Thuppakki Re-Release 
வெள்ளித்திரை

மீண்டும் திரைக்கு வரும் துப்பாக்கி: உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான துப்பாக்கி திரைப்படம் மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. கில்லியைத் தொடர்ந்து துப்பாக்கியும் ரீ-ரிலீஸில் சாதனை படைக்குமா மற்றும் இதனால் பாதிக்கப்படப்போவது யார் என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.

கடந்த சில மாதங்களாக ரீ-ரிலிஸ் படங்களின் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் சிறு பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படுகின்றன என ஒரு தரப்பினர் குரல் கொடுத்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ரீ-ரிலீஸ் படங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டேதான் இருக்கின்றன. அவ்வகையில் கடந்த மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட விஜயின் கில்லி திரைப்படம், அதிகளவில் வசூலை வாரிக் குவித்தது. இதனால், பலரும் தங்களின் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்து மெகாஹிட் வெற்றியைப் பெற்ற துப்பாக்கி திரைப்படம் மீண்டும் ரிலீஸாக உள்ளது.

இந்த செய்தி தியேட்டர் உரிமையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் வேண்டுமானால் நற்செய்தியாக இருக்கலாம். ஆனால் தியேட்டர்கள் கிடைக்காமல் தள்ளாடும் சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களுக்கு பெருத்த அடியாக பார்க்கப்படுகிறது. தற்போது தான் நல்ல கதையைக் கொண்ட அதிக அறிமுகம் இல்லாத இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இம்மாதிரியான சூழலில் ஏற்கனவே பெருவெற்றியைப் பெற்ற பெரிய நடிகர்களின் படங்கள் மீண்டும் ரிலீஸாகி, சிறு பட்ஜெட் படங்களை நேரடியாகவே தாக்குகின்றன. இதனால், வளர்ந்து வரும் நடிகர்களும், இயக்குநர்களும் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

வருகின்ற ஜூன் மாதம் 22 ஆம் தேதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இளைய தளபதி விஜயின் பிறந்தநாள் வருகிறது. இதனையொட்டி துப்பாக்கி படத்தின் ரீ-ரிலீஸ் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. பிறந்தநாளுக்கு முந்தைய நாளான ஜூன் 21 ஆம் தேதி துப்பாக்கி படம் மீண்டும் திரையிடப்பட உள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முதன்முறையாக விஜய் நடித்த திரைப்படம் துப்பாக்கி. விஜய் படம் என்றாலே வழக்கமாக இருக்கும் சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தில் இருக்காது. மிகவும் நேர்த்தியான கதையம்சத்துடன் ரசிகர்களுக்கு எங்கும் சலிப்புத் தட்டாமல் கச்சிதமாக எடுத்திருப்பார் இயக்குநர். மேலும், விஜயை ஒரு புதிய பரிணாமத்தில் ரசிகர்கள் பார்த்ததும் இப்படத்தில் தான். அதனாலேயே இப்படம் மெகா வெற்றியைப் பதிவு செய்தது.

படத்திற்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்களை அனைவரும் ரசிக்கும் விதமாக இசையமைத்திருப்பார். இப்படம் ரிலீஸ் ஆகி 12 வருடங்கள் ஆகப் போகிறது. அப்போதே சுமார் 125 கோடி ரூபாயை வசூலித்து சாதனைப் படைத்தது. இப்போது மீண்டும் ரிலீஸ் ஆவதால், எத்தனை கோடி வசூலிக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே ரிலீஸான கில்லி திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததால், துப்பாக்கி ரீ-ரிலீஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT