நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா தற்போது படங்களில் இருக்கும் நகைச்சுவை பற்றியும், யோகி பாபு பற்றியும் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
80ஸ் மற்றும் 90ஸ் படங்கள் எல்லாம், குடும்பம், நகைச்சுவை, பாடல், எமோஷன் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். முழுப்படமும் காமெடியாக வெளிவந்து வெற்றிக்கண்ட படங்களும் ஏராளம். ஆனால் இப்போது மிகவும் அரிதாகத்தான் காமெடி படங்கள் வெளியாகின்றன. மேலும் இப்போது அதிக படங்களில் தனது காமெடியால் சிரிக்க வைப்பவர் யோகி பாபு. அப்போது ஒரு சந்தானம் என்பதுபோல், இப்போது ஒரு யோகிபாபு என்ற நிலைதான் உள்ளது. அதேபோல், கதாநாயகனாகவும் களமிறங்கி இருக்கிறார்.
சந்தானம், யோகி பாபுவுக்கு முன்னர் காமெடியனாக வலம் வந்தவர்தான் ரமேஷ் கண்ணா. இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, கே.எஸ்.ரவிக்குமாரின் பல படங்களுக்கு உதவி இயக்குநராகவும், கதையாசிரியராகவும் சினிமாத்துறையில் பணியாற்றியவர். பாண்டியராஜனின் உதவி இயக்குனராக திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய ரமேஷ் கண்ணா ஒரு படத்தை இயக்கியும் உள்ளார். அஜித், தேவையானி நடித்த தொடரும் என்ற படத்தை இயக்கினார். இது ஒரு மலையாள படத்தின் ரீமேக்காகும். தொடரும் படம் தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் காமெடியனாகவே தொடர்ந்து நடித்தார். குறிப்பாக விஜய், சூர்யா நடிப்பில் வெளியான ஃப்ரெண்ட்ஸ் படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சமீபக்காலமாக இவருக்கு சினிமா வாய்ப்புகள் வருவதில்லை.
அந்தவகையில் ரமேஷ் கண்ணா யோகிபாபு குறித்து பேசியதைப் பார்ப்போம்.
“இப்போது படங்களில் எல்லாம் காமெடி எங்க இருக்கு. கடுப்புதான் வருது. யோகி பாபு என்னமோ பஞ்ச் அடிக்கிறார். அது எல்லாம் காமெடி இல்லை.” என்று பேசியிருக்கிறார்.
இதுபோல் பலரும் கூறி கேட்டிருப்போம், மற்றவர்களை உருவக்கேலி அல்லது மற்றவர்களை மட்டம் தட்டி காமெடி செய்வது காமெடியே அல்ல. ஆனால், சமீபக்காலமாக அதுதான் நகைச்சுவை என்று பலர் செய்து வருகிறார்கள் என்று பழம்பெரும் நடிகர்கள் பலர் கூறியிருக்கின்றனர்.
ஆனால், பஞ்ச் என்ற வகையில் யார் மனதையும் புன்படுத்தாமல் சிரிக்கவைக்கும் யோகி பாபு எவ்வளவோ பரவாயில்லை என்றே ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.