ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது.
2018ம் ஆண்டுக்குப் பிறகு ஷாருக்கான் நடிக்காமல் சற்று விலகி இருந்து சினிமாவை உன்னிப்பாக கவனித்து வந்தார். தனக்குப் பொருத்தமான கதைகளை எழுதும்படி சில இயக்குநர்களிடம் கேட்டிருந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கான் நடித்துள்ள பதான் ரிலீஸாவதால் பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பதான், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் பாட்ஷா, சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான் ரகசிய உளவாளியாக நடித்துள்ள பதான் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பதான், வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோனேவும் வில்லனாக ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரின் தமிழ் பதிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார். அதற்காக நடிகர் விஜய்க்கு, ஷாருக்கான் நன்றியும் தெரிவித்திருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘பேஷரம் ரங்’ பாடலில் தீபிகா படுகோன் காவி உடை அணிந்திருந்ததற்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை தடை செய்யவேண்டும் என கண்டனங்கள் எழுந்தன.
இதனால் பதான் திரைப்படத்துக்கு எதிராக பாய்காட் பிரசாராம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் ரிலீஸுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பதான்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஐமேக்ஸ் 2டிக்கான டிக்கெட்டுகள் 2,200 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. மும்பையில் 200 ரூபாய்க்கு தொடங்கி ரூ.1450 வரை டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. மும்பையில் சில திரையரங்குகள் ஒரு நாளைக்கு 15 காட்சிகள் திரையிடப்பட உள்ளன.
ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் பெரிய திரையில் ‘பதான்’ படத்தின் முன்பதிவு தொடங்கியதும் 120 நிமிடங்களுக்குள் 18,000 டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த டிக்கெட் முன்பதிவு தொடர்பாக பிவிஆர் சிஇஓ கமல் கியான்சந்தனி தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவிட்டுக்கு பிறகு இப்படியான முன்பதிவு நடைபெற்றதில்லை” என பதிவிட்டுள்ளார். ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் மாதம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
ரிலீஸுக்கு பின்னர் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.