தமிழ் மக்களின் பெரும் அரவணைப்பில் ரஜினிகாந்த் இன்று 72வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் டிசம்பர் 10ம் தேதி ரஜினியின் 'பாபா' ரீ ரிலீஸ் செய்யப்பட்டு முதல் நாளே கோடிக்கும் மேல் வசூலையும் அள்ளிக் குவித்துள்ளது.
டிசம்பர் 12 வந்தாலே ரஜினி ரசிகர்களின் சந்தோஷத்தை வரையறுக்கவே முடியாது. விதவிதமான ரஜினியின் வேடங்களை அணிந்து சந்தோஷப்பட்டுக் கொள்வது, விதவிதமான கட்-அவுட்கள் வைத்து பிரபலப்படுத்துவது என ரசிகர்கள் ரஜினியின் பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடுவார்கள். அதிலும் தற்போது தியேட்டர்களில் 'பாபா' திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாகவே அமைந்துள்ளது.
தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ள 'பாபா' திரைப்படம் ரஜினிக்கு முக்கியமான படமாகவும் பார்க்கப்பட்டது. அதில் அரசியல் சார்ந்த காட்சிகளும் பல இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், ரஜினி ஆன்மிக அரசியலை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் அரசியலுக்கு வரமாட்டேன் என வெளிப்படையாகவே கூறியிருந்தார். அதனால் தற்போது வெளியாகியுள்ள 'பாபா' திரைப்படத்தில் அரசியல் காட்சிகள் உட்பல பல காட்சிகள் நீக்கப்பட்டு தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், என்னென்ன காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.
1) ரஜினியின் அறிமுக காட்சி நீக்கப்பட்டு, 'பாபா வந்துட்டு இருக்கான்' என சுஜாதா சொல்வதுடன் 'டிப்பு டிப்பு' பாடலுடன் ஆரம்பமாகிறது.
2) வாலிபால் கோர்ட்டில் ரியாஸ்கானுடனான சண்டைக்காட்சி எடிட் செய்யப்பட்டுள்ளதோடு, பாபா கவுண்டிங் ஸ்டார்ட் மற்றும் குடிப்பது போன்ற காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.
3) மனிஷா கொய்ராலாவுடன் ரஜினி ஆட்டோவில் வந்திறங்கும் காட்சியில் ஆட்டோக்காரரிடம் ரஜினி பேசுவதும், அதற்கு 'உன்ன விட்டு போவேனா தலைவா' என்று சொல்லும் காட்சி நீக்கப்பட்டுள்ளது.
4) வில்லன் ஆஷிஷ் வித்யார்த்தியின் ஆட்கள் பாபாவை அழைத்து வர தங்களை அனுப்பியதை ரஜினியிடம் தெரிவித்ததும், 'இப்பவே பாக்கணும்னு சொன்னாங்களா? இப்பவே வரேனு' சொல்றதும், 'எந்த வீடு? சவுகார் பேட்டையா, சைதாப்பேட்டையா?'னு கேட்கும் காட்சியும் நீக்கப்பட்டுள்ளது.
5) மந்திரங்களை ஏழு முறை பயன்படுத்தலாம் என பாபாஜியால் ரஜினியிடம் சொல்லப்படும். ஆனால் தற்போது அது ஐந்தாக குறைக்கப்பட்டிருக்கும். அதனால் ஜப்பான் பெண்ணின் காட்சிகள் முழுவதும் நீக்கப்பட்டிருக்கும்.
6) மிகவும் பிடித்த காட்சியான நீ யாரு நீ யாரு என மனிஷா கொய்ராலாவை பெண் பார்க்க வரும் ஒவ்வொருவரிடமும் கேட்டு அவர்களை அனுப்பும் காட்சியும் நீக்கப்பட்டுள்ளது.
7) மார்க்கெட்டில் படையப்பா நீலாம்பரியான ரம்யாகிருஷ்ணன் ரஜினியிடம் டைம் கேட்கவேண்டும் என்று எண்ணி ஒருமுறை மந்திரத்தை பயன்படுத்துவார். அந்த காட்சியும் இடம்பெறவில்லை.
8) அதேபோல் மந்திரங்கள் 7ல் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டதால், 'ராஜ்யமா' பாடலில் இருந்து 'இவன் வசம் இருந்தது ஏழு வரம். ஏழும் இன்று தீர்ந்தாச்சு, கைவசம் ஒரு வரம் இல்லையடா காப்பதேது தாய் மூச்சு' என்ற வரிகளும் நீக்கப்பட்டுள்ளன.
9) யார் முதலமைச்சராக வருவது என எண்ணி பாபா மந்திரத்தை பயன்படுத்தும்போது, நான் முதல்வராக தயார் என கவுண்டமணி டெல்லி கணேஷ் இருவரும் போட்டி போடும் காட்சியில் கவுண்டமணி டெல்லிகணேஷை கிண்டல் செய்யும் காட்சி இடம்பெறவில்லை.
10) தான் இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால், 'சக்தி கொடு' பாடலில் இடம்பெற்ற முக்கிய வரியான 'முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன், முன்வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்' என்ற வரிகள் நீக்கப்பட்டுள்ளன.
11) க்ளைமேக்ஸில் இமயமலைக்கு செல்லும் ரஜினி பாபாஜியிடம் தன்னை உங்கள் சிஷ்யனாக ஏற்கும்படி கேட்கும் போது, 'நான் வைத்த பரீட்சையில் நீ ஜெயித்தாலும் தாயோட மனச நோகடிச்சுட்ட. தாயை சந்தோஷமா வச்சிக்கலைன்னா மோட்சம் கிடைக்காது. அடுத்த ஜென்மத்துலயும் உன் தாய்க்கே மகனாக பிறந்து அவரது விருப்பத்தை நிறைவேற்றினா அப்போ நான் உன்னை அழைக்கிறேன்' என கூறும் காட்சிகள் வரை முழுக்க மாற்றப்பட்டுள்ளது.
இப்படி நிறைய பிடித்த காட்சிகள் நீக்கப்பட்டது ரசிகர்கள் சிலருக்கு வருத்தத்தை கொடுத்திருந்தாலும், ரசிகர் கூட்டத்திற்கு குறையே இல்லாமல் 'பாபா' படம் ரீ ரிலீஸ் ஆகி ரசிகர்களை மகிழ்வித்தது என்னவோ உண்மைதான்.