Kurangu Pedal Movie Review in tamil 
வெள்ளித்திரை

விமர்சனம் - குரங்கு பெடல் – குழந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!

ராகவ்குமார்

சினிமாவில் நடித்தோமா, நாலு காசு பார்த்தோமா, கார், பங்களா என செட்டில் ஆனோமா என்று நினைக்கும் நட்சத்திரங்கள்தான் அதிகம். நல்ல படங்களைத் தந்து, இந்தச் சினிமா உலகை வாழ வைக்க வேண்டும் என நினைப்பவர்கள் மிகக் குறைவு. இதில்
விதிவிலக்காக தனுஷ் போன்றவர்கள் சிறந்த படங்களைத்  தயாரித்து வழங்கி வருகிறார்கள். இப்போது இந்த லிஸ்டில் சிவகார்த்திகேயனும் சேர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயன், சவிதா சண்முகம், சுமி. பாஸ்கரன் இம்மூவரும் இணைந்து ‘குரங்கு பெடல்’ என்ற குழந்தைகள் படத்தைத் தயாரித்துள்ளார்கள். இயக்குநரும், எழுத்தாளருமான ராசி. அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

1980களின் கோடைக்காலம். ஈரோடு மாவட்டம் பவானி  அருகே உள்ள ஒரு சிறு ஊரில்  ஐந்து சிறுவர்கள்  கோடை விடுமுறையில் சேர்ந்து சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதில் ஒரு சிறுவன் மட்டும் சைக்கிள் வாங்கிவிட மூன்று  சிறுவர்கள் சைக்கிள் வாங்கிய சிறுவனுடன் சேர்ந்துகொள்கிறார்கள்.

Kurangu Pedal Movie Review

மாரியப்பன் என்ற சிறுவன் மட்டும் தனித்து விடப் படுகிறான். வாடகை சைக்கிள் எடுத்து உயரம் போதாமல் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் கற்றுக்கொள்கிறான். இந்தச் சைக்கிள் கற்றுகொள்ளும்போது நடக்கும் நிகழ்வுகளை ஒரு மிகச் சிறந்த வாழ்க்கைச் சித்திரமாக, குழந்தைகளின் அழகான உலகத்தைப் பிரதிபலிக்கும் விதமாக ‘குரங்கு பெடல்’  படத்தின் மூலமாக காட்டியுள்ளார் டைரக்டர் கமலக்கண்ணன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ‘மதுபானக்கடை’ என்ற படத்தை இயக்கியவர் கமலக்கண்ணன். ‘மதுபானக்கடை’ படத்தில் மார்க்ஸியத்தைச் சொன்னவர். ‘குரங்கு பெடலி’ல் டிவி, சமூக ஊடகங்கள், கோடை விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள்  என மூழ்கிக் கிடக்கும் இந்த இளம் தலைமுறையினருக்குத் தெரியாத 1980களில் வாழ்ந்த குழந்தைகளின் வாழ்வியல் யதார்த்ததைச் சொல்லி இருக்கிறார். கொங்கு தமிழ், கோடையிலும் வற்றாத பவானி நதி, பரிசல், தோல் பாவை கூத்து என காட்சிக்குக் காட்சி செதுக்கி இருக்கிறார் டைரக்டர். ஒரு சிறு கதாபாத்திரம் கூட நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. உதாரணமாக, தோல் பாவை கலைஞர், காளி வெங்கட்டின் மகளாக நடிப்பவர் போன்றவர்களைச் சொல்லலாம்.

Kurangu Pedal Movie Review

ஒளிப்பதிவாளர் சுமி.பாஸ்கரனும், ஒலிக் கலைஞர் ஆண்டனி பி.ஜெயரூபனும் டைரக்டரின் காட்சிக்கு வடிவம் தந்துள்ளார்கள். நாளுக்குநாள் காளி வெங்கட்டின் நடிப்பு மெருக்கேறிக்கொண்டே வருகிறது. கொங்கு மண்ணின் குசும்பும், ஒரு பாசக்கார தந்தையாகவும் சிறப்பாக நடித்துள்ளார். ஐந்து சிறுவர்களின் நடிப்பை பார்க்கும்போது “பலே! பலே!” என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக மாரியப்பனாக நடித்துள்ள மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன்  நடிக்கவில்லை.சூ ழ்நிலையை உள்வாங்கி வாழ்ந்திருக்கிறார்.

பிரசன்னா பாலசந்தர், ஜென்சன் திவாகர், செல்வா, சாவித்ரி என ‘நக்கலைட்ஸ்' டீம் இங்கேயும் முத்திரை பதித்து உள்ளது.

‘குரங்கு பெடல்’ படத்தை நடுத்தர வயதினர் பார்த்தால் தங்களது குழந்தை பருவம் நினைவுக்கு  வரலாம். இப்போது உள்ள குழந்தைகள் பார்த்தால் இப்படி ஒரு வாழ்க்கை  முன்பு இருந்ததா  என்று வியப்படைய வைக்கலாம்.

தமிழ்நாட்டின் வெள்ளித்திரைகளில் ரத்தம் தெறித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அன்பை சொல்லும் படமாக வந்துள்ளது ‘குரங்கு பெடல்.’ தமிழில் நல்ல சினிமா வரவில்லையே என்று வருத்தப்படும் நாம், இது போன்ற நல்ல படங்கள் வெளியாகும் போது வரவேற்கவும் செய்ய வேண்டும்.

அரண்மனையின் ஆர்ப்பாட்டங்கள், ரீரிலீஸ் படங்களின் கொண்டாட்டங்கள் மத்தியில் இந்த எளிய, தரம் வாய்ந்த கருத்துமிகு படத்தையும் வரவேற்போம். பாராட்டுவோம்! இப்படி ஒரு நல்ல படம் உருவாக காரணமாக இருந்த சிவகார்த்திகேயனுக்கு ஒரு சல்யூட்!

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT