Kalari Kalai 
கலை / கலாச்சாரம்

'பரசுராமர்' தோற்றுவித்த 'களரி கலை'யின் பிரமிப்பூட்டும் வரலாறு!

பிரபு சங்கர்

உடலில் மறைந்திருக்கும் முக்கியமான வர்மங்களை கணித்து அந்த இடத்தில் எதிரியை தாக்கி நிலை குலைய செய்யும் தாக்குதல் மற்றும் தற்காப்புக் கலைதான் களரி. இந்தக் கலையைத் தோற்றுவித்தவர் மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரான பரசுராமர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இன்னும் தெரிந்துகொள்ளவோம்...

பரசுராமர் காலத்தில், வட இந்தியப் பகுதியில், க்ஷத்ரிய மன்னர்களால் அந்தணர்கள் பெரிதும் பாதிப்புற்றனர். இவர்களைப் பாதுகாக்கவும் க்ஷத்திரியர்களை அழிக்கவும் பரசுராமர் சபதம் பூண்டார். 21 தலைமுறை க்ஷத்ரியர்களை கொன்றழித்தார். இதற்கிடையில் வன்கொடுமையால் நிலமிழந்த அந்தணர்கள், அங்கிருந்து புலம் பெயர்ந்து தென் பகுதிக்கு வந்தனர். அவர்களுக்குப் பாதுகாவலராக வந்த பரசுராமர், கடலுக்கடியில் மூழ்கியிருந்த நிலத்தை தன்னுடைய சக்திவாய்ந்த கோடாரியால் வெளிக்கொண்டு வந்தார். அந்நிலத்தில் அந்தணர்கள் குடியேறினர். பரசுராமர் உருவாக்கிய நிலம் என்பதால் அந்நிலம் பரசுராம க்ஷேத்திரம் எனப்பட்டது. அதுதான் இப்போதைய கேரளம்.

பொதுவாகவே சாந்த குணமுள்ள, அமைதியானவர்களான அந்தணர்கள் தம்மைத் தற்காத்துக் கொள்ள, போர்ப் பயிற்சிகளை அளித்தார் பரசுராமர். அவற்றில் முக்கியமானது களரி என்ற தற்காப்பு-தாக்குதல் கலை. 

அகநானூறு, புறநானூறு பாடல்களில் களரி குறித்த விவரம் உள்ளது.  சங்ககால மன்னர்களின் படைவீரர்களுக்கு களரி பயிற்சி தரப்பட்டுள்ளது. 

பண்டைக் காலத்தில் களரி பயிற்சி சாலைகளுக்குத் தலைமை ஏற்று பயிற்றுவித்தவர்களை பட்டத்ரி என்றும், மாணவர்களை சட்டர்கள் என்றும் அழைத்தனர். இந்த சாலைகளுக்கு அரசர்கள் நிலங்களை தானமாக வழங்கினர். ஆனால், அதற்கு ஈடாக திறமையான சட்டர்களை பயிற்றுவித்து, போர்க்காலத்தில் சேவை செய்ய அனுப்பி வைக்க வேண்டும் என்பது நிபந்தனை. கி.பி 7ம் நூற்றாண்டில் கேரள சிற்றரசர்கள் தம்முடைய வழக்கமான போர்ப் படைகள் தவிர, களரியில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்ட தனிப் படைகளையும் உருவாக்கிக் கொண்டனர். 

தற்காப்பு மற்றும் தாக்குதல் உத்திகள் மட்டுமின்றி மருத்துவ சிகிச்சை முறைகளும் களரியில் அடங்கும். மெய்யுழிச்சல் எனப்படும் பிரத்யேக மசாஜிங் முறை விசேடமானது. இளவயதைக் கடந்து களரி பயிற்சியில் சேரும் வீரர்களின் உடலில் நெகிழ்வு தன்மையைக் கொண்டுவர விசேட தைலங்களை உடலில் பூசி, பயிற்சியாளர் தம் கால்களால் அவர்களின் உடலை நீவி விட்டு தசைகளை இளக்கமடைய செய்வார். இதுவே மெய்யுழிச்சல். நரம்பு தளர்ச்சி கண்ட நோயாளிகளுக்கும் இந்த சிகிச்சை முறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

களரி கலை வடக்கன் களரி, தெற்கன் களரி என இரு வகைப்படும்.

வடக்கன் களரி பரசுராமர் அருளியது. இந்தப் பிரிவில் பயிற்சி பெறுபவர்கள் வாள் வீச்சு, உறுமி எனப்படும் சுருள் வாள் வீச்சிலும் அதிகத் திறமை பெறுவார்கள். போர்வீரர்களாகத் திகழ விரும்புவோருக்கு வடக்கன் முறையே போதிக்கப்பட்டது. 

தெற்கன் முறை, தமிழ்க் குறுமுனியான அகத்தியரால் உருவாக்கப்பட்டது. இவரே சிலம்பத்தையும், வர்மத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். வெறுங்கை அல்லது அங்கைப்பயட்டு எனப்படும் ஆயுதமில்லாத தாக்குதல்கள், இம்முறையில் குறிப்பிடத்தக்கவை. படுவர்மம், தொடுவர்மம், நோக்குவர்மம், தட்டுவர்மம், நுனிவர்மம் மெய்தீண்டா வர்மம் முதலிய வர்ம தாக்குதல்கள், இதில் சிறப்பம்சங்கள். தெற்கன் முறை தனி மனிதரின் தற்காப்பு கலையாக உள்ளது.

போதிதர்மர் தெற்கன் களரி முறையில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தார். சீனதேசம் சென்று அவர் அதைப் பயிற்றுவிக்க, அடுத்து, குங் ஃபூ, கராத்தே, ஜியூ-ஜுட்ஸு ஆகிய களரி பிரிவுகள் அங்கே உருவாயின. 

களரிப் போர்க்கலை பரவலாவதை பிரிட்டிஷ் அரசு அச்சத்துடன் நோக்கியது. கி.பி 1792 ல் ஏற்பட்ட சீரங்கப்பட்டினம் உடன்படிக்கையின்படி, வடக்கு கேரளமான மலபார் பகுதி, ஆங்கிலேய ஆட்சிக்குட்பட்டது. இதனை எதிர்த்து மலபாரில், பழசி ராஜா தலைமையில், நாயர் சாதி வீரர்கள் மற்றும் குறிச்சி இனமக்கள் இணைந்து புரட்சி செய்தனர். மிரண்டு போன ஆங்கிலேயர்கள், ஆயுதங்களை எடுத்துச் செல்ல தடை விதித்தனர்; அதோடு மலபார் பகுதி முழுவதிலுமிருந்து  ஆயுதங்களை அப்புறப்படுத்தவும் முயன்றனர். 

1804, பிப்ரவரி 20 அன்று, ஆயுதங்களை வைத்திருப்போர் மற்றும் பயன்படுத்துவோரைக் கைது செய்து நாடு கடத்தும் சட்டமும் உருவானது. தொடர்ந்து பழசி ராஜாவைச் சார்ந்த போராளிகளின் வீடுகளிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே நிலைமை பின்னாட்களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த வேலுத்தம்பியின் புரட்சியின் போதும் அரங்கேறியது. அடுத்தடுத்து இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படவே களரிப்பயட்டு மெல்ல மெல்ல புகழ் மங்கத் தொடங்கியது. எனினும் தன்னலம் கருதாத சில பட்டத்ரிகள், களரி கலையை அழியவிட விரும்பவில்லை. ரகசியமாக ஆங்கிலேயரின் கழுகுப் பார்வைக்கு எட்டாத பகுதிகளில் சில ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு களரியை போதித்தனர்.

ஆனாலும் போர்க்கலை என்ற அடையாளத்தை விலக்கிவிட்டு தற்காப்புக் கலையாகவும், கதகளி போன்ற நடன வகைகளுக்கான பயிற்சியாகவும் களரி பரிணமிக்க ஆரம்பித்தது. 

உலக அரங்கில் இன்றைய தினத்தில் களரியானது தற்காப்புக்கலையாக, உடற்பயிற்சியாக பல்வேறுபட்ட மக்களிடையே பரவிக்கொண்டுதான் இருக்கிறது.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT