புகழ்பெற்ற பாடகர்கள் திப்பு, ஹரிணியை பற்றி அறிமுகம் தேவையில்லை. அவர்கள் கால் நூற்றாண்டு காலமாக தென்னிந்திய திரைப்படங்களில் பிரபலமான பாடகர்கள். சமீபத்தில் அந்த தம்பதிகளின் மகனான சாய் அபியங்கர் தனது முதல் ஆல்பமான 'கட்சி சேர' பாடல் மூலம் அதிக பிரபலம் அடைந்தார். இந்த பாடல் வழக்கமான ஆல்பம் பாடல் போல இல்லாமல் திரைப்படத்தில் வரும் பாடலைப் போல அதன் இசைத்தரம் இருந்தது. சினிமா பாடல்களையும் தாண்டி அந்த பாடல் நல்ல ஒரு வெற்றியைப் பெற்றது .இந்த பாடலின் வெற்றிக்கு இசை ஒரு காரணம் என்றால், பாடலில் ஆடிய சம்யுக்தா விஸ்வநாதனின் நடன அசைவுகள் மற்றொரு காரணம்.
தனது முதல் பாடல் மூலம் சமூக வலைத் தளங்களில் கடுமையான ஆதிக்கம் செலுத்தினார் சாய். எங்கு பார்த்தாலும் ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ்களில் அவரது பாடல்கள் வைரல் ஆகிக் கொண்டே இருந்தது. கட்சி சேர பாடலின் ஆதிக்கம் முடியும் முன்னரே சாய் தனது அடுத்த ஆல்பம் 'ஆச கூட' பாடல் வெளிவந்தது. இந்த பாடல் மூலம் அவர் இன்னும் பெரிய வெற்றியை பெற்றார். பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டே உள்ளது.
சாய் அபியங்கரின் இரண்டு பாடல்களின் ஆதிக்கம் இன்னமும் குறையாத வேளையில் லோகேஷ் கனகராஜின் LCU-வில், அவரது கதை மற்றும் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஏழு பாடல்கள் உள்ளன.
இசைக் குடும்பத்தில் பிறந்ததால் சிறு வயதிலிருந்தே சாய் அபியங்கர் இசை மீது தீவிர ஆர்வத்தில் இருந்துள்ளார். அவரது பெற்றோர்கள் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இசை பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தினார்கள். பின்னர் சாய் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் திரைப்படங்களில் பிரோக்கிரமராக கோப்ரா, பொன்னியின் செல்வன் இரு பாகங்கள், லால் ஸலாம் படங்களில் பணிபுரிந்துள்ளார். பின்னர் 6 பாடல்களை உருவாக்கி வெளியிட காத்திருந்தார். 4 வருட காத்திருப்பிற்கு பின்னர் அவரது முதல் 'கட்சி சேர' வெளிவந்து பெறும் வெற்றியைப் பெற்றது.
லோகேஷின் யுனிவர்சில் இணைந்த சாய், “நான் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனை பேஷன் ஸ்டுடியோஸ் அலுவலகத்தில் சந்தித்தேன். பாக்கியராஜ் சாரைச் சந்திப்பதற்கு முன்பே எனக்கு பென்ஸைத் தெரியும், அவருடைய திரைப்படங்களுக்கு நான் தீவிர ரசிகன். பென்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒரு வருடத்திற்கு முன்பு பார்த்தேன். அதுவும் பெரிய ப்ராஜெக்ட் போல இருந்ததால், அதன் இசையைமைப்பாளர் யார்? என்று கற்பனை செய்தேன். கடவுளின் அருளால், அது நான்தான்" என்று கூறியுள்ளார்.