சூர்யா 43 படமான புறநானூறு படத்தின் வேலைகள் ஆரம்பமாகிய நிலையில் அதற்கானப் படப்பிடிப்பிற்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது என்று இயக்குனர் சுதா கொங்கரா இணையத்தில் அறிவித்திருக்கிறார்.
சூர்யா மற்றும் சுதா கொங்கரா இணைந்து பணியாற்றிய சூரரைப்போற்று படம் நல்ல வரவேற்பைப்பெற்றது. மேலும் அப்படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷிற்கும் அந்தக் கூட்டணி ஒரு லக்கி கூட்டணியாக அமைந்தது. இதற்காக 2022ம் ஆண்டுச் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்தப் படம், சிறந்த இசையமைப்பாளர் என மொத்தம் ஐந்து தேசிய விருதுகளை இப்படம் குவித்தது.
விருதுகளையும் ரசிகர்களின் அன்பையும் வாரிக் குவித்துக்கொண்ட இந்தக் கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சென்ற ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு உண்மைக் கதையில் இணைகிறார்கள் என்று அறிவிப்பு வெளியானது. மேலும் படத்தின் தலைப்பு மற்றும் நடிகர்களின் அறிவிப்பும் வெளியானது.
அந்தவகையில் படத்தின் தலைப்பு புறநானூறு என்றும், இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகியோரும் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வந்தன. அதேபோல் இது ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் 100 வது படம் என்று அவர் ட்வீட் செய்து உற்சாகத்தைத் தெரிவித்தார்.
அந்த அறிவிப்புகளுக்குப் பின்னர் எப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றக் கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. சென்ற வாரம் முழுவதுமே இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 15ம் தேதித் தொடங்கவுள்ளதாகச் செய்தி வந்து இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது.
ஆனால் இதற்கு முன்னரே சூர்யா தனது லைனப்பில் பிஸியாக உள்ளதால் புறநானூறு படம் தள்ளிப்போவதாக அதிகாரப்பூர்வமற்றச் செய்திகள் வந்தன. மேலும் கங்குவா படத்தில் சூர்யா தற்போது பிஸியாக இருந்து வருகிறார். இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து புறநானூறு படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இணையத்தில் ஒரு அறிவிப்பை விட்டிருக்கிறார். அதாவது "புறநானூறு படத்திற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. இந்தக் கூட்டணி உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. ஆகையால் நாங்கள் உங்களுக்கு ஒரு சிறந்தப் படத்தைக் கொடுப்பதற்காக உழைத்து வருகிறோம். விரைவில் களத்தில் இறங்குவோம். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி" எனத் தெரிவித்து படப்பிடிப்புத் தேதி அறிவிக்காமல் 'விரைவில்' என்று முடித்துள்ளார்.
இதனால் இதுவரைப் படப்பிடிப்பு ஆரம்பமாகும் தேதிகளின் வதந்திகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.