தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பது இசை என்றால் அது மிகையாகாது. பாடல்களால் மட்டுமே சூப்பர் ஹிட் அடித்த படங்களும் இங்கு உண்டு. அவ்வகையில் திரைப்படங்களில் இசையமைப்பாளர்களின் பணி அபரிமிதமானது. யாராக இருந்தாலும் தொடக்க காலத்தில் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இன்று நாம் தேனிசைத் தென்றல் என அழைக்கும் தேவா அவர்களும், ஒருகாலத்தில் வாய்ப்புக்காக காத்திருந்தவர் தான். அவர் எப்படி, எந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானார் என்பது பலருக்கும் தெரியாது.
1986 ஆம் ஆண்டு வெளிவந்த மாட்டுக்கார மன்னாரு என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. இப்படத்திற்குப் பின் மனசுக்கேத்த மகாராசா, வைகாசி பொறந்தாச்சு மற்றும் நம்ம ஊரு பூவாத்தா என அடுத்தடுத்தப் படங்களில் இசையமைத்து, பாடல்களை ஹிட் ஆக்கினார்.
ரஜினியின் பிளாக் பஸ்டர் திரைப்படமான அண்ணாமலை மற்றும் பாட்ஷா போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் தேவா தான்.
மேலும் கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், அஜித் மற்றும் விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.
தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் 400 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் தேவா, திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
தேவாவின் முழுப்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம். இவர் தொடக்கத்தில் தனது பெயரை C. தேவா என திரைப்படங்களில் போட்டு வந்தார். மனசுக்கேத்த மகாராசா திரைப்படத்தில் ராமராஜனுடன் பணிபுரிந்தார் தேவா. அப்போது நடிகர் ராமராஜன், “அண்ணே நீங்கள் உங்கள் பெயரை C. தேவா எனப் போடாமல், தேவா என்று மட்டும் போடுங்கள். அந்த C தான் உங்களை கீழே இறக்கி விடுகிறது” எனக் கூறியிருக்கிறார்.
இதனைக் கேட்டுக் கொண்ட தேவா, மனசுக்கேத்த மகாராசா மற்றும் அடுத்து திரைக்கு வந்த வைகாசி பொறந்தாச்சு படங்களில் தேவா என மட்டும் தனது பெயரைப் போட்டுக் கொண்டார். இப்படத்தில் வரும் 'சின்னப் பொண்ணு தான்' பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்தப் படத்திற்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் தேவா பிரபலமடையாமல் தான் இருந்தார். எல்லோரும் வெற்றிப் பாதையில் பயணிக்க ஒரு நேரம் வர வேண்டுமல்லவா! அந்த நேரம் தேவாவுக்கு வைகாசி பொறந்தாச்சு படத்தில் தான் வந்தது.
“டீ குடிக்க கடைக்குப் போனால் கூட சின்னப் பொண்ணு பாட்டைத் தான் பலரும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். வைகாசி பொறந்தாச்சு படம் தான் தமிழ் சினிமாவில் என்னை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதற்கு ஒருவகையில் முக்கிய காரணம் ராமராஜன் தான். அவர் மட்டும் எனது பெயரை இப்படி போடச் சொல்லவில்லை எனில், தேவா என்ற பெயர் ரசிகர்கள் மனதில் அவ்வளவு எளிதாக இடம் பிடித்திருக்காது,” என தேவா சமீபத்தில் மனம் திறந்தார்.