vaathi movie 
வெள்ளித்திரை

‘வாத்தி’ விநியோக உரிமை – வதந்தியும், உண்மையும்!

லதானந்த்

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் ‘வாத்தி’. தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தின் "வா...வாத்தி" பாடல் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்தத் திரைப்படத்தின் விநியோக உரிமை சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது.

வாத்தி திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் எனப் பட நிறுவனம் செப்டம்பர் 19ஆம் தேதி தங்களுடைய சமூகவலைதள பக்கத்தில் அறிவித்திருந்தது. படத்தை வாங்க ஆர்வம் காட்டிய விநியோகஸ்தர்களிடமும் டிசம்பர் 2ஆம் தேதி உறுதியாகப் படம் வெளிவரும் எனச் சொல்லப்பட்டது. இதனை நம்பிய ‘ஆரண்யா சினி கம்பைன்ஸ்’ என்ற நிறுவனம் சிட்டி, என்.எஸ்.சி நீங்கலாக 5 ஏரியாக்களுக்கு விநியோக உரிமையை கேட்டது. இதற்கான விலை ரூ.8 கோடி எனப் பேசி முடிக்கப்பட்டு, ரூ.3 கோடி முன்பணம் அக்டோபர் 18ஆம் தேதி வழங்கப்பட்டது. அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி என்பதால், தீபாவளிக்குப் பிறகு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் எனத் தயாரிப்பாளர் தரப்பு கூறியதை விநியோக நிறுவனம் ஏற்றுக்கொண்டது. ஆனால் சொன்னபடி தயாரிப்பு நிறுவனம் தீபாவளி முடிந்து, இரு வாரங்கள் கடந்தும் ஒப்பந்தத்தைத் தரவில்லை.

vathi

விநியோக நிறுவனம் கொடுத்த அழுத்தம் காரணமாக நவம்பர் 6ஆம் தேதி, ஒப்பந்தத்தின் மாதிரியை அனுப்பிய தயாரிப்பு நிறுவனம், படம் ஏப்ரல்

அல்லது பிப்ரவரி மாதம் வெளியாகும் எனச் சொன்னது. உடனடியாக மறுப்புத் தெரிவித்த விநியோக நிறுவனம், கவர்ச்சிகரமான வட்டி அடிப்படையில் பணம் கடனாகப் பெறப்பட்டு, முன்பணம் அனுப்பப்பட்டுள்ளதால் பல மாதங்கள் காத்திருக்க இயலாது என்றும், சொன்னபடி டிசம்பர் 2ஆம் தேதி படத்தை வெளியிடவேண்டும் என்றும், இல்லையென்றால் முன் பணத்தை உடனடியாகத் திருப்பித்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

படத்தை டிசம்பர் 2ஆம் தேதி வெளியிடத் தயாரிப்பாளர் விரும்பாததால் முன்பணத்தை உடனே திருப்பித் தந்துவிடுவதாகவும், வட்டி எதுவும் தர முடியாது எனவும் தெரிவித்தது தயாரிப்பு நிறுவனம். இதனை ஏற்றுக்கொண்ட விநியோக நிறுவனம், உடனடியாகப் பணத்தைக் கொடுத்தால் வட்டி எதுவும் தேவையில்லை எனத் தெரிவித்தது. ஆனால் சொன்னபடி நவம்பர் 6ஆம் தேதி பணத்தைத் தராமல் நவம்பர் 23ஆம் தேதி ரூ.2 கோடி மட்டும் கொடுத்துவிட்டு, இரண்டு நாட்களில் மீதி ரூ.1 கோடியைத் தருவதாகத் தயாரிப்பு நிறுவனம் உத்திரவாதம் அளித்தது. அதனையும் விநியோகஸ்தர்கள் ஏற்றுகொண்ட நிலையில், சொன்னபடி நவம்பர் 26ஆம் தேதி ரூ.1 கோடி பணத்தைத் திரும்பத் தரவில்லை என்பதால் மன உளைச்சலுக்கு உள்ளானது விநியோக நிறுவனம்.

இந்நிலையில் படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டதால், வட்டி இழப்பை ஈடுகட்டும் பொருட்டு, பேசிய விலைக்கே படத்தை விநியோகம் செய்வதாகவும், ரூ.1 கோடி பணத்தை முன்பணமாக வைத்து கொள்ளுமாறும்

மீதித் தொகை ரூ.7 கோடியை பட வெளியீட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தருவதாகவும் விநியோக நிறுவனம் தயாரிப்பாளர்க்குக் கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்திற்கு பதில் வராததாலும், ரூ.1 கோடி பணத்தையும் தராததாலும் விநியோக நிறுவனம் டிசம்பர் 8ஆம் தேதி சென்னை உயர்நிதிமன்றத்தை அணுகி, காப்புரிமைச் சட்டப்படி தங்களது முன்பணம் தயாரிப்பாளர் வசம் உள்ளதால் படத்தின் உரிமை தங்களுக்கே சொந்தம் என்றும், பேசிய தொகையில் மீதமுள்ள ரூ.7 கோடியைப் பட வெளியீட்டிற்கு இரண்டு வாரங்களுக்கு முன் நீதிமன்றத்தில் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தயாரிப்பாளர் தரப்பை டிசம்பர் 15ஆம் தேதி ஆஜராகுமாறு கூறியது. ஆனால் தயாரிப்பு நிறுவனமோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கை டிசம்பர் 21ஆம் தேதிக்குத் தள்ளி வைத்த நீதிமன்றம், உரிய உத்தரவைப் பிறப்பிக்கும் எனக் கூறப்படுகிறது.

காப்புரிமைச் சட்டப்படி தற்போதைய நிலையில் ஐந்து ஏரியா விநியோக உரிமை ‘ஆரண்யா சினி கம்பைன்ஸ்’ வசம் உள்ளதால் மீடியேட்டர்களின் பேச்சை கேட்டு விநியோகஸ்தர்கள் யாரும் ஏமாறவேண்டாம் என விநியோக நிறுவனத் தரப்பு ஆட்கள் எச்சரிக்கிறார்கள்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT