Thalaimai Seyalagam movie review in Tamil 
வெள்ளித்திரை

விமர்சனம்: தலைமை செயலகம் - ஓடிடி தளத்தில் மாறுபட்ட திரில்லர்!

ராகவ்குமார்

"அம்பேத்கரிய, மார்க்சிய, பெரியாரிய சிந்தனைதான் என் அரசியல்" என்று ‘தலைமை செயலகம்’ தொடரில் ஸ்ரேயா ரெட்டி சொல்லும் வசனத்தைப் பிரசாரமாகவோ, முழக்கமாகவோ இல்லாமல் ஒரு வாழ்வியல் தத்துவமாக சொல்லியிருக்கிறார் ‘தலைமை செயலகம்’ தொடரின் டைரக்டர் வசந்த பாலன்.

‘வெயில்’, ‘அங்காடி தெரு’ படங்களில் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைச் சொன்னவர், இந்த தலைமை செயலகத்தில் திரில்லர் அரசியல் களத்தில் அசத்தியிருக்கிறார்.

கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, சந்தான பாரதி, Y.G. மகேந்திரன், விபின், ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்தத் தொடரை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார். Z 5 ஒரிஜினல் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தத் தொடருக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் கிஷோர் ஓர் ஊழல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை பெறும் நிலையில் உள்ளார். இவர் சிறை சென்ற பின் முதல்வர் பதவியைப் பிடிக்க கிஷோரின் மகள் ரம்யா நம்பீசன், மருமகன் மற்றும் அட்வைஸர் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் போட்டி போடுகிறார்கள். ஒரு பக்கம் தன் தந்தையை தண்டனையில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறார் ரம்யா. சிபிஐ அதிகாரிகள் துர்கா என்ற கொலை குற்றவாளி பெண்ணைத் தேடி ஜார்கண்ட், டெல்லி செல்கிறார்கள். இதே வழக்கை பரத் அவர்களும் தமிழ்நாட்டில் விசாரணை செய்கிறார். இரண்டு தளங்களில் பயணம் செய்யும் கதை ஒரு கட்டத்தில் இணைந்து பயணம் செய்கிறது.

முதல் காட்சியில் ஜார்கண்ட்டில் ஒரு பெண் தன்னைத் துன்புறுத்தும் ஆண்களை வெட்டி வீழ்த்தும்போதே இது வழக்கமான வசந்தபாலன் படமல்ல என்று புரிந்து விடுகிறது. எட்டு எபிசோடுகளைக்கொண்ட இந்தத் தொடர் முதல் எபிசோடில் இருந்து கடைசி வரை கண்ணை அப்படியும், இப்படியும் நகர்த்தவிடாமல் பரபரப்பாக நகர்கிறது. இதுபோன்ற அரசியல் திரில்லர் புதிய அனுபவமாக இருக்கிறது.

Thalaimai Seyalagam movie review in Tamil

பெரும்பாலும் வில்லனாக நடிக்கும் கிஷோர் எப்படி ஒரு பக்குவமான முதல்வராக நடித்திருக்கிறார்? என வியந்து பாராட்டுகிறோம்! ஒரு மூத்த அரசியல்வாதியாகவும், ஒரு குடும்ப தலைவனாகவும் நுண்ணிய உணர்வுகளைக் காட்டி சபாஷ் கிஷோர் எனச் சொல்ல வைக்கிறார்.

கொற்றவை கேரக்டருக்கு ஸ்ரேயா ரெட்டியை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாக நடித்திருப்பார்களா? என்பது சந்தேகமே. ஆக்ரோஷமும், அன்பும் கலந்து ஒரு லைவ் கேரக்டரில் வாழ்ந்து காட்டிவிட்டார் ஸ்ரேயா.

இது வரை சந்தானபாரதியை வந்தார், நடித்தார் என்பது போன்ற ‘கெஸ்ட்’ ரோலில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தத் தொடரில் தன் முழு நடிப்புத் திறமையையும் காட்டி அசத்தியுள்ளார் என்று சொல்லலாம். ஒரு வயதான அரசியல்வாதியின் நடிப்பைச் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார். ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், Y G மகேந்திரன் என நடித்தவர்கள் அனைவருமே சரியான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

ஜிப்ரானின் இசை, வொய்ட் ஆங்கிள் ரவிசங்கரின் ஒளிப்பதிவு, ரவிக்குமாரின் படத்தொகுப்பு இந்த மூன்றும் சேர்ந்து திரில்லர் திரைக்கதைக்குப் பலம் சேர்க்கிறது. இந்தப் படத்தில் வரும் கேரக்டர்கள் எந்த ஒரு நபரையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்டது இல்லை என இந்தத் தொடரின் அறிமுக விழாவில் கூறினார் வசந்தபாலன். ஆனால், இந்தத் தொடரைப் பார்க்கும்போது வாழ்ந்து மறைந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் நினைவில் வருகிறார்கள்!

என்னைப் பொருத்தவரை, கிஷோர் கேரக்டரைப் பார்க்கும்போது காமராஜர், எம்.ஜி.ஆர், கருணாநிதி என மூவரின் நினைவும் வருகிறது. கிஷோர் - ஸ்ரேயா ரெட்டி நட்பைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இருவரும் ஒரு சேர நினைவுக்கு வருகிறார்கள். அரசியல் ஏஜெண்டுகளைப் பார்க்கும்போது மத்தியில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைகள் நினைவுக்கு வந்து விடுகிறார்கள். வாரிசு அரசியல் போட்டியைப் பார்க்கும்போது அட இது தமிழ்நாட்டுக்கு புதுசு இல்லையே என்று சொல்ல வைக்கிறது. ஹெலிகாப்டர் விபத்து காட்சியில், மறைந்த முதல்வர் மனதில் வந்து போகிறார். சந்தான பாரதியை பார்க்கும்போது பேராசிரியர் அன்பழகன் நினைவு வருகிறது.

கடைசியாக ஒரு விஷயம், இந்த வெப் தொடரைப் பார்க்க அமரும்முன் சாப்பிடுவிட்டு அமருங்கள். ஏனெனில் தொடர் நகரும் பரபரப்பில் நீங்கள் சாப்பாட்டை மறந்து விடலாம்!

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT