"சாமியே இல்லைன்னு சொல்லிகிட்டு திரிஞ்சயே அந்த ராமசாமி தான நீ " என்ற சென்சிடிவ் வசனம் இடம் பெற்ற சந்தானம் நடித்த வடக்கு பட்டி ராமசாமி படத்தை கார்த்திக் யோகி இயக்கி உள்ளார்.
வடக்குபட்டி கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் அம்மன் கோவில் கட்டி மூட நம்பிக்கை வளர்த்து ஊர் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார் ராமசாமி. இதை தெரிந்து கொள்ளும் தாசில்தார், கோவில் வருமானத்தில் பங்கு கேட்க அதனை ராமசாமி மறுக்க ஊரில் இரண்டு குடும்பங்களை மோத விட்டு கோவிலை இழுத்து மூடி விடுகிறார் தாசில்தார்.
கோவிலை மீண்டும் திறக்க ராமசாமி செய்யும் தகுடு தத்தம் வேலைகள்தான் இந்த வடக்கு பட்டி ராமசாமி. படத்தின் முதல் இரண்டு காட்சிகள் தவிர்த்து, மற்ற அனைத்து காட்சிகளும், நகைச்சுவை நீக்கமற நிறைந்துள்ளது. ஒரு காமெடிக்காக சிரிக்கும் போதே அடுத்த காமெடி வந்து சிர்க்க வைத்து விடுகிறது.
சந்தானம் மற்ற படங்களில் நடித்தது போலவே நடித்துள்ளார். ஆனால் பல நடிகர்கள் நகைச்சுவை செய்ய இடம் தந்துள்ளார். சேசு, மாறன், சாமிநாதன் இன்னும் பல லொள்ளு சபா நடிகர்களுக்கு நிறைய ஸ்கோர் செய்ய டைரக்டரும், சந்தானமும் வாய்ப்பு தந்துள்ளார்கள். சேசு உடல் மொழியிலும், மாறன் டயலாக் டெலிவரியிலும் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்கள். ஜான் விஜய், ரவி மரியா, மிஸ் பாஸ்கர், கூல் சுரேஷ் மொட்டை ராஜேந்திரன் என பல நடிகர்கள் சேர்ந்து திரையில் நகைச்சுவை திருவிழாவை நடத்துகிறார்கள்.
மாறுபட்ட நிழல்கள் ரவியை பார்க்க முடிகிறது. தீபக்கின் ஒளிப்பதிவில் வடக்கு பட்டி அழகாக உள்ளது. சான் ரோல்டனின் இசை சிறப்பு. இவன் கடவுள் இல்லை என்று சொல்லும் ராமசாமி இல்லை. கடவுள் பெயரில் உள்ள மூட நம்பிக்கைகளை விமர்சனம் செய்யும் ராமசாமி. சந்தானத்தின் இந்த வடக்கு பட்டிக்கு குடும்பத்துடன் வந்தால் நிறைய சிரிக்கலாம்.