புதுக்கோட்டை மாவட்டம், சிவகங்கை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 1700 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள 78 கிராமங்கள் மொத்தமாய் ‘செட்டிநாடு’ என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய பகுதிகளில் வாழும் செட்டியார்கள் ‘நகரத்தார்’ என்று அழைக்கப்படுகிறார்கள். நகரங்களில் வாழ்ந்ததால் இவர்கள் நகரத்தார் என்று அழைக்கப்படுகிறார்கள்.
செட்டிநாட்டில் நகரத்தார்களின் பராமரிப்பில் இளையாத்தங்குடிக் கோயில், மாற்றூர்க் கோயில், வயிரவன்பட்டிக் கோயில், நேமம் கோயில், இலுப்பைக் கோயில், சூரைக்குடிக் கோயில், வேலங்குடிக் கோயில், இரணியூர்க் கோயில், பிள்ளையார்பட்டிக் கோயில் என ஒன்பது கோயில்கள் உள்ளன. இவை அனைத்தும் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன என்பது சிறப்பு. இந்த ஒன்பது நகரத்தார் கோயில்களுமே தமிழர்களின் சிற்பக்கலைத் திறமைக்கு சான்றாக விளங்குகின்றன.
நகரத்தார் தங்கள் வீட்டை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு முன்பகுதி, மையப்பகுதி, பின்பகுதி என்ற மூன்று முக்கியமான பகுதிகளாக அமைக்கிறார்கள். இதில் முன்பகுதியில் முன்அறை, முற்றம், தாழ்வாரம் போன்றவற்றை ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். மையப்பகுதியில் கல்யாண கொட்டகை, போஜன சாலை, வெளியறை, உள்ளறை, முற்றம் ஆகிய பகுதிகளை சடங்கு சம்பிரதாயங்கள் போன்றவற்றை நடத்தப் பயன்படுத்துகிறார்கள். பின்பகுதியில் அமைந்துள்ள முற்றம், தாழ்வாரம், களஞ்சியம், சமையல் அறை, பின்கட்டு, கேணி போன்றவற்றை பெண்கள் பயன்படுத்துகிறார்கள்.
பெரும்பாலான நகரத்தார் வசதி படைத்தவர்கள். எனவே அவர்கள் தங்களுடைய வீடுகளில் ‘பந்திஅறை’ என்ற ஒரு அறையை விருந்து நடத்த அமைத்திருக்கிறார்கள். இதில் ஒரே நேரத்தில் ஐம்பது முதல் நூறு பேர்கள் வரை தாராளமாக அமர்ந்து சாப்பிடலாம். நகரத்தார்கள் தெருக்களை மிகவும் திட்டமிட்டு விசாலமாகவும் நேராகவும் அமைத்திருக்கிறார்கள்.
தமிழர்களின் கட்டடக்கலை அறிவை அறிந்துகொள்ள தமிழ்நாட்டில் பல சான்றுகள் காணப்படுகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் காரைக்குடி நகரத்தார்களின் வீடுகள். காரைக்குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு காண்போரை அதிசய வைக்கிறது. நகரத்தார்களின் வீடுகள் ஒவ்வொன்றும் ஓர் அதிசயம் என்றே சொல்லலாம். பெரும்பாலும் தேக்கு மரங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. காரைக்குடிக்குச் சென்றால் ஒவ்வொரு வீடும் நம்மை அதிசயப்பட வைக்கின்றன. இந்த தெருவிலிருந்து அந்த தெரு வரைக்கும் என்பார்களே, அதுபோலத்தான் ஒவ்வொரு வீடும் இந்த தெருவிலிருந்து அந்த தெருவரைக்கும் விசாலமாகப் பரந்து காணப்படுகிறது. ஒவ்வொரு வீட்டின் பின்னால் அமைக்கப்பட்டுள்ள அவுட் அவுசும் பிரம்மாண்டமாக காணப்படுகிறது. அப்படி என்றால் முதன்மை வீடு எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று கற்பனை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் கானாடுகாத்தான் என்னும் ஊரில் அமைந்துள்ள கானாடுகாத்தான் அரண்மனை உலகப்புகழ் பெற்ற ஒரு அரண்மனையாகும். செட்டிநாடு பகுதியில் அமைந்துள்ள ஆத்தங்குடி அன்று முதல் இன்று வரை டைல்ஸ்களுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. செட்டிநாட்டு வீடுகளில் ஆத்தங்குடி டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளன.
நகரத்தார் வணிகம் மற்றும் கட்டடக்கலையில் மட்டுமின்றி சமையலிலும் கைதேர்ந்தவர்களாக விளங்குகிறார்கள். செட்டிநாடு சமையல் என்பது உலகபிரசித்தம். செட்டிநாட்டவர்கள் சைவம், அசைவம் என இரண்டு வகையான சமையல்களிலும் சிறந்து விளங்குகிறார்கள். செட்டிநாடு பகுதிகளில் கவுனி அரிசி மற்றும் வேங்கரிசி மாவு என இரண்டும் பிரபலமாக விளங்குகிறது. திருநெல்வேலி அல்வா போல செட்டிநாட்டில் செய்யப்படும் சீப்பு சீடை மிகவும் புகழ்பெற்றது. குழிப்பணியாரம், அப்பம், கொழுக்கட்டை, உருளை வறுவல், முறுக்கு, சீடை வகைகளும் மிகவும் பிரசித்தி பெற்றவை.
உலகின் பல பகுதிகளிலும் அமைந்துள்ள தலைசிறந்த கல்லூரிகளில் ஆர்க்கிடெக்சர் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் பலர் செட்டிநாடு அரண்மனைகள் மற்றும் கட்டடங்களைப் பற்றி கேள்விப்பட்டு நேரில் வருகை தந்து அவற்றை ஆராய்ந்து தங்கள் அறிவை விசாலமாக்கிக் கொண்டு திரும்புகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயமாகும்.