மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று நல்ல வசூலை ஈட்டியது. அந்தவகையில் இப்படம் குறித்து இயக்குநர் ராம் பேசுகையில், இந்தப் படத்தை நான் அப்போது மாரி செல்வராஜை எடுக்க வேண்டாம் என்று சொன்னேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான வாழை திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை படத்திற்கு நல்ல கமெண்ட்களை கொடுத்தார்கள். குறிப்பாக இயக்குநர் பாலா, தங்கதுறை போன்றவர்கள் படம் பார்த்து வந்து என்ன சொல்வதென்று தெரியாமல், மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து அழுதனர். வாழை திரைப்படத்தைப் பார்த்து பலரும் வாயடைத்துப்போனர். இது ஒரு உண்மைக் கதை, எனக்கு அனுபவம் உள்ள கதை என்று மாரி செல்வராஜ் கூறியிருந்தார்.
பின்னர் இப்படத்தின் மேக்கிங் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது. ஏனெனில், மாரி நடித்துக்காட்டிய ஒவ்வொரு காட்சியிலும் அவரது அனுபவம் பேசியது. இப்படி பல வழிகளில் இப்படத்திற்கும் மாரி செல்வராஜிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது என்றே கூற வேண்டும். பொதுவாக எப்போதும் கமர்ஷியல் மூவிஸ் மட்டுமே வசூல் வேட்டையில் களமிறங்கும். முதல்முறை இதுபோன்ற ஒரு படம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
அந்தவகையில் இப்படம் குறித்து இயக்குநர் ராம் பேசுகையில், ‘’மாரி எழுதுன முதல் ஸ்க்ரிப்ட் வாழை. நான் பண்ண வேணாம்னு சொன்னேன். முதல் படமே இத அவன் பண்ணி இருந்தா, எனக்கு கற்றது தமிழ் எடுத்து என்ன ஆச்சோ? அதுதான் அவனுக்கும் ஆகி இருக்கும். மாரி செல்வராஜ் எப்படி ஜெயிக்கணும்னு நெனச்சனா அவன் வணிகரீதியாக, பெரிய கதாநாயகர்களை உருவாக்கி. ஒரு தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி ஜெயிக்கணும்னு நினைச்சேன். அது இன்னைக்கு நடந்து இருக்கு.” என்று பேசியிருந்தார்.
மாரி செல்வராஜ் அதேபோல் சில படங்களை எடுத்து ஹிட் கொடுத்து வணிக ரீதியாக வெற்றிபெற்ற பிறகே, வாழை என்ற படத்தை இயக்கி விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றிருக்கிறார்.