அது 90-களின் காலகட்டம். நேர்மையான ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வேலை பார்த்ததாக காவல் துறை கைது செய்து, சிறையில் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானர் நம்பி.
பல்வேறு பத்திரிகைகள் இவரை மிக மோசமாக சித்தரித்தன. நம் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளில் ஒருவர் நம்பி நாராயணனின் ஜாதியையும் சேர்த்து வசை பாடினார். சில ஆண்டுகளுக்கு பின்பு நம்பி தன் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்பதையும், அதிகார வர்க்கம் தன்னை பழி வாங்கவே இவ்வாறு செய்தது என்பதையும் நீதிமன்றத்தில் நிரூபித்து விடுதலை ஆனார்.
விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த இந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து நடிகர் மாதவன் "ராக்கெட்ரி -தி நம்பி எபெக்ட் " என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட விஞ்ஞானி நம்பியாக மாதவனே நடிக்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் துபாயில் வெளியிடப்பட்டது.
''காலம் கடந்து தாமதமாகக் கிடைக்கும் நீதி அநீதிக்கு சமம் என்பார்கள்.நம்பிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு வெள்ளித்திரையில் நியாயம் தேடி தர முயற்சித்திருக்கிறோம்'' என்று உணர்வுபூர்வமாக பேசினார் நடிகர் மாதவன். இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு விஞ்ஞானி நம்பி நாரயணன் வந்திருந்தது குறிப்பிடத் தக்கது.