C.I.D Sakunthala 
வெள்ளித்திரை

வில்லிக்கு அடையாளம் தந்த தமிழ் திரையுலகின் 'சிஐடி சகுந்தலா' காலமானார்!

சேலம் சுபா

மிழ்த் திரையுலகின் ஆரம்ப காலகட்டங்களில் கதாநாயகிகள் கிளாமராக நடிப்பதற்கு முன்பே தனது அலட்சியமான நடிப்பினாலும் அனாயசமான நடனத்தினாலும் கிளாமரான தோற்றத்தினாலும் அனைவரையும் கவர்ந்தவர் சிஐடி சகுந்தலா.

தமிழ்த் திரையுலகில் இவரின் பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. காரணம், நாடக நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, நடனக் குழுவில் இடம்பெற்று நடனக் கலைஞராகப் பணிபுரிந்து கதாநாயகிகளின் தோழியாக சிறு சிறு பாத்திரங்கள் ஏற்று அதன் பின் வில்லி பாத்திரத்தில் ஜொலித்து குணச்சித்திர நடிகையாக தனது பெயரை தமிழ்த் திரையுலகில் பதித்தவர்தான் சகுந்தலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் சிஐடி சகுந்தலா.

சாதாரண நடிகையான சகுந்தலா 1970ல் வெளிவந்த மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பான சிஐடி சங்கர் என்ற சாகசங்கள் நிறைந்த தமிழ்ப் படத்தில் நடிகர் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் 'சிஐடி' என்கிற அடைமொழியைப் பெற்று சிஐடி சகுந்தலாவாக ரசிகர்களிடம் அறியப்பட்டார்.

சேலம் அரிசிப்பாளையத்தில் பிறந்த இவருக்கு பழைய தமிழ்ப்படமான சகுந்தலையின் பெயரை பெற்றோர் சூட்டி அழகு பார்த்தனர். நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளுடன் பெரிய குடும்பத்தில் பிறந்த இவருக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம்.

தந்தை திருவெறும்பூரில் பணி புரிந்ததால் சகுந்தலா சென்னையில் லலிதா - பத்மினி - ராகினி நடத்தி வந்த நாடக நடன நிகழ்ச்சியில் நடனமாடி வந்தார். 'சூரியன் மேற்கேயும் உதிக்கும்' என்ற நாடகத்தில் நடித்ததன் மூலம் பலரது கவனம் பெற்று படிப்படியாக திரைத் துறையில் நுழைந்தார்.

சினிமாவில் ஆரம்ப நாட்களில் குழு நடனங்களிலும் சோலோவாக கிளாமர் நடனத்திலும் ஆடியவருக்கு மாடர்ன் தியேட்டர் அளித்த மாபெரும் வாய்ப்பாக அமைந்தது சிஐடி சங்கர் திரைப்படம். கதாநாயகியின் தோழி வேடத்தில் நடித்தவர் கதாநாயகியாக மாறினார். அதன் பின்னர் சிஐடி சகுந்தலாவிற்கு திரையில் பல வாய்ப்புகள் வந்தன.

அதிலும் குறிப்பாக சிவாஜி கணேசன் பார்வையற்றவராக நடித்த தவப்பதல்வனில் அவரைப் பழி வாங்கும் கொடூர வில்லியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து தில்லானா மோகனாம்பாள், கிரகப்பிரவேசம், படிக்காத மேதை, எங்க மாமா, வசந்த மாளிகை போன்ற பல சிவாஜி கணேசனின் வெற்றிப்படங்களில் இவரும் இணைந்து நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடனும் இவர் என் அண்ணன், இதய வீணை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார். நடிகர் சங்கத்தின் ஒற்றுமைக்காக குரலும் தந்துள்ளார். ஈரோடு கவிதாலயம் பயிற்சிப் பள்ளி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார் சகுந்தலா.

வெள்ளித்திரையிலிருந்து ஒதுங்கிய சகுந்தலா சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். பின்னர் அதிலிருந்தும் ஓய்வு பெற்று தனது மகள் செல்வியுடன் பெங்களூருவில் வசித்து வந்த நிலையில், தற்போது மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். இவரின் மறைவு செய்திக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரது அலட்சியமான உடல் மொழியும், அசத்தலான முகபாவனைகளுடனான நடனமும், வில்லிக்கு அடையாளம் தந்த அருமையான நடிப்பும் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்.

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

உங்க பெண் குழந்தைக்கு இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!  

நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?

உலகிலேயே விலையுயர்ந்த பாஸ்போர்ட் இதுதான்! இதன் விலை எவ்வளவு தெரியுமா?

SCROLL FOR NEXT