ஆடி மாதம் என்றாலே வீட்டு உபயோகப் பொருட்களுக்கு சிறப்புத் தள்ளுபடியும் கூடவே வந்துவிடும். தற்போது அனைத்து மாதங்களிலும் ஏதோ ஒரு தள்ளுபடி சலுகைகளை வணிகர்கள் ஏற்படுத்தினாலும் தள்ளுபடிகளிலே மிகவும் விசேஷமாக உள்ளது ஆடி தள்ளுபடி மட்டுமே. பெண்கள் முதல் ஆண்கள் வரை ஆடி தள்ளுபடியில் பொருட்கள் வாங்குவதற்கு என்று பணத்தை சேமித்து வைத்திருப்பது வழக்கமாகி விட்டது. ஆண்டிற்கு 12 மாதங்கள் இருக்கும் நிலையில் ஆடி மாதத்தில் மட்டும் ஏன் தள்ளுபடி வந்தது? அதற்கான காரணம் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கோடைக் காலம் முடிந்து வரும் ஆடி மாதம் மிகவும் விசேஷமானது எனலாம். காரணம், நாம் உயிர் வாழத் தேவையான உணவுகளைத் தரும் விவசாயிகளுக்கான மாதமாக ஆடி திகழ்கிறது. ‘ஆடிப் பட்டம் தேடி விதை என்ற மொழியைக் கேட்டிருப்போம். நெல், கரும்பு போன்றவற்றை பயிரிடுவதற்காக இந்த ஆடியில் உழவு கூலிக்காக தங்கள் கையிருப்பாக வைத்திருந்த மொத்தப் பணமும் செலவழிந்த நிலையில், ஆடி மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் பண்டிகைகளுக்கு குடும்பத்தினருக்கு ஆடைகள் மற்றும் பொருள்களை வாங்க வணிகர்களால் ஒரு கட்டத்தில் ஏற்படுத்தப்பட்டதே இந்த ஆடி தள்ளுபடியின் வரலாறு என்பது பலரின் கருத்து. விவசாயிகளின் நலனுக்காக ஏற்பட்ட ஆடி தள்ளுபடி இன்று அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக மாறி விட்டது.
மேலும், ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நடைபெறுவதில்லை. இதனால் துணிமணிகள், மளிகைகள், வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை மந்தமாக இருக்கும். இதைக் காரணத்தில் கொண்டும் தங்களிடம் அதுவரை இருக்கும் சரக்குகளை விற்றுவிட்டு பண்டிகை நேரத்தில் புது சரக்குகளை வாங்கி விற்பனை செய்யவும் வணிகர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் யுக்தியாகவும் இந்த ஆடி தள்ளுபடியைக் கருதலாம்.
ஆனால், ஆடி தள்ளுபடி எந்தளவு உபயோகமாக உள்ளதோ அந்தளவுக்கு உபத்திரவம் தருவதையும் மறுக்க முடியாது. பொதுவாக, பெண்களுக்கு எதை வாங்கினாலும் வெகு விரைவில் திருப்தி ஆகாது. இவர்கள் ஒவ்வொரு கடையாகத் தேடி அலைந்து நாள் முழுவதும் நேரத்தை வீணாக்கி இறுதியில் ஏதோ ஒரு குறையுள்ள பொருட்களை வாங்கி வந்து வேதனைப்படும் நிகழ்வுகளும் உண்டு. சிலர் தேவையற்ற பொருட்களுக்காக காசை செலவழித்து விட்டு வீட்டுக்கு வந்து புலம்புவதும் நடைபெறும். இதில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் கணவர்மார்களாகத்தான் இருப்பார்கள்.
இனி, ஆடி தள்ளுபடி விற்பனையில் எச்சரிக்கையாக இருக்க சில விஷயங்களைப் பார்க்கலாம். விலை போகாத தேங்கிய சரக்குதான் ஆடியில் விற்பனை செய்யப்படுமா? என்ற சந்தேகம் உண்டு. தள்ளுபடியின் துவக்கக் காலத்தில் இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ஆடி விற்பனை. ஆனால், காலப்போக்கில் அதிகரித்துவிட்ட போட்டிகள் காரணமாக கடைக்காரர்கள் லாப நோக்கைக் குறைத்துப் பொருள்களை விற்பனை செய்வதால் தள்ளுபடி விலைக்கு தரமான பொருள்களும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது எனலாம்.
சரி, எப்படிப்பட்ட தள்ளுபடி பொருள்களை இந்த ஆடியில் வாங்கலாம்? தள்ளுபடியின் பெரும்பாலான பொருள்கள் சிறிய அளவிலாவது சேதமடைந்திருக்கும் அல்லது தரத்தில் சிறிய குறை இருக்கும். எனவே, எந்தப் பொருளாக இருந்தாலும் சரி அதன் சேதம் எந்தளவு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல், பிரபல பிராண்டட் நிறுவனங்கள் குறிப்பிட்ட மாதத்தில் சில சலுகைகளை அறிவிக்கும். அப்போது இந்நிறுவனத் தயாரிப்புகளுக்குக் கிடைக்கும் சலுகை வாடிக்கையாளர்களுக்கு லாபகரமாக அமைகிறது.
அப்படியென்றால் எதில் எச்சரிக்கை வேண்டும் என்றால், ஆடி தள்ளுபடியில் மட்டுமே. ‘நோ எக்ஸ்சேன்ஜ்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கும், அதாவது வாங்கும் பொருள்களுக்கு பில் அடித்து விட்டால் வேறு மாற்றி வாங்க முடியாது. எனவே, அதுபோன்ற பொருட்களை வாங்கும் முன் பல தடவை யோசிப்பதுடன் அதை பரிசோதித்து வாங்கினால் ஆடி தள்ளுபடியும் லாபமாகவே அமையும்.