பிரெஞ்சு நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு வந்துள்ள படம் மேரி கிறிஸ்துமஸ். ஸ்ரீ ராம் ராகவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப், ராதிகா ஆப்தே முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.
நண்பராக பழகும் விஜய் சேதுபதியை கத்ரீனா கிறிஸ்மஸ்க்கு முதல் நாள் தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அங்கே கத்ரீனாவின் கணவர் சுடப்பட்டு இறந்து கிடக்கிறார். இந்த விஷயம் மூன்றாவது ஒரு நபருக்கு தெரிய வருகிறது. காவல் துறை இது தற்கொலையல்ல கொலை என்ற முடிவுக்கு வருகிறது.
இப்படி ஒரு திரில்லர்க்கான கதை களம் இருந்தும், கதையை நகர்த்தும் விதத்தில் எந்த வித சுவாரசியமும் இல்லாமல்,பல கேள்விகளுக்கு எந்த விடையையும் தராமல் வந்துள்ளது மேரி கிறிஸ்துமஸ். படத்தின் காட்சி அமைப்பும், அதிகமான வசனங்களும் ஒரு நாடகதன்மையை உருவாக்கி விடுகிறது. ஒரு கட்டதத்தில் படம் எப்போது முடியும் என எதிர்பார்க்க வைத்து விடுகிறது.
மது நீலகண்டனின் ஒளிப்பதிவில் லைட்டிங் மட்டும் ரசிக்க முடிகிறது. டேனியல் ராஜ் பின்னணி இசையில் பல இடங்களில் இளையராஜாவை நினைவுபடுத்துகிறது வசன உச்சரிப்பு, நடிப்பு என பல படங்களில் பார்த்த விஜய் சேதுபதிதான் இந்த படத்திலும் தெரிகிறார். ஒரு குழந்தைக்கு அம்மாவாக, அன்புக்கு ஏங்கும் பெண்ணாக கத்ரீனா சபாஷ் போட வைக்கிறார். ரோனியாக வரும் கவின் பாபு சிரிப்பை வர வைக்கிறார். போலீஸாக வரும் ராதிகாவும், சண்முக ராஜனும் பில்ட் அப் மட்டுமே தருகிறார்கள்.
ஒரு நாவலை படமாக்கும் போது கவனித்து செய்ய வேண்டிய அம்சங்களை கவனிக்க செய்ய தவறி விட்டார் டைரக்டர் என்று சொல்லலாம் படத்தின் இறுதியில் குழப்பமே மிஞ்சுகிறது. கதாபாத்திர உருவாக்கத்திலும், திரைக்கதையிலும் கவனம் பெறாததால் இந்த மேரி கிறிஸ்துமஸ் கொண்டாட முடியவில்லை.