Mollywood Industry 
வெள்ளித்திரை

கலக்கத்தில் கேரளத் திரையுலகம்; விஸ்வரூபம் எடுக்கும் பாலியல் பலாத்கார பிரச்னைகள்!

நா.மதுசூதனன்

என்ன இருந்தாலும் மலையாள படம் மலையாள படம் தான். தமிழ்ல இந்த மாதிரியெல்லாம் யோசிக்கவே மாட்டாங்க. மஞ்சும்மல் பாய்ஸ், ப்ரேமலு, போன்ற படங்கள் நேரடித் தமிழ் திரைப்படங்களைவிட வசூலில் சாதனை படைக்கின்றன. என்ன கொடுமை என்றால் தமிழ்நாட்டில் இந்த வசூல் கேரளாவை விட அதிகம். இதெல்லாம் மலையாள திரையுலகை பற்றிச் சமீபகாலங்களில் வாசிக்கப்பட்டு வந்த பாராட்டுப் பத்திரங்கள். இந்த ஒட்டுமொத்த நற்பெயருக்கும் ஆப்பு வைக்கும் விதமாக ஒரு செய்தியுடன் ஆரம்பித்தது இந்த வாரம்.

அம்மா (மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கம் - amma) பொதுச் செயலாளரான நடிகர் சித்திக் தனது பதவியை ராஜினாமா செய்தார். சிறிது நேரத்தில் கேரளா காலசித்ரா அகாடமியின் தலைவர் ரஞ்சித்தும் ராஜினாமாவை அறிவித்தார். இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான். அவர்கள்மேல் வைக்கப்பட்ட பாலியல் சீண்டல் மற்றும் அத்துமீறல்குறித்த குற்றச்சாட்டுகள். இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்தவர்கள் வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ராவும், மலையாள நடிகையான ரேவதி சம்பத்தும். இது இரண்டும் நடந்தது பல ஆண்டுகளுக்கு முன். அப்போதே இது தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர்கள் வைத்திருந்தனர். இருந்தும் இப்போது இந்தப் பிரச்னை பெரிதாகக் காரணம் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை தான்.

மலையாளத் திரையுலகில் இது போன்ற பாலியல் அத்துமீறல்கள், சீண்டல்கள், சுரண்டல்கள் வெகுகாலமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து WCC  (women in cinema collective) என்ற ஒரு அமைப்பை உருவாக்கினர். அந்தக் அமைப்பின் இடைவிடாத உழைப்பு தான் கேரளா அரசு உருவாக்கிய ஹேமா கமிட்டி. ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா, நடிகை சாரதா, கே பி வல்சலா குமாரி ஆகிய மூன்று பேர் கொண்டு கமிட்டி இது தொடர்பான விசாரணை மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக நேரில் வந்து தங்கள் தரப்பு விஷயங்களைச் சொல்லலாம். பெயர் மற்றும் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த முயற்சிக்கு ஆதரவு இருக்கும் என்று முதலில் யாரும் நம்பவில்லை. ஆனால் தொடர்ந்து வந்த பாதிக்கப்பட்ட பெண்கள், பெரும்பாலும் நடிகைகள், அளித்த தகவல்கள் அவர்களை உலுக்கின. எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் தகவல்கள் வரத் துவங்கின. நடிகைகள் மீதான சுரண்டல்கள் பல விதமானதாக இருந்தன. பாலியல் சீண்டல்கள், வன்முறை, அத்துமீறல்கள், மிரட்டல்கள், ஊதிய விகிதாச்சாரத்தில் பாகுபாடு, அடிப்படை வசதிகள் மறுக்கப்படுத்தல் எனக் ஏராளமான பிரச்னைகளை அவர்கள் சந்தித்து வந்துள்ளனர். WCC அமைப்பைச் சார்ந்த நடிகை பார்வதி திருவோத்துவும் இதில் பங்கேற்று தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அனைத்தையும் தீர ஆராய்ந்து ஒரு அறிக்கை உருவாக்கப்பட்டு அரசின் பார்வைக்கு 2019 இல் சமர்ப்பிக்கப்பட்டது.

என்னதான் ரகசிய ஏற்பாடுகள் என்றாலும் கசிவு இருக்கத்தானே செய்யும். மிகவும் வசதி படைத்த வலிமையான திரையுலகப் பிரபலங்கள் இதை முடக்க தங்களால் ஆன முயற்சிகள் எடுக்கத்தான் செய்தார்கள். அரசியல் அழுத்தங்களும் வர ஆரம்பித்தன. அதன் பிறகு என்ன ஆனதென்றே சில காலம் தெரியவில்லை. ஆனால் இதை வெளியிடப் போராட்டங்கள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருந்தன. சட்ட ரீதியாகவும் இதை வெளியிட முயற்சிகள் எடுக்கப்பட்டன.

Mohanlal and Siddique and Ranjith

ஒரு வழியாகச் சில மாற்றங்களுடன் இந்த அறிக்கை கடந்த 19 ஆம் தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த ராஜினாமாக்கள். எப்போதும் போல ரஞ்சித்தும், சித்திக்கும் நாங்கள் குற்றமற்றவர்கள், இதைச் சட்ட ரீதியாகச் சிந்திப்போம் எனப் பொதுவாக அறிவித்துவிட்டு விலகிவிட்டனர். இவர்கள் ராஜினாமா போதாது என்று அம்மா அமைப்பின் தலைவர் நடிகர் மோகன்லால், மற்றும் நிர்வாகிகள் தார்மீகப் பொறுப்பேற்று கூண்டோடு ராஜினாமா செய்தனர். 

அந்த அறிக்கையில் இன்னாரென்று யார் பெயரும் குறிப்பிடப்பட்டதாகத் தெரியவில்லை. பல பகுதிகள் மறைக்கப்பட்டு (redacted) தான்  வெளியாகியிருக்கிறது என்று சொல்கிறார்கள். இருந்தும் இது பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி என்கின்றனர். "ஒரு அறிக்கையைப் படித்து வெளியிட ஒரு வருடம் போதாதா. இந்த ஐந்து வருட தாமதம் மிக அதிகம். இதில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த தகவல்களின் பேரில் தவறு செய்தவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். தங்கள் மேல் சுமத்தப்பட்ட களங்கங்கள் துடைக்கப்பட இதுவே வழி" என்கின்றனர் மூத்த நடிகைகள் பார்வதியும், ரேவதியும். 

"இது திரையுலகிற்கு மட்டுமான பிரச்னை அல்ல. அனைத்துத்துறைகளிலும் உள்ள பெண்கள் சந்திக்கும் பிரச்சினை. ஒரு பிரச்னை என்றால் அதை முளையிலேயே கிள்ளி எரிய முயற்சிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாகக் கவனத்திற்கு கொண்டு வந்தால் பெரிதாகாமல் தடுக்கலாம்" என்கிறார் நடிகை ஊர்வசி. 

நடிகை பார்வதி ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பேசும்போது மீடியாக்களும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். பெண்கள்மீதான தாக்குதல்களை மிகைப்படுத்தி எழுதிக் கவனம் ஈர்க்க முயற்சிக்கக் கூடாது. பெண் கற்பழிப்பு என்று தான் தலைப்பு போடுகிறார்கள். என்றாவது ஒரு நாள் பெண்ணை ஒரு ஆண் கற்பழித்தார் என்று  போடுகிறார்களா. கண்டிப்பாக மாட்டார்கள். இந்த நிலை மாற வேண்டும். அவர்கள் கஷ்டத்தைக் காசாக்க முயற்சிக்கும் நிலை மாற வேண்டும் என்கிறார்.  

இது போன்ற பிரச்னைகளில் பெண்கள் நிலைமை இன்னும் கவலைக்குரியதாகத் தான் இருக்கிறது. என்னதான் தைரியமாக அவர்கள் அதை எதிர்கொண்டாலும் சமூகப் பார்வை இன்னும் மாற வேண்டும். இந்தப் பிரச்னையை அரசு சுமுகமாக முடித்து வைக்க வேண்டும். அதற்கு நோக்கமும் நடவடிக்கைகளும் சரியாக இருக்க வேண்டும். தொடர்ந்து நடப்பதை வைத்துத் தான் இதன் முடிவை எதிர்நோக்க முடியும். இது மலையாளத் திரையுலகிற்கு  மட்டுமான பிரச்னை என்று பார்க்க முடியாது  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று எந்தப் படவுலகிலும்  இருக்கலாம்.  இதை அவர்கள் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு மாற்றத்தைக் கொண்டு வந்தால் போதும். அதுவே இந்த அறிக்கைக்கும்  இதற்கான முயற்சிகளை எடுத்த பெண்களுக்குமான வெற்றி.  

அடுத்த கட்டமாக ஒரு சிறப்பு விசாரணைக்குக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களுக்குத் தண்டனை உறுதி. பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகத் தங்கள் புகார்களை அளிக்கலாமெனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான கம்யூனிஸ்ட் எம் எல் ஏவும் நடிகருமான முகேஷ் முன் ஜாமீன் எடுத்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட பிற நடிகர்களும் அதற்கான ஏற்பாட்டில் உள்ளனர். பாபுராஜ், ஜெயசூர்யா, ரியாஸ் கான், எனப் பல நடிகர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.

மலையாள படவுலகமே கலகலத்து போயிருக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது வரும் நாட்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், விசாரணைகள்மூலம் தெரிய வரும். 

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

உங்க பெண் குழந்தைக்கு இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!  

நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?

உலகிலேயே விலையுயர்ந்த பாஸ்போர்ட் இதுதான்! இதன் விலை எவ்வளவு தெரியுமா?

SCROLL FOR NEXT