தொடர்ந்து வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இளையராஜா வீடியோ பதிவிட்டு நச் பதில் கொடுத்துள்ளார்.
இசைஞானி இளையராஜா இசையில், கடந்த 1980-வது ஆண்டு வெளியான 'நிழல்கள்' படத்தின் மூலம் பாடலாசிரியராக திரையுலகில் நுழைந்தவர் வைரமுத்து. இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது. குறிப்பிற்காக இப்படத்தில் இடம்பெற்ற 'இது ஒரு பொன் மாலை பொழுது' என்கின்ற பாடலின் வரிகள் மூலம் வைரமுத்துவும் வாய்ப்பு கொடுக்க துவங்கினார். 3 வருடத்தில் முன்னணி பாடலாசிரியராக உயர்ந்த வைரமுத்து இதுவரை ஏகப்பட்ட தமிழ் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
இந்நிலையில், அண்மையில் 'படிக்காத பக்கங்கள்' என்கின்ற ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வைரமுத்து, "இசை பெரிதா.. மொழி பெரிதா என்பது இப்பொழுது பெரிய விவாதமாக மாறி உள்ளது. இதில் என்ன சந்தேகம், இசை எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரியது மொழி. மொழி எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது இசை. இதை புரிந்து கொண்டவர்கள் ஞானி, புரிந்துகொள்ளாதவர்கள் அந்நியானி என்று பேசி இருந்தார்".
இளையராஜாவை சாடி பேசிய வைரமுத்துவுக்கு எதிராக, ரசிகர்கள் சிலர் தங்களின் கண்டனத்தை தெரிவிக்க, இளையராஜாவின் சகோதரர் கங்கையமரனும் அறிக்கை வெளியிட்டு தன்னுடைய எதிர்ப்பைதெரிவித்தார். இப்படி தினமும் இளையராஜா குறித்த பேச்சுக்கள் வந்து கொண்டே இருக்கும் நிலையில், தற்போது இளையராஜா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், வணக்கம். என்னைப் பற்றி ஏதோ ஒரு வகையில் தினமும் வீடியோக்கள் வெளியாகின்றன என்ற செய்தியை வேண்டியவர்கள் மூலமாக கேள்விப்படுகிறேன். நான் இதில் கவனம் செலுத்துவதில்லை. காரணம், மற்றவர்களை கவனிப்பது என் வேலையில்லை. என் வேலையை கவனிப்பது என் வேலை. என் வழியில் சுத்தமாக சென்று கொண்டிருக்கிறேன்.
நீங்கள் என்னை வாழ்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்ஃபோனியை எழுதி முடித்துவிட்டேன். இங்கே பட இசையில் கவனம் செலுத்திக்கொண்டும், இடையில் விழாக்களுக்கு சென்றுகொண்டிருந்தபோதிலும், ஒரு சிம்ஃபோனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்துவிட்டேன் என்ற எனக்கு சந்தோஷமான செய்தியை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். பியூர் சிம்ஃபோனியாக எழுதி முடித்துவிட்டேன் என்பதை என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகமான இந்த செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.