Uyir Thamizhukku Movie Review 
வெள்ளித்திரை

விமர்சனம்: உயிர் தமிழுக்கு - சமகால அரசியல் நையாண்டி!

ராகவ்குமார்

"சட்டமன்ற உறுப்பினர்,எம் பி தேர்தலில் கூட ஜாதி பார்க்கறதில்லை .ஆனா இந்த உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் ஜாதி பார்த்துத்தான் ஓட்டு போடுகிறான் . ஜாதிக்கு அடிப்படை இந்த உள்ளாட்சித் தேர்தல்தான் . நான் பதவிக்கு வந்தால் இந்த உள்ளாட்சித் தேர்தலை என் தலைவர் (எம்.ஜி.ஆர்) மாதிரி கேன்சல் பண்ணிடுவேன்." என்று உயிர் தமிழுக்கு படத்தில் அமீர் சொல்லும் வசனம் நம்மை யோசிக்க வைக்கிறது .

அமீர் ஹீரோவாக நடித்துள்ள உயிர் தமிழுக்குப் படத்தை ஆதம் பாவா இயக்கி தயாரித்துள்ளார் .

கேபிள் தொலைக்காட்சி தொழில் செய்து வரும் பாண்டியன் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எதிர்க் கட்சி சட்டமன்ற உறுப்பினரின் (ஆனந்தராஜ்) மகளான தமிழ் செல்வியை (சாந்தினி ஸ்ரீதர் ) காதலிக்கிறார். தனது காதலில் ஜெயிக்க அரசியலில் இறங்குவதுதான் சரி என நினைத்து உள்ளாட்சித் தேர்தலில் நிற்கிறார். இவர்களது காதலை ஏற்றுக் கொள்ளாத சட்டமன்ற உறுப்பினர் தனது மகள் தமிழைப் பாண்டியனுக்கு எதிராக நிறுத்துகிறார். இதற்கிடையில் சட்டமன்ற உறுப்பினர் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலைப்பழி பாண்டியன் மேல் விழுகிறது. இந்த கொலைப்பழியிலிருந்து பாண்டியன் மீண்டாரா? தமிழ் - பாண்டியனின் காதல் கை கூடியதா என்பதே படத்தின் கதை.

Uyir Thamizhukku Movie Review

சிவகார்த்திகேயன், விமல், தனுஷ் இவர்களால்தான் நகைச்சுவை கலந்த கதையில் நடிக்க முடியுமா? என்னாலும் முடியும் என்று சொல்லி அடித்திருக்கிறார் அமீர் .கேங்ஸ்டர் கதையில் நடித்து வந்த அமீர் இதில் நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார். சமாதியின் முன் தியானம் செய்வது, சம கால அரசியலைக் கிண்டல் செய்வது என காட்சிக்குக் காட்சி சிரிக்க வைக்கிறார்.

சமீப காலமாக நகைச்சுவை செய்து வரும் ஆனந்த ராஜ் இப் படத்தில் கொஞ்சம் வில்லத்தனம் செய்திருக்கிறார். சாந்தினி ஒரு அரசியல்வாதியின் மகளாக, ஒரு அரசியல்வாதியாக நன்றாக நடித்திருக்கிறார். இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு எனச் சிலர் அவ்வப்போது வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்.

அரசியலில் இறங்கும் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகன் என்ற ஒன் லைன் கதை. ஆனால் அரசியலில் சம கால அரசியலை நையாண்டி செய்து, அனைவரும் ரசிக்க கூடிய ஒரு ஜனரஞ்சகமான நகைச்சுவை பொலிடிகல் சட்டயர் படமாகத் தந்துள்ளார் ஆதம் பாவா. ஆங்காங்கே சிறிது பிசிறு தட்டினாலும் நம்மை மறந்து சிரித்து விடுகிறோம்.

இப்படம் 2024 ஆம் ஆண்டின் அமைதிப்படை என்று தைரியமாகச் சொல்லலாம். அமைதிப்படையில் சத்தியராஜ், மணிவண்ணன் இருவரும் சேர்ந்து செய்த வேலையை உயிருக்குத் தமிழ்ப் படத்தில் அமீர் ஒருவரே செய்திருக்கிறார்.

ஒரு நாடக பாணி அரசியல் படத்திற்கு எந்த அளவு கேமரா ஒர்க் இருக்க வேண்டுமோ அந்த அளவு ஒளிப்பதிவு இருக்கிறது. வித்யாசாகர் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் படி உள்ளன. குறிப்பாக எம்.ஜி.ஆரை புகழ்ந்து பாடும் பாடல் மிக நன்றாக இருக்கிறது. இந்த பாடல் இடம் பெறும் போது இது மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் என்று திரையில் போடுகிறார்கள். வீ மிஸ் யு எஸ்.பி.பி சார்.

பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இன்றைய சூழலில் அதிக சென்சார் கட் இல்லாமல், சம கால அரசியலைக் கேலியும் கிண்டலுமாக சொல்லும் உயிர் தமிழுக்காக படத்தை குடும்பத்துடன் ரசிக்கலாம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT