்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதன்மூலம் பிப்ரவரி மாதத்தில் கோலிவுட்டை ஓவர்டேக் செய்துள்ளது மலையாள சினிமா.