சிவாஜி, வாணிஸ்ரீ, லதா ஆகியோர் நடிப்பில் வெளியான சிவகாமியின் செல்வன் திரைப்படம் 50 ஆண்டுகள் பிறகும் தற்போதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்திய விமானப்படை வீரரான சிவாஜி கணேசன், டாக்டரின் மகளான வாணிஸ்ரீயை விரட்டி, விரட்டி காதலிக்கிறார். திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கும்போது எதிர்பாராத விதமாக விமான விபத்தில் சிக்கி படுகாயமடைந்து விடுகிறார். முன்னதாக, ஒரு மழைநாள் இரவின் தனிமையை சிவாஜியுடன் பகிர்ந்துக்கொண்டதால் கருவுற்றிருக்கும் வாணிஸ்ரீ, மருத்துவமனைக்கு சென்று சிவாஜியை மரண படுக்கையில் சந்திக்கிறார்.
தன்னைப் போலவே வாணிஸ்ரீயின் வயிற்றில் வளரும் குழந்தை மகனாக பிறந்தால் அவனையும் விமானப்படை வீரனாக மாற்ற வேண்டும் என்ற வாக்குறுதியை அவரிடம் வாங்கிக்கொண்டு சிவாஜியின் இறுதிமூச்சு பிரிகிறது.
இப்படி சுவாரஸ்யம் கொண்ட இந்த படம் 50 வருடங்களுக்கு முன், 1974, ஜனவரி 26 ம் தேதி சிவகாமியின் செல்வன் வெளியானது. எம்ஜி ராமச்சந்திரனின் பேவரைட் நடிகைகளில் ஒருவரான லதா, சிவாஜியுடன் இணைந்து நடித்த ஒரே படம் என்ற அடையாளமும் இதற்கு உண்டு.
1969 ல் இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆராதனா படத்தின் ரீமேக் தான் சிவகாமியின் செல்வன்.
கடந்த 50 வருடங்களில் பலமுறை இப்படம் மறுவெளியீடு கண்டிருக்கிறது. புதிய படங்களுக்கு வரவேற்பு இல்லாத நிலையில், வசந்த மாளிகைப் போன்ற பழைய படங்களை சென்னை ஆல்பர்ட் திரையரங்கு திரையிட்டு வருகிறது. வார இறுதியில் இந்தப் படங்கள் ஹவுஸ்ஃபுல்லாகி வருகின்றன.
சிவகாமியின் செல்வன் படத்தின் ஞாயிறு மாலை காட்சிக்கு குவிந்த சிவாஜி ரசிகர்கள், அவரது படத்துக்கு மாலை அணிவித்து, சூடம்காட்டி வழிபட்டதுடன், ஆரவாரத்துடன் படத்தை கண்டுகளித்தனர். சமீப காலமாக ரீ ரிலீஸ் ட்ரெண்டாகி வரும் நிலையில், 50 வருடங்களுக்கு முன்பு வெளியான படத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.