உலக அளவில் ஹிமாலயன் ஹெர்ம்ஸ் கைப்பைகள் மிகவும் பிரபலமானவை மற்றும் விலை உயர்ந்தவை. இந்த அரிதான கைப்பைகள் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்களிடம் மட்டுமே இருக்கின்றன என்பது இதன் தனிச்சிறப்பு. மே 31, 2023 அன்று ஹாங்காங்கில் நடைபெற்ற ஏலத்தில் 18 கேரட் 25 வைரங்கள் பதிக்கப்பட்ட ஹிமாலயன் ஹெர்ம்ஸ் கைப்பை சுமார் 24 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உலக சாதனையை முறியடித்தது.
இதனுடைய சிறப்புகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. பிரபலங்களிடையே இந்தக் கைப்பை வைத்திருப்பது அந்தஸ்து மற்றும் செல்வாக்கின் அடையாளமாகக் கருதப்படுகிறது. உலகின் பணக்கார பெண்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சில ஹிமாலயன் ஹெர்ம்ஸ் கைப்பைகள் வைத்திருக்கிறார். பாலிவுட் பிரபலங்களில் தீபிகா படுகோனே, சோனம் கபூர் போன்றோர் இந்தக் கைப்பை வைத்திருக்கிறார்கள்.
2. இந்தப் பை எளிதில் கிடைக்காது. சிறந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறது. இவை முதலைத் தோலினால் செய்யப்படுவதால் ஒவ்வொரு வருடமும் இரண்டு பைகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்பது இதன் தனிச்சிறப்பு. இந்தப் பைகளுக்கு கைகளினால் சாயம் பூசப்படுகின்றன.
3. இந்தப் பைகளை வாங்குவதற்கு நீண்ட காலம் பிரபலங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. காரணம், அதன் கவர்ச்சியும் தனித்துவமும்தான்.
4. இதன் மதிப்பு அதிகமாக இருப்பதால் இதை ஒரு சிறந்த முதலீடாக வாங்குபவர்கள் நினைக்கிறார்கள்.
5. ஒவ்வொரு பையும் திறமையான கைவினைஞர்களால் மிகச்சிறந்த பொருட்களைப் பயன்படுத்தி, விதிவிலக்கான தரத்தை உறுதிசெய்யும் வகையில் உருவாக்கப்பட்டு, அற்புதமான கைவினை பொருளாக உரு மாறுகிறது.
6. இந்தப் பையை வைத்திருப்பது வெற்றி மற்றும் சாதனைக்கான அடையாளமாகக் கருதப்படுகிறது.
7. இந்தப் பை காலம் கடந்தும் நிற்கிறது. இதன் வடிவமைப்பு மற்றும் செய்தொழில் நேர்த்தி போன்றவற்றால் இது காலம் கடந்து நிற்பதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளைக் கடந்தும் இது நாகரிகத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது.
8. இந்தப் பைக்கு மறு விற்பனை சந்தை பிரகாசமாக உள்ளது. இரண்டாம் முறை விற்கப்படும்போது, சில மாடல் கைப்பைகள் அதிக விலையை பெறுகின்றன.
9. பல ஃபேஷன் ஆர்வலர்களுக்கு இந்த ஹிமாலயன் பை வைத்திருப்பது வாழ்நாள் கனவு. அவர்களின் சேமிப்பில் இது ஒரு மதிப்புமிக்க கலைப் பொக்கிஷமாகும்.