சினிமா என்றாலே எல்லோருக்குமே அது ஒரு பெரும்கனவாக இருக்கும். நாமும் சினிமாத்துறையில் நுழைய முடியாதா என பலரும் ஏங்குவர். தனக்குள் பல திறமைகள் இருக்கிறது. அதனால் எப்படியாவது சினிமாவில் சாதித்துக் காட்ட வேண்டும் என்று பல இளைஞர்களும் இன்றளவும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த வரிசையில், தற்போது திரையரங்குகளில் சக்கைபோடு போடும் 'லவ் டுடே' என்ற திரைப்படத்தின் இயக்குநராகவும், நடிகராகவும் அறியப்படும் பிரதீப் ரங்கநாதன், தன்னுள் அபரிமிதான திறமைகள் இருந்தும் பல இடங்களில் அலைக்கழிக்கப்பட்டுள்ளதே இதற்கு சான்றாக உள்ளது.
'லவ் டுடே' கதை சிறப்பாக இருப்பதை உணர்ந்து, பிரதீப் முன்னதாக ஸ்டுடியோ க்ரீன் போன்ற பல முன்னணி தயாரிப்பாளர்களிடம் சென்றுள்ளார். ஆனால் அதற்கு சரியான வரவேற்பு கொடுக்காமல், அனைவருமே இவரை நிராகரித்துள்ளனர்.
இறுதியாக, ஏஜிஎஸ் நிறுவனத்தை பிரதீப் நாடினார். அங்கும்கூட இவர் எதிர்பார்த்தது கைகூடவில்லை. ஒரு சூழ்நிலையில், பிரதீப்பின் 'லவ் டுடே' கதையை ஏஜிஎஸ் நிறுவனத்தின் மகள் அர்ச்சனா படித்துப் பார்த்ததையடுத்து, அவருக்குள் பொறி தட்டவே, இப்படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் கொடுத்துவிடும் என்பதைப் புரிந்துகொண்டு, 'லவ் டுடே' படத்தை தயாரிக்க ஒப்புதல் வாங்கி கொடுத்துள்ளார். அவர் நினைத்தது போலவே படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி சக்கைபோடு போட்டு வருகிறது.
என்னதான் திறமையான விஷயங்கள் ஒருவரிடத்தில் இருந்தாலும், வளர நினைக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு என்பது இன்னும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. இளைஞர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கும் நல்ல வாய்ப்பு உடனே கிடைக்கும் பட்சத்தில், பிரதீப் போன்ற பல இயக்குநர்களும் திரைத்துறையில் புது சரித்திரம் படைக்க வாய்ப்பிருக்கிறது.