Maran Interview 
வெள்ளித்திரை

நேர்காணல்: 'J.பேபி' திரைப்படம் குறித்து மாறன் வருத்தம்!

ராகவ்குமார்

சமீபத்தில் வெளியான ‘J.பேபி’ திரைப்படம் காமெடி நடிகர் மாறனை ஒரு குணச்சித்திர நடிகராக அடையாளம் காட்டியுள்ளது. பிசியான படப்பிடிப்புகளுக்கு மத்தியில் கல்கி ஆன் லைனுக்குக்காக அவரைப் பிடித்துப் பேசினோம். பேட்டியின் தொடக்கத்திலேயே நெகிழ்ச்சியான தகவலைப் பரிமாறி மகிழ்வித்தார். பேட்டியும் அதே உற்சாகத்தோடு தொடர்ந்தது.

“பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா டிவியில் ‘காமெடி பஜார்’ என்ற நிகழ்ச்சி நடத்தியபோது என்னை அடையாளம் கண்டு, கல்கி வார இதழ் என் நேர்காணலை வெளியிட்டது. இந்த இடத்தில் கல்கிக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்."

(மாறன்)

சினிமாவில் நீங்கள் பெற்றதும், இழந்ததும் என்ன?

இழந்ததுதான் அதிகம். நான் சினிமா இயக்குனராகும் கனவில் என் சொந்த வீட்டை விற்று நஷ்டமடைந்திருக்கிறேன். சினிமாவில் பல எதிர்பார்ப்புகளுடன் போராடுபவர்கள் அதிகம். பலரின் நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்து நான் அடைந்த நஷ்டம் ஒன்றுமில்லை என்று நினைத்து என்னை நானே தேற்றிக்கொள்வேன்.

காமெடி நடிகரான உங்களை ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக வெளிப்படுத்த இயக்குனருக்கு எப்படி ஐடியா வந்தது?

டைரக்டரின் அண்ணன் ஒருவர் பார்ப்பதற்கு என்னைப்போல இருப்பதால் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார் டைரக்டர் என்று அறிகிறேன்.

'லொள்ளு சபா' முதல் 'வடக்குப்பட்டி ராமசாமி' வரை சந்தானத்துடன் பயணிக்கிறீர்களே... சந்தானம் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது எது?

அவர் செய்த, செய்துகொண்டிருக்கும் உதவிதான் நினைவுக்கு வரும். நாங்கள் லொள்ளு சபா நடிகர்கள் சுமார் இருபது பேர் வரை இருந்தால், சுமார் பத்து பேருக்கு அவர் நடிக்கும் படங்களில் வாய்ப்பு தர முயற்சி செய்வார். இந்த நல்ல எண்ணம் பலரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. தான் ஜெயித்த பின்பும், ஆரம்ப காலத்தில் தன்னுடன் இருந்தவர்களைச் சேர்த்துக்கொண்டு பயணிப்பவர்கள் சினிமாவில் மிகக் குறைவு. இதிலிருந்து மாறுபட்டவர் எங்கள் சந்தானம். ‘வடக்குப்பட்டி ராமசாமி பாகம் 2’ உட்பட இன்னும் சில படங்களில் சந்தானத்துடன் நடிக்கிறேன். சந்தானத்துடன் இணைந்து ஒரு படம் டைரக்ட் செய்ய பேசிக்கொண்டிருக்கிறேன். நானும் சந்தானமும் சேர்ந்து செய்யப்போகும் கச்சேரிகள் இன்னும் பல வர உள்ளன

J.baby

ஊர்வசி அவர்களுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

தன் வீட்டை விற்கும் காட்சி ஒன்றில் ஊர்வசி அழுவார். இவங்க அழுவதைப் பார்த்த எனக்கும் என்னை அறியாமல் அழுகை வந்துவிட்டது. இந்தக் காட்சி படத்திலேயே மிக முக்கியமானது. தன்னுடன் இருப்பவர்கள் காட்சியை உணர்ந்து நடிக்கவேண்டும் என்பதற்காக அதற்கேற்றார்போல் நடிப்பைத் தருபவர் ஊர்வசி .இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்

‘J.பேபி’ படம் வெற்றிபெற்றிருந்தும் சமூக வலைத்தளங்களில் வருத்தத்தைப் பதிவு செய்து இருந்தீர்களே?

நான் இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியில் சூட்டிங்கில் இருந்தேன். அப்பகுதி அருகில் உள்ள ஒரு தியேட்டரில் ‘J.பேபி’ படம் ஓடிக்கொண்டிருந்தது. நண்பர்களுடன் படம் பார்க்கச் சென்றிருதேன். நான் சென்றபோது ‘J.பேபி’ படத்திற்குப் பதிலாக மலையாளப் படமான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. எங்கள் படத்தை எடுத்துவிட்டு, ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தைத் திரையிட்டதாகக் கேள்விப்பட்டேன். இப்படியெல்லாம் நடந்ததால், ‘J.பேபி’ திரைப்படம் சரியாக மக்களிடம் சென்றடையவில்லை. இதைத்தான் ஊடகங்களில் வருத்தத்துடன் தெரிவித்தேன்.

இனி உங்கள் திரைப்பயணம் காமெடியனாகவா? அல்லது கேரக்டர் ஆர்டிஸ்டாகவா?

இப்போது நடிக்கும் படங்கள் அனைத்திலும் காமெடியன்தான். கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்பது என்னை வைத்து இயக்கும் டைரக்டர் கையில்தான் உள்ளது .

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT