பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஜே. கே .எம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ' D3’. விஜய் டிவி சீரியல் நடிகரான பிரஜின் கதாநாயகனாக இந்த படத்தில் நடித்துள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குனர் பாலாஜி என்பவர் எழுதி இயக்கியுள்ளார். .இப்படத்தில் பிரஜின், வித்யா பிரதீப், மேத்யூ வர்கீஸ் மற்றும் காயத்ரி யுவராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகர், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாகுவார் தங்கம், இயக்குநர் மோகன் ஜி , நடிகர் அபிஷேக், கூல் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் பிரிஜின், டி3 படத்தில் நிர்வாணமாக நடித்ததை குறித்து பேசினார். "நான் சினிமாவில் 19 ஆண்டுகளாக நடித்து கொண்டிருக்கிறேன். இதுவரை 24 படங்களில் நடித்து விட்டேன். ஆனாலும் தற்போதும் அதிகம் உழைத்து கொண்டு தான் இருக்கிறேன். எனக்கான இடத்தை இன்னும் அடையவில்லை. நான் நடித்த படங்கள் எதுவுமே வெளியாகாமல் இருந்ததில்லை. பாதியில் நின்று போனதில்லை. நான் முதல் முதலாக போலீஸ் சம்பந்தப்பட்ட கதையில் நடித்துள்ளேன்.
எனது அப்பா காவல்துறையில் இருந்தவர் தான். தனது துறையைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். எனவே போலீசாக நடிப்பது எனக்கு சிரமமாக இல்லை. இந்தப் படத்திற்காக இயக்குனர் கேட்டுக் கொண்டதால் நான் நிர்வாணமாக நடித்திருக்கிறேன்" என தெரிவித்தார்.
படத்தின் இயக்குநர் பாலாஜி பேசுகையில், "இது ஒரே நாளில் நடக்கும் கதை. இந்தப் படத்தின் வரிசையில் D2, D1 படங்களையும் உருவாக்க இருக்கிறோம். ஒரு விபத்து, ஒரு கொலை, ஒரு காணவில்லை கேஸ் என்ற மூன்றையும் பின்னணியாக வைத்து இந்தக் கதை உருவாகி இருக்கிறேன். சிறு பட்ஜெட் படங்கள் என்றாலே மனித உழைப்பைக் கடுமையாகக் கொடுக்க வேண்டி இருக்கும். இதற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். படப்பிடிப்பு நாட்களில் ஏழு நாட்கள் 24 மணி நேரமும் கூட படப்பிடிப்பு நடந்தது. அந்த அளவிற்கு உழைத்தோம். பிரஜின் இந்தப் படத்திற்காகக் கொடுத்த ஆதரவும் உழைப்பும் அளவிட முடியாதது என்கிறார் இயக்குனர் பாலாஜி.