மைம் கோபி தனது மகனுக்கு ஒருவரை எப்படி மதிக்க வேண்டும், மனிதனுக்கும் அவனது தொழிலுக்கும் என்ன சம்பந்தம் என்பதுபோன்ற வாழ்க்கைப் பாடங்களை சொல்லித்தந்ததாக அவர் ஒருமுறை பேசியதைப் பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் மைம் கோபி. மேடை நாடக கலைஞரான இவர் மெட்ராஸ் , கதகளி , கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர மலையாளம் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
திரைத்துறையில் வருவதற்கு முன்னர் இவர் பெரிய மேடை நடிகராக இருந்து வந்தார். இவர் படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் பதிந்தாலும், குக் வித் கோமாளியில் பங்கேற்ற பின்னர் இவரின் உண்மையான எதார்த்த முகம் தெரிந்தது. அந்தவகையில் தனது மகனுக்கு சொல்லித்தந்த ஒரு மகத்தான விஷயத்தைப் பற்றிப் பார்ப்போம்.
“நான் எனது காரை ஓட்டி வரும் தம்பியை , டிரைவர் என சொல்லமாட்டேன். அவர் எனக்கு தம்பி. அதேபோல ஆட்டோ ஓட்டுநரை ஆட்டோ அண்ணா என சொல்லக்கூடாது. அண்ணா என கூறினால் போதுமானது. என் மகனுக்கு நான் அதைத்தான் சொல்லிக்கொடுக்கிறேன். நானும் என் மகனும் தினமும் இளநீர் குடிக்க செல்வோம்.
அந்த அண்ணா என்னையும் என் மகனையும் கண்டவுடன் எழுந்து நின்று கைக்கூப்பி வணக்கம் சொல்லுவார். நானும் என் மகனும் அதே போல வணக்கம் சொல்லுவோம். என் மகன் என்னிடம் கேட்டான் , ஏன் அப்பா அவர் நம்மை பார்த்தவுடன் எழுந்து நிற்கிறார், அப்படின்னு... அப்ப நான் சொன்னேன். அது அவர் நமக்கு செய்யும் மரியாதை. அதைத்தான் நாமும் திருப்பி செய்ய வேண்டும். தொழில்களை வைத்து மனிதர்களை அழைக்கும்போதுதான் ஏற்றத்தாழ்வு பிறக்கிறது.
பிணம் எரிப்பவரை வெட்டியான் என்று சொல்லாமல், அண்ணன் என்று கூப்பிட்டு பழகுங்கள். நான் செய்வது நடிப்பு தொழில் , அதேபோல ஒரு ஒருவருக்கும் ஒரு தொழில். நான் சினிமாவில் நடிக்கும்பொழுது , மனிதர்களிடம் பழகியதைத்தான் உள்வாங்கி நடிப்பேன். உண்மையில் நான் குடிக்க மாட்டேன். ஆனால் 24 மணி நேரமும் குடிகாரனை போல நடிக்கவேண்டிய சூழலில் , எங்கே எவருடனோ ஏற்பட்ட பழக்கம் என உதவியாக இருக்கிறது. நான் ஒரு பொம்மை...களிமண் ..என்னை எப்படியாக இயக்குநர் நடிக்க சொல்கிறாரோ அப்படியாக என்னால் மாற முடியும்.” என்று பேசினார் மைம் கோபி.
இந்த கருத்துகளின் ஆழம் அதிகமே… தயவுசெய்து நாமும் இந்த கருத்துக்களை மதித்து பின்பற்றுவோமே….