இன்றைய கட்டடக்கலையில் முக்கோணவியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. கட்டடங்களின் அஸ்திவாரத்தின் கோணங்கள் முதல் வானளாவிய கட்டடங்களின் உயரம், நீளம், சரிவு போன்றவற்றைச் சரியான முறையில் கணித்து கட்டடத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதில், முக்கோணவியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. சைன், காஸ், டேன்ஜன்ட் போன்ற பல்வேறு சாம்யங்களை உடைய முக்கோணவியல் கட்டடத்துறையில் பெரும் பங்காற்றி வருகின்றன. 4 அல்லது 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த, ‘சூரிய சித்தாந்தா’ என்ற சமஸ்கிருத நூலில், சைன் சாம்யத்தைக் குறித்து முதன் முதலில் வருகிறது. ஆர்யபட்டர் இதனைக் குறித்து பின்னர், விரிவாக எழுதியுள்ளார். முக்கோணவியல் சூரியன், சந்திரன் போன்றவற்றின் உயரம், சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் போன்ற பலவற்றைக் கணக்கிட உதவப் பயன்பட்டது.
தமிழ்நாட்டில் 600 ஆண்டுகளுக்கு முன்பே முக்கோணவியல் அடிப்படையில் ஒரு பிரம்மாண்ட ஊஞ்சல் மண்டபம் கட்டப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகிலேயே அத்தகையதொரு முக்கோணவியல் அடிப்படை மண்டபம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது என்பது ஆச்சரியமான விஷயம்.
தமிழ்நாட்டில் கடலூருக்கு அருகில் குறிஞ்சிப்பாடியில் வெங்கடாம்பேட்டை என்ற ஒரு ஊர் உள்ளது. இது கி.பி. 1464ம் ஆண்டு செஞ்சியை ஆண்ட வேங்கடப்ப நாயக்கர், அவரது சகோதரி வேங்கடம்மாள் நினைவாக உருவாக்கிய ஊர். வேங்கடம்மாள்பேட்டை என்பது மருவி இப்போது வெங்கடாம்பேட்டை என்றாகிவிட்ட இந்த ஊரில் அவர் வேணுகோபால சுவாமி கோயிலையும் கட்டினார்.
வேணுகோபால சுவாமி கோயிலுக்கு முன்பாக நாம் குறிப்பிட்ட இந்த பிரம்மாண்ட ஊஞ்சல் மண்டபம் உள்ளது. இந்த ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள தூண்கள் 50 அடி உயரம் உடையவை. ஆனால், இவற்றுக்கு அஸ்திவாரம் கிடையாது. இந்தத் தூண்கள் இவற்றின் அடிப்பாகத்தில் குறுக்குத் தூண்களால் இணைக்கப்படவும் இல்லை. ஆனால், இவை எவ்வாறு எந்த ஒரு அஸ்திவாரமும் இன்றி நிற்கின்றன என்ற எண்ணம் நமக்கு எழலாம். தூண்களுக்கு மேலாக குறுக்குத் தூண்களும் பலகைகளும் கொண்டு மொத்த மண்டபத்தின் எடையும் முக்கோணவியலின்படி சமன் செய்யப்படுவதால் ஊஞ்சல் மண்டபத்தால் அஸ்திவாரம் இன்றி நிற்க முடிகிறது.
முக்கோணவியலின்படி, இந்த மண்டபத்தின் தூண்களின் நீளம், உயரம், கோணம் போன்றவை தீர்மானிக்கப்பட்டுள்ளன. இத்தகைய மண்டப வடிவமைப்பு வேறு எங்கும் கிடையாது என்பது இந்த மண்டபத்தின் அருமையான கட்டடக் கலைக்கு சான்று. வெங்கடாம்பேட்டை கோயிலுக்கு அருகே 60 கிலோ மீட்டர் சுற்றளவில் வேறு எங்கும் மலைகள் இல்லாதபோதும் எங்கிருந்து இந்தக் கற்கள் கொண்டுவரப்பட்டு இந்த மண்டபம் வடிவமைக்கப்பட்டது என்பதும் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
கடலூருக்கு அருகேயுள்ள வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி கோயிலுக்குச் சென்று, இந்த பிரம்மாண்ட ஊஞ்சல் மண்டபத்தைக் காணத் தவறாதீர்கள். 600 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த கட்டடக்கலையின் முக்கோணவியல் பயன்பாட்டைக் கண்டு மகிழுங்கள்.