வெள்ளித்திரை

கெடுதல் செஞ்சா சாக்லேட் கொடுங்க:‘ஓ மை டாக்’ பட விமரிசனம்!

கல்கி

-லதானந்த்

குழந்தைகளுக்கான தமிழ்த் திரைப்படங்கள் வெளிவருவது எப்போதாவது தான் நிகழும். அப்படி 'ஓ மை டாக்' முழுக்க முழுக்கக் குழந்தைகளுக்கான திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. ஒரு சிறுவனுக்கும் நாய்க்குட்டி ஒன்றுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்!

பார்வைத் திறனின்றிப் பிறந்த நாய்க் குட்டி ஒன்றைக் கொல்லச் சொல்லிவிடுகிறார் அதன் உரிமையாளர். அது பாசக்கார சிறுவன் ஒருவனிடம் தஞ்சம் அடைகிறது. அதைக் கொல்வதற்கு வில்லனின் கையாட்கள் முயல்கிறார்கள். அவர்களிடமிருந்து அந்த நாய்க் குட்டியைக் காப்பாற்றி, அதற்குப் பார்வை கிடைக்கும் வகையில் அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, பயிற்சியளித்து போட்டியிலும் வெற்றிபெறச் செய்கிறான் அந்தச் சிறுவன். 

எவ்விதத் திருப்பங்களும் இல்லாமல் ஆற்றொழுக்கு போல நகர்கிறது திரைக்கதை. விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் பேரன் ஆர்னவ் விஜய் என மூன்று தலைமுறை நடிகர்களும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கின்றனர். வாழ்க்கை பற்றிய அந்த மூவரின் வெவ்வேறான கண்ணோட்டங்களும் சிறப்பாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

வாழ்க்கையின் யதார்த்தங்கள் உணர்ந்தவாராக விஜயகுமாரும், பாசத்துக்கும் பணச் சிக்கலுக்கும் இடையில் பரிதவிக்கும் மிடில் கிளாஸ் மனிதராக அருண் விஜயும், நாய் மீது அளவற்ற அன்பு செலுத்தும் சிறுவனாக ஆர்னவும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். பக்கத்து வீட்டுப் பாப்பா போல மஹிமா நம்பியார் இயல்பாக வளையவருகிறார்.

சேற்றில் விழுந்த பார்வையில்லாத குட்டி நாய் மோப்ப சக்தியின் மூலமே சிறுவன் ஆர்னவ் வீட்டுக்கு வந்துசேருவது சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

"நமக்குக் கெடுதல் செய்தவங்களுக்கு ஒரு சாக்லெட் கொடுங்க" என்று ஆசிரியை போதிப்பது சாதாரணமாகத் தோன்றும். ஆனால் அது பொருள் பொதிந்த வாசகம் என்பது கிளைமேக்ஸில் புரிகிறது.

பார்வையின்றிப் பிறந்த நாய்க் குட்டியைக் கொல்லுவதற்காக வில்லன் சொல்லும் காரணம் வலுவாக இல்லை. நாயைப் கொல்ல முயற்சிக்கும் அபத்தக் காமெடி வில்லன்களை இன்னும் கொஞ்சம் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

கீழ்ப்படிதல், சாப்பிடுதல், ஓடுதல், சுறுசுறுப்பாக இயங்குதல் (Agility)  போன்ற போட்டிகளில் கலந்துகொள்ளும் நாய்கள் செய்யும் சாகசங்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. 

இணையத்தில் நன்கு அறிமுகமான கேபிள் சங்கர்  ஒரு சிறிய பாத்திரம் ஏற்றிருக்கிறார். ஆனாலும் அந்தக் காட்சி குறிப்பிடும்படி இருக்கிறது.

படத்தில் சிறுவனுக்கும், காமெடி வில்லன்களுக்கும் வரும் இரு கனவுக் காட்சிகளும் வலிந்து புகுத்தப்பட்டனபோலத் தெரிகின்றன.

ஆரம்பத்தில் காட்டப்படும் குட்டி நாயே பெரிதானதா அல்லது இரண்டும் வெவ்வேறானவையா எனக் கண்டுபிடிக்க முடியாதபடி இரண்டுக்கும் அப்படியொரு உருவ ஒற்றுமை!

மொத்தத்தில், 'ஓ மை டாக் ' : குழந்தைகளைக் கவரும் படம்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT