Chopstick 
கலை / கலாச்சாரம்

2500 ஆண்டுகள் பழமையான பழக்கம் - சீனர்கள் பயன்படுத்தும் 'குவைட்சு' எனும் 'உண் குச்சிகள்'!

தேனி மு.சுப்பிரமணி

சீனாவில் மரபு வழியில் உணவு உண்ணப் பயன்படுத்தும் ஒரே நீளமுள்ள இரட்டைக் குச்சிகளை ‘உண் குச்சிகள்’ (chopsticks) என்கின்றனர். இக்குச்சிகள் சீனா மட்டுமின்றி, வியட்னாம், கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் வழக்கத்திலுள்ளது. சீனாவின் எல்லையை ஒட்டிய நேபாளம், திபெத் ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளிலும் இந்த உண் குச்சிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இக்குச்சிகளை மூங்கில், நெகிழி, மரம், அல்லது துரு பிடிக்காத இரும்பு, வெள்ளி போன்றவற்றில் செய்கின்றனர். அதிகமாகப் பயன்படுத்தமால், பொதுவாக கலைப் பொருள் போல பயன்படுத்த, பீங்கான், எலும்பு ஆகியவற்றைக் கொண்டு உண் குச்சியைத் தயாரித்து வைத்திருப்பதும் உண்டு.

சீனாவில் இந்த உண் குச்சிகளை ‘குவைட்சு’ எனக் குறிக்கின்றனர். இக்குச்சிகளைப் பயன்படுத்தி உணவை உண்ணும் பழக்கம் கி.மு. 500 ஆம் ஆண்டிலேயேத் தொடங்கி விட்டது என்கின்றனர். 2500 ஆண்டுகள் பழமையான இப்பழக்கம் எப்படித் தொடங்கியது என்பதற்கும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. 

அன்றைய காலத்தில், சீனர்கள் இறைச்சியை வேக வைக்க, நெருப்புக் கங்குகளைப் பயன்படுத்தினர். அதாவது, ஒரு அகலமான பாத்திரத்தில் மசால் தடவப்பட்ட இறைச்சித் துண்டுகளை வைத்துச் சுற்றிலும் நெருப்புக் கங்குகளை வைத்து விடுவார்கள். இறைச்சித் துண்டுகளை வெறுங்கையால் எடுத்தால் சுடுமென்பதால், இரு குச்சிகளை இடுக்கி போல் பயன்படுத்தி அவற்றை எடுத்துப் பரிமாறும் பாத்திரத்தில் வைத்துக் கொண்டனர். இறைச்சி நன்றாக வெந்துள்ளதா என்று சரி பார்க்க, அதைச் சமைப்பவர்கள் குச்சியில் பிடித்தபடியே கொஞ்சம் சுவைத்தனர். இந்தப் பழக்கமே பிறகு சிறிய அளவிலான 'குவைட்சு' குச்சிகளாக மாறி, சாப்பாட்டு மேசைக்கு வந்துவிட்டன என்கின்றனர்.

கி.மு 500 ஆம் ஆண்டில் வாழ்ந்த மாமேதையான கன்பூசியஸ், வாழ்க்கையைப் பொருளுடையதாக எப்படி வாழ வேண்டும்? என்று சீனர்களுக்குச் சொல்லித் தந்தவர். அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட சீனர்கள், உணவு மேசையில் கத்தியைக் கொண்டு இறைச்சியை வெட்டிச் சாப்பிடும் பழைய முறையைக் கைவிட்ட நிலையில், அவரேக் குச்சிகளைக் கொண்டு உணவு உண்ணச் சீனர்களை வலியுறுத்தினார் என்றும் சொல்கின்றனர். 

சீன மொழியில் குவைட்சு என்பது இரண்டு சொற்களின் சேர்க்கையில் உருவானது. சீன மொழியில் குவை என்றால், 'விரைவான' என்று பொருள். 'சு' என்றால் மூங்கில் அல்லது மகன் என்பது பொருள். புதிதாகத் திருமணமானவர்களை விருந்துக்கு அழைத்தால், அவர்களுக்கு ஒரு இணை குவைட்சு குச்சிகளைக் கொடுத்தனுப்புவது வழக்கம் இருந்து வந்தது. இதற்குக் காரணம், புதிய மணமக்களுக்கு இந்தக் குச்சிகளை பரிசாக அளித்தால் ‘விரைவில் குழந்தை’ பிறக்கும் என்ற நம்பிக்கையாக இருந்தது.

இந்த உணவுக் குச்சிகள் சீனாவின் பன்பாட்டுச் சின்னமாக உள்ளன. இந்த உணவுக் குச்சிகளைப் பயன்படுத்த, சீனக் குழந்தைகளுக்கு அவர்கள் எழுதப் படிக்க கற்கும் முன்பே கற்றுத் தரப்படுகிறது. இந்தக் குச்சிகளை இவ்வாறு பயன்படுத்த வேண்டும், இவ்வாறு செய்யக்கூடாது என்பது போன்ற பண்பாட்டு வழக்கம் சீனாவில் இருக்கிறது. 

உணவுக் குச்சியை வலது கையில் பயன்படுத்த வேண்டும், உணவுக் குச்சியை கடிக்கக்கூடாது, அதை உணவில் குத்தி வைக்கக் கூடாது, உண்ணும் போது அந்தக் குச்சிகளை எதிரில் இருப்பவரை நோக்கி காட்டிப் பேசுவது மரியாதையானதல்ல என்பது போன்ற பழக்க வழங்கங்களும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT