Dabbawalas in Mumbai 
கலை / கலாச்சாரம்

125 வருட மும்பை டப்பாவாலாக்களின் நெட் வொர்க் - ஒரே ஒரு முறை மட்டுமே தவறு! இப்படியும் ஒரு அதிசயம்!

பிரபு சங்கர்

லஞ்ச் டயம் வந்தாச்சு, டப்பா வந்தாச்சா?

மும்பை நகரின் பாரம்பரியங்களில் ஒன்றாக, இன்றளவும் மாறாதிருப்பது டப்பாவாலாக்களின் சேவைதான்!

தம் அலுவலகங்களுக்குப் பக்கத்தில் பல ஹோட்டல்களும், உணவுக் கடைகளும் வந்துவிட்டாலும், பலர் தம் வீட்டு சாப்பாட்டை மட்டுமே மதிய வேளையில் ருசிப்பதை இன்றும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். தாத்தா, அப்பா வழி வந்து இப்போதைய மகனும் மேற்கொண்டிருக்கும் பழக்கம் இது!

சரி, இந்த வழக்கம் எப்போது ஆரம்பித்தது?

சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னால். 1890ம் ஆண்டு வங்கியில் பணிபுரிந்த பார்ஸி வகுப்பைச் சேர்ந்த ஒருவர் சுத்தம், சுகாதாரம், ஆசாரம் காரணமாக வெளி சாப்பாட்டைக் கொஞ்சமும் ஏற்காமல், வீட்டில் தாயார்/ மனைவி தயாரிக்கும் உணவுவகைகளை மட்டுமே உட்கொள்ளும் சம்பிரதாயத்தை மேற்கொண்டிருந்தார். ஆனால் அலுவலகப் பணியில் சேர்ந்துவிட்ட பிறகு, காலை, இரவு உணவை வீட்டில் பார்த்துக் கொள்ளலாம், மதிய உணவு? உடனே அவர் ஒரு யோசனை செய்தார். தன் வீட்டருகே தனக்கு உதவக் கூடிய ஒரு பையனைப் பணிக்கு அமர்த்தினார். அதாவது, அவருடைய வீட்டிலிருந்து, மதிய உணவு அடைத்த ஒரு டிபன் பாக்ஸை தினமும் அலுவலக உணவு வேளையின்போது அவன் கொண்டுவர வேண்டும். அலுவலர் சாப்பிட்டு முடித்தபின், அந்த டிபன் பாக்ஸைத் திரும்பத் தன் வீட்டில் கொண்டு சேர்க்க வேண்டும். இதற்கு மாதாந்திர ஊதியம் அவனுக்கு உண்டு.

பொதுவாக காலையிலேயே மதிய உணவைக் கட்டிக் கொண்டுவந்து, மதியம்வரை காத்திருந்து, பிறகு எடுத்து சாப்பிடும்போது அது ஆறி அவலாகிப் போயிருக்கும்; ருசியும் மாறியிருக்கும். ஆனால் மதிய உணவு நேரத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்னால் அவ்வாறு கொண்டு வரப்படும் உணவு மணம், சூடு, ருசி எல்லாம் கொண்டு, திருப்தியாக சாப்பிடும் உணர்வைத் தரும்.

இந்தப் பழக்கம் அலுவலகத்தில் பிறருக்கும் தொற்றிக் கொள்ள, இவ்வாறு சாப்பாடு கொண்டுவர வேண்டிய பையன்கள் அதிகம் தேவைப்பட்டார்கள். (இந்த ஏற்பாட்டால், காலையிலேயே எழுந்து கணவர்/தந்தை அலுவலகம் போவதற்கு முன்னால், பெண்கள் அரக்க பரக்க சமைத்து, டிபன் பாக்ஸில் போட்டுக் கொடுத்தனுப்புவதற்கு பதில், நிதானமாக சமைத்து டப்பாவில் போட்டு அனுப்பலாம், பிறகு நிம்மதியாக ஓய்வெடுக்கலாம்.)

இந்த சேவையில் ஈடுபட்டிருந்த மகாதேயோ ஹவாஜி பச்சே என்பவர், தத்தமது வீட்டிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றும் பல அலுவலர்களுக்கும் இந்தப் பணியை விஸ்தரிக்கத் திட்டமிட்டார். வேலை வாய்ப்பின்றி இருந்த இளைஞர்களையும், உடலுறுதி கொண்ட சற்றே வயதானோரையும் சேர்த்துக் கொண்டார். அவர்களுக்கு அடையாளமாக தொப்பி, வெள்ளை பைஜாமா என்று சீருடையையும் நிர்ணயித்தார்.

நாளாக, ஆக, டப்பாவாலாக்கள் சேவை அதிகரித்தது. இப்போது தினமும் 400000 டப்பாக்கள் அத்தனை வீடுகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டு குறிப்பிட்ட அலுவலகர்களுக்கு டப்பாவாலாக்களால் கொண்டு சேர்க்கப்படுகின்றன. கடந்த 125 ஆண்டுகளாக லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களில் ஒரே ஒருவருக்கு மட்டும் டிபன் பாக்ஸ் மாறிவிட்டது என்ற குறை ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அட, என்ன ஆச்சர்யம்!

இந்த ஒழுங்குக்கு முக்கிய காரணம், இந்தச் சேவையின் சட்ட திட்டங்களும், கட்டுப்பாடுகளும்தான். அதாவது ஒவ்வொரு டப்பாவாலாவுக்கும் ஒரு குறியீடு உண்டு. இவர் தினமும் சராசரியாக 24 டிபன் பெட்டிகளை வீடுகளிலிருந்து சேகரிக்கிறார். அவை ஒவ்வொன்றையும் தம்மிடமுள்ள ஒவ்வொரு டப்பாவிலும் போடுகிறார். இவருடைய அடுத்த வேலை அவற்றை குறிப்பிட்ட புறநகர் ரயில் நிலையத்தில் கொண்டு சேர்ப்பதுதான். இதற்கும் டப்பாவில் ஒரு குறியீடு உண்டு. உதாரணமாக VP என்றால், வில்லி பார்லே என்ற ரயில்வே நிலையம். அங்கே பிளாட்பாரத்தில் காத்துக் கொண்டிருக்கும் இந்த அமைப்பைச் சேர்ந்த குழுவினர் ரயில் நிலையம் வாரியாக அந்த டப்பாக்களை வகைப்படுத்துகிறார்கள். டப்பாக்களின் நடுவே ஓர் எண் குறியீடு இருக்கும். உதாரணமாக அது 3 என்றிருந்தால் அந்த டப்பாக்கள் சர்ச் கேட் ரயில் நிலையத்துப் போக வேண்டும் என்று அர்த்தம். டப்பாவாலாக்களில் ஒரு குழுவினர் இந்த டப்பாக்கள் எல்லாவற்றையும் டப்பாவின் வலது பக்கத்தில் உள்ள குறியீடுபடி (உதாரணமாக - 9 A 112) பிரித்து வைப்பார்கள். இதில் 9 என்பது நாரிமன் பாயின்ட் பகுதியைக் குறிக்கும். அடுத்ததான A, எந்த அலுவலகம், அடுத்தது எத்தனாவது மாடி என்பதைக் குறிக்கும்.

இந்த சங்கிலித் தொடர் சேவை, குறிப்பிட்ட அலுவலரிடம் நேரடியாக அவருடைய டிபன் பாக்ஸ் போய்ச் சேரும்வரை தொடரும்.

என்ன அற்புதமான நெட் வொர்க் பாருங்கள்!

வயிறு கடமுடா… இஞ்சிக் குழம்பு போதுமே!

சிறுகதை: தோல்வி!

இரவில் தாமதமாகத் தூங்கும் நபரா நீங்கள்? போச்சு!

Reading is Fun! 8 Useful Tips to Develop a Reading Habit

'இடி இடிக்குது, மின்னல் முழங்குது அவ பேரக் கேட்டா' - 'Nayanthara: Beyond the Fairy Tale'!

SCROLL FOR NEXT