உலகில் பிரமிக்க வைக்கும் சிலைகள் பல உள்ளன. ஒவ்வொன்றும் மனிதனின் படைப்பாற்றல், பொறியியல் திறன் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் ஆகியவற்றின் சான்றாக கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றன. அவற்றில் உலகின் மிகவும் உயர்ந்த ஐந்து சிலைகளின் தனித்துவமான அம்சங்கள் மற்றும் கட்டுமானத்தின் வரலாற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
இந்தியாவின் குஜராத்தில் அமைந்துள்ள ஒற்றுமை சிலை, 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் உலகின் மிக உயரமான சிலை ஆகும். இந்த பிரமாண்ட சிலை, இந்தியாவின் சுதந்திர இயக்கத்தின் முக்கிய நபரும், நாட்டின் முதல் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலை சித்தரிக்கிறது. அக்டோபர் 31, 2018 அன்று திறக்கப்பட்ட இந்த சிலை இந்திய சிற்பி ராம் வி. சுதாரால் வடிவமைக்கப்பட்டு லார்சன் & டூப்ரோவால்(Larsen & Toubro) கட்டப்பட்டது. இந்தியாவை ஒன்றிணைத்ததில் படேலின் பங்கை இந்தச் சிலை அடையாளப்படுத்துகிறது. தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நமக்கு நினைவூட்டுகிறது.
சீனாவின் ஹெனானில்(Henan) உள்ள லூஷானில்(Lushan) அமைந்துள்ள ஸ்பிரிங் டெம்பிள் புத்தர் சிலை, 128 மீட்டர் (420 அடி) அளவில் உலகின் இரண்டாவது உயரமான சிலை ஆகும். 2008 இல் கட்டி முடிக்கப்பட்ட இந்தச் சிலை வைரோகனா புத்தரைக் (Vairocana Buddha) குறிக்கிறது. இந்தச் சிலை 20 மீட்டர் (66 அடி) தாமரை சிம்மாசனத்தின் மேல் நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிம்மாசனத்தின் உயரத்தையும் சேர்த்தால் இதன் மொத்த உயரம் 148 மீட்டர் (486 அடி) ஆக உள்ளது. இது புத்த மதத்தை மேம்படுத்துவதற்காகவும், இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் கட்டப்பட்டது.
மியான்மரின் மோனிவாவுக்கு(Monywa) அருகில், கட்டகன் டவுங்கில்(Khatakan Taung) உள்ள லேக்யுன் செக்கியா சிலை 115.8 மீட்டர் (380 அடி) உயரத்தில் 2008 இல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கவுதம புத்தரின் சிலைக்கு அருகிலேயே, சாய்ந்த நிலையில் இன்னொரு புத்தர் சிலையும் உள்ளது. புத்தரின் போதனைகளை மதிக்கவும், பௌத்தர்களின் வழிபாட்டுத் தலமாகவும், தியானத்திற்காகவும் லாக்யுன் சேக்யா கட்டப்பட்டுள்ளது.
விஸ்வஸ் ஸ்வரூபம்(Vishwas Swaroopam) என்றும் அழைக்கப்படும் நம்பிக்கையின் சிலை, இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள நாததுவாராவில்(Nathdwara) அமைந்துள்ளது. 106 மீட்டர் (348 அடி) உயரத்தில் நிற்கும் இந்த சிவன் சிலை 2020 இல் கட்டி முடிக்கப்பட்டது. இது உலகின் மிக உயரமான சிவன் சிலை. நம்பிக்கையுடன் நிறைந்த பக்தியின் அடையாளமாக கட்டப்பட்ட இச்சிலையானது, யாத்ரீகர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்ப்பதோடு, இப்பகுதியில் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துகிறது.
ஜப்பானின் இபராக்கி(Ibaraki) மாகாணத்தின் உஷிகுவில்(Ushiku) உள்ள உஷிகு டைபுட்சு சிலை 100 மீட்டர் (330 அடி) உயரத்தில் உள்ளது. அமிதாபா புத்தரின்(Amitabha Buddha) இந்த வெண்கலச் சிலை 1993 இல் கட்டி முடிக்கப்பட்டது மற்றும் 2008 ஆம் ஆண்டு வரை உலகின் மிக உயரமான சிலையாக இருந்தது. பௌத்தத்தின் ஜோடோ ஷின்ஷு(Jodo Shinshu) பிரிவை நிறுவிய ஷின்ரானின்(Shinran) பிறப்பை இந்த சிலை நினைவுபடுத்துகிறது. இது ஒரு வழிபாட்டுத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது, பார்வையாளர்கள் புத்த மத போதனைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், அமைதியான சூழலை அனுபவிக்கவும் வாய்ப்பளிக்கிறது.