”கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்க்கு காரணம் |தேவையில்லை கணவன் மனைவியாக இருப்பதே ஒரு காரணம்தான் "என்ற யதார்த்தமான டயலாக்குடன் தொடங்குகிறது யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இறுகப்பற்று திரைப்படம்.
பொடன்ஷியல் ஸ்டூடியோ சார்பில் SR. பிரகாஷ் பாபு, SR பிரபு இந்த படத்தை தயாரித்துள்ளார்கள்.விவாகரத்து செய்ய முன் வரும் தம்பதிகளுக்கு தனது அலுவலகத்திலும், நீதிமன்றத்திலும் முறையான ஆலோசனைகள் வழங்கி சேர்த்து வைக்கும் பணியை செய்து வருகிறார் மித்ரா மனோகர்.
மித்ராவிடம், தனது மனைவி குண்டாக இருப்பதால் விவாகரத்து கேட்க வருகிறார் ஒருவர். தனது மனைவி தன்னை ஏன் வெறுக்கிறார் என்று காரணம் தெரியவில்லை என குழப்பதுடன் வருகிறார் மற்றொருவர். இவர்களின் பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு மனநல ஆலோசனைகளை தருகிறார் மித்ரா.
ஒரு கட்டத்தில் மித்ரா தனது கணவர் மனோகருடன் கருத்து மாறுபாடு ஏற்பட்டு பேசாமல் இருக்கிறார். இந்த மூன்று தம்பதிகளின் பிரச்சனை தீர்ந்ததா என்பதை கதையாக இல்லாமல் வாழ்வியலாக சொல்லி இருக்கிறார் டைரக்டர்.
கணவன் மனைவிக்கு மன நல ஆலோசனை என்ற விஷயம் படம் முழுக்க இருந்தாலும் பிரச்சாரமாக இல்லாமல் கதை மாந்தார்கள் வழியே நகர்கிறது. ஒரு ஆலோசகராக, மனைவியாக அழகான நடிப்பை தந்துள்ளார் ஷரத்தா ஸ்ரீநாத். இப்படி ஒரு ரோலில் விக்ரம் பிரபுவை முதல் முறையாக பார்க்கிறோம் என எண்ணும் அளவுக்கு அவரின் நடிப்பு உள்ளது. மனைவி எதை செய்தாலும் ஏற்று கொள்ளும் கணவனாக, வாழ்க்கையையும், தொழிலையும் பிரித்து பார்க்க தெரியாத மனைவியை பார்த்து தவிக்கும் போது ஒரு சரா சரி ஆணாகவும் தரமான நடிப்பை வழங்கி உள்ளார் விக்ரம் பிரபு. தனது ஈகோ உடைந்து அழும் போது விதார்த் ஒரு சிறந்த நடிகர் என்பதை உணர்த்துகிறார்.
தனது கணவனால் வெறுக்கப்படும் போது ஒரு சராசரி பெண்ணாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் அபர்நதி. ஸ்ரீ, சானியா இருவரும் சிறந்த நடிப்பை தந்துள்ளார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் உணர்வுகளை கடத்துகிறது. உங்கள் வாழ்க்கை துணையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இருந்தாலும் பிடிக்க ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும் இதை மனதில் வைத்து துணையின் கையை இறுக பற்றிக்கொள்ளுங்கள் என்கிறது இப்படம்.
விவாகரத்து செய்ய நினைக்கும் தம்பதிகள் இப்படத்தை பார்த்தால் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. தமிழ் சினிமாவில் தம்பதிகளின் அன்பின் தேவையை உணர்த்தும் படமாக வந்துள்ளது இறுகப்பற்று. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய படமாக இறுகப்பற்று இருக்கும் என்பது உறுதி.